பூட்டிய வீட்டுக்கு வெளியில் படுத்துக் கிடந்தேன்! - எஸ். ராமகிருஷ்ணன்
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுடன் எழுத்தாளரும் நடிகருமான ஷாஜி சென் நடத்திய நேர்காணலின் சிறு பகுதி:
“எல்லா மொழிகளிலும் உள்ள எழுத்தாளர்களைத் தேடிப்போய் பார்த்திருக்கிறேன். பக்கத்தில் போய் பார்க்கையில் இவர்களின் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளி இருந்தது. அது பொருளாதாரத்தால், வாழ்க்கைச் சூழலால், மனநிலையால் இருந்திருக்கலாம்.
எழுதுகிற நேரத்தைத் தவிர்த்து எல்லா எழுத்தாளரும் சாமானிய மனிதர்கள்தான். அவர்களுக்கு வாழ்க்கையினுடைய எல்லா கஷ்டங்களும் இருக்கும். அதை எப்படி எதிர்கொண்டு, வாழ்க்கையின் உச்சத்தைத் தொடுகிறார்கள் என்பதில்தான் அவர்கள் எழுத்தாளர்களாக உள்ளனர். அவர்கள் அதிசயமான ஆட்கள் இல்லை; அதிசயமாக்கிக் கொள்கிறார்கள்.
ஒரு நண்பரை பார்ப்பதற்காக கர்நாடகாவில் உள்ள ஒரு ஊருக்கு, அந்த ஊரின் கடைசிப் பேருந்தில் போகிறேன். அந்த ஊருக்கு இரண்டு பேருந்து நிறுத்தம். நான் முதல் நிறுத்தத்தில் இறங்கிவிட்டேன். நான் பார்க்கச்சென்ற நண்பர், இரண்டாவது நிறுத்தத்தில் அதே பேருந்தில் ஏறி, என்னைத் தேடி நகரத்துக்குப் போய்விட்டார்.
அந்த ஊரில் எனக்கு யாரையும் தெரியாது. அவர் ஒருவரை மட்டும்தான் தெரியும். மொழியும் தெரியாது. அவரின் வீட்டைக் கண்டுபிடித்துப் போய்விட்டேன். வீட்டில் அவருடைய மனைவி மட்டும்தான் இருந்தார். ”கணவர் வந்தால்தான் கதவைத் திறப்பேன்” என்று சொல்லிவிட்டார். என்னைக் கூட்டி வரத்தான் அவருடைய கணவர் போயிருக்கிறார். ’என்னை வெளியே தங்க வைக்கணுமா… அல்லது உள்ளே தங்க வைக்கணுமா’ என்ற நெருக்கடி அந்தப் பெண்ணுக்கு. அவர் ஜன்னல் வழியாகவே என்னிடம் பேசுகிறார். ”பரவயில்ல மா… நான் பாத்துக்குறேன்… நீ தூங்குமா” என்று சொல்லிவிட்டேன்.
அந்த அடைத்து சாத்தப்பட்ட ஜன்னலுக்கு வெளியே உட்கார்ந்திருக்கேன். “எங்கோ ஒரு கிராமத்துல… யாரோ ஒரு வீட்டு வாசல… ஏன் இப்படி நைட்ல உட்கார்ந்திருக்கோம். உண்மையிலேயே எனக்கு என்ன தேவை? எழுத்தாளர் ஆக வேண்டும் என்றால் கதைதானே எழுதணும்… ஏன் இப்படி எங்கேயே உட்கார்ந்திருக்கோம்…” என என் மீதே எனக்கு பயங்கர கோபம் வந்தது. எனக்கு கோபம் வருவதை நினைத்து, என் மீதே எனக்கு ஆச்சரியம். அந்த கோபம் வந்ததற்குக் காரணம். நாள் முழுக்கப் பயணம் செய்துவந்ததால்தான் வந்தது என நினைத்துக் கொண்டு, பக்கத்தில் ஏதாவது குளிப்பதற்கு இடம் இருக்கிறதா என்று பார்த்தேன். கொஞ்ச தூரத்தில் ஒரு அடிபம்பு இருந்தது. அதில் தண்ணீர் அடித்து குளித்துவிட்டு, எடுத்துச்சென்ற துணியை மாற்றிக்கொண்டு, அந்த வீட்டு வாசலின் படியிலேயே படுத்துக்கொண்டேன்.
நல்லா தூங்கிட்டேன். விடியற்காலையில் முதல் பேருந்துக்கு வந்த நண்பர், என்னைத் தாண்டிப் போய், கதவைத் திறந்து, மனைவியை எழுப்பி, காபி ரெடி பண்ணிவிட்டு என்னை எழுப்புகிறார். அப்போது என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே. “என்ன ப்ரதர் எங்க வீட்டுக்கு வந்துட்டு இப்படி படுக்கணும்… உள்ளேயாவது படுத்திருக்கலாமே.” என்று கேட்கிறார்.
பேசும்போது அந்த அம்மா, ”எதிரிலேயே இரு நூறு பேர் படுக்குற அளவுக்கு ஒரு பெரிய மடம் இருக்கு, அங்கு போய் படுத்திருக்கலாமே” என்கிறார். அவசரத்தில் அந்தம்மாவுக்கு சொல்லத் தெரியல.
பக்கத்தில்தான் எனக்குத் தேவையானது இருக்கிறது. ஆனால் நான் தான் தெரிந்துகொள்ளமல் இருந்திருக்கிறேன்.
நெருக்கடி உங்களை என்ன செய்யும் என்று தெரியாது. நெருக்கடியைச் சந்திக்கும்போது ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டேன். மனிதர்கள் எல்லா நேரத்திலும் தங்களை ஒரு வெட்டவெளியோடுதான் இணைத்துக்கொள்கிறார்கள். குறைந்த தேவைகள் போதுமானவைதான்.
அவர்கள் எனக்கு காலையில் சாப்பாடு கொடுத்துவிட்டு, அந்த குற்ற உணர்வுக்காக என்னை மூன்று நாள்களுக்கு எங்கெங்கோ அழைத்துச் சென்றார்கள். என்னைச் சரிப்படுத்தப் பார்த்தார்கள். அவர்கள் ஏன் அதைச் செய்யணும்? நான் என்ன நினைக்கிறேன் என்றால், உலகத்துடன் நீங்கள் தொடர்பை ஏற்படுத்த ஏற்படுத்த, அது உங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கிக்கொண்டே இருக்கும். நாம்தான் என்ன செய்கிறோம் என்றால், நம்மைப் பத்தி நிறைய முன்முடிவுகளோடு இருக்கோம். இதற்கு ஒரு அர்த்தமும் கிடையாது.” என்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்.