Writer Vittal Rao
எழுத்தாளர் விட்டல் ராவ்

எழுதிய பிறகு நான் திரும்பிப் பார்ப்பதே இல்லை: எழுத்தாளர் விட்டல் ராவ்!

Published on

எழுத்துலகில் 50 ஆண்டுகள் கடந்து எழுதி வருபவர் விட்டல் ராவ். சிறுகதைகள், நாவல்கள்,  திரைப்படம்,ஓவியம், நாடகம், கலைகள் சார்ந்த ஆவணப்பதிவுகளாகக் கட்டுரைகள் என்று பல்வேறு வகைமைகளில் எழுதி வருபவர். நுண்கலைகள் குறித்து விரிவாகவும் ஆழமாகவும் எழுதியவர். இதுவரை 12 நாவல்கள், 140 சிறுகதைகள் அடங்கிய 5 சிறுகதைத் தொகுதிகள் மற்றும் 12 கட்டுரைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. சாகித்ய அகாடமிக்காக சிறுகதைத் தொகுப்பொன்றை மொழி பெயர்த்திருக்கிறார்.1976-ல் வெளிவந்த "போக்கிடம்" நாவல் இலக்கியச் சிந்தனை விருது பெற்றது. இவர் ஓர் ஓவியர் மட்டுமல்ல புகைப்படக் கலைஞரும் கூட. அண்மையில் 'விளக்கு' விருது அவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. விருது வாழ்த்துக்களுடன் அவருடன் பேசியபோது!

Q

கதிர்வீச்சுத்துறை பணி, கவின்கலைக் கல்லூரியில் படிப்பு,தொலைபேசித் துறையில் வேலை என வேறுபட்ட அனுபவங்களைக் கொண்டுள்ளீர்கள். இந்த மாறுதல்கள் எப்படி நிகழ்ந்தன?

A

இதையெல்லாம் மாறுதல் என்று சொல்வதை விட இடப்பெயர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு காலக்கட்டத்தில் எது வசதியாக, சௌகரியமாக இருக்கிறதோ அதை நோக்கிச் செல்லும்படியான வாழ்க்கைச் சூழல் இருந்தது. அப்படித்தான் ஒவ்வொன்றையும் நான் கடந்து வந்தேன். ஒன்றிலிருந்து மற்றொன்று இன்னொன்று என்று மாறிக்கொண்டிருந்தேன். அப்படி நான் முதலில் கதிர்வீச்சு துறையில் வேலை பார்த்தேன். அந்த வேலையை ரேடியோகிராபர் என்பார்கள். முதலில் அப்படி ஒரு எக்ஸ்ரே டெக்னீசியனாக  நான் சென்னை மண்ணடி சிந்தி மருத்துவமனையில் பகுதி நேரமாக வேலை பார்த்தேன். அதற்கு ஏன் வந்தேன் என்றால் என் வாழ்க்கையில் நடந்த ஒரு மோசமான அனுபவம் தான் காரணம். என் சிறு வயதில் நான் டைபாய்டு, நிமோனியாவால் பாதிக்கப்பட்டு ஒன்றரை மாதம் அரசு மருத்துவமனையில் இருந்தேன். அப்போது நோயை உறுதி செய்ய இவ்வளவாக கருவிகள் இல்லை. எங்கள்  குடும்பமும் சிரமத்திலிருந்தது. அம்மா வீட்டு வேலைக்குச் செல்ல வேண்டும். அப்பா ஓய்வு பெற்று விட்டார், சம்பளம் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கவனிப்பாரற்று நான் மருத்துவமனையில் கிடந்தேன். என்னைப் போல ஏராளமான பேர் அப்படி அங்கே சிகிச்சை பெற்று வந்தார்கள். ஒவ்வொருவரும் சிரமத்தை அனுபவித்தார்கள். மருத்துவமனையிலோ சரியாக உதவி செய்யக் கூட ஆட்கள் இல்லை. அப்போது அந்த வயதில் எனக்குத் தோன்றியது இப்படி உதவி செய்ய ஆள் இல்லாமல் இருக்கிறார்களே இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். மருத்துவ உதவி போல ஏதாவது செய்ய வேண்டும் என்று அப்போது நினைத்தேன். அப்போது மேல் நர்சிங் ஆடர்லி என்று ஒன்று இருந்தது. அதாவது ஆண்கள் நர்சிங் வேலையில் ஈடுபடலாம். பிறகு அது நிறுத்தப்பட்டு விட்டது. இப்போது தனியார் மருத்துவமனையில் மட்டும் சில இடங்களில் ஆண் நர்ஸ் உள்ளார்கள். அதற்கு நான் முயற்சி செய்தேன். ஆனால் கிடைக்கவில்லை. அப்போதுதான் இந்த டெக்னீசியன் பயிற்சி பற்றி ஆங்கிலத்தில் விளம்பரம் வந்தது. எண்ணூறு ரூபாய் கட்ட வேண்டும். என்னிடம் அதற்கு அப்போது பத்து காசு கூட இல்லை. ஒரு நல்ல மனம் உள்ள ஒரு டாக்டர் எனக்காக உதவினார். அப்படித்தான் ஸ்டான்லியில் அந்தப் பயிற்சியைப் பெற்றேன். சிந்தி மருத்துவமனை அனுபவத்துடன், அரசு மருத்துவமனையில்  வேலை வாங்கி விடலாம் என்று பெரிய கனவுடன் இருந்தேன். அதற்காக அலைந்து திரிந்தேன். சென்னையில் டிஎம்எஸ் என்று இருக்கக்கூடிய டைரக்டரேட் ஆஃப் மெடிக்கல் சர்வீஸ் ஆபீஸ் போய் அலைந்தேன். வேலை கிடைக்கவில்லை. நான் அலைந்ததைப் பார்த்துவிட்டு ஒருவர் கூறியபடி அப்போது மதுரையில் ஒரு லீவ் வேகன்ஸி கிடைத்தது. அங்கே நான்கு மாதங்கள் வேலை பார்த்தேன். பிறகு ஊட்டி குன்னூர், சேலம் என்று சில மாதங்கள் வேலை செய்தேன். இதற்கிடையே கிளார்க் ஆகக் கூட வேலை பார்த்தேன். ஏன் சில காலம் ஓர் ஆசிரியர் பள்ளியில் ஆசிரியராகக் கூட வேலை பார்த்தேன்.

எனக்கு ரயில்வேயில் சர்வீஸ் கமிஷன் எழுதி பாஸ் செய்து டிடிஆர் என்று சொல்லப்படும் டிக்கெட் பரிசோதகர் வேலை  கூட கிடைத்தது. நல்ல வாய்ப்பாக இருந்தும் மும்பைக்குச் செல்ல வேண்டும் என்பதால் நான்தான் போகவில்லை.

பிறகுதான் தொலைபேசித் துறையில் வேலை கிடைத்தது. அது எனது பழைய கலை ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வாய்ப்பாக இருந்தது. ஆக இப்படி மாறுபட்ட இடங்களில் வேலை பார்த்ததெல்லாம் கால ஓட்டத்தில் நான் எதிர்கொண்ட வாய்ப்புகள் என்று தான் சொல்ல வேண்டும்.

Q

ஓவியர், எழுத்தாளரான உங்களுக்குள்ளிருந்து எந்தக் கலைஞர் முதலில் வெளிப்பட்டார் ?

A

என்னிடமிருந்து முதலில் வெளிவந்தவன் ஓவியன் தான்.எனக்கு ஆரம்பத்தில் ஓவியத்தின் மீதுதான் அபரிமித ஆர்வம் இருந்தது. ஏதாவது வரைந்து கொண்டே இருப்பேன். ஓவியத்தை முறைப்படி கற்க வேண்டும் என்று ஆசை. அந்தச் சமயத்தில் எனக்கு ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் சேர்ந்து விட வேண்டும் என்பது ஒரு கனவு போல் வளர்ந்து இருந்தது. அப்போது நான் சென்னையில் ஹாரிஸ் சாலையில் பத்தாம் நம்பர் வீட்டில் தங்கியிருந்தேன். நான் மாடியில்  கேன்வாஸில் வரைந்து கொண்டிருப்பேன். எதிரே பாலம் தாண்டி மறுபக்கத்தில் மொட்டை மாடியில் இன்னொருவர் நான் பார்க்கிற போதெல்லாம் எழுதிக் கொண்டிருப்பார். அவர்தான் புகழ்பெற்ற கலை இலக்கிய விமர்சகர்  எம். கோவிந்தன். அவரது மனைவி ஒரு டாக்டர். ஒரு முறை எனக்கு உடல்நிலை சரியில்லாத போது அவரைச் சந்திக்கச் சென்றேன். நான் வரைவதை அவர் பார்த்திருக்க வேண்டும். அப்போது என்னைப் பார்த்து நீங்கள் ஓவியரா? என்றதுடன், தனது கணவரையும் அறிமுகப்படுத்தினார். எம்.கோவிந்தன் என்னுடன் சினேகமாகப் பேசினார். டாக்டர் பத்மாவதி வீட்டில் ஒரு தேநீர் விருந்து நடைபெற்றது. அப்போது அங்கே ஓவியக் கல்லூரி முதல்வர் கே. சி. எஸ்.பணிக்கர் வந்திருந்தார். கோவிந்தன் அவரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்.

தொலைபேசித் துறையில் பணிபுரிந்தாலும் முறைப்படி ஓவியம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற என்னுடைய ஓவிய ஆர்வத்தைப் பணிக்கர் புரிந்து கொண்டார்.  நான் வரைந்ததை எல்லாம் எடுத்துக் கொண்டு அடுத்த நாள் வரச் சொன்னார். அப்படியே சென்றேன். எனது ஓவியங்களை எல்லாம் பார்த்துவிட்டு மறு நாளே என்னைச் சேர்த்துக்கொண்டார். அப்படித்தான் நான் அங்கே சேர்ந்தேன். மாலை நேரத்தில் ஓவியப் பயிற்சி என்பதற்கு அந்த ஓவியக் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லாரும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் செய்து வந்தார்கள். எனவே நான் படித்த காலத்தோடு அந்த சான்றிதழ் பயிற்சி முடிவுக்கு வந்து விட்டது. முன்பு ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் என்ற என்ற பெயரில் இருந்தது, பிறகு காலேஜ் ஆப் ஆர்ட்ஸ் என்று  கல்லூரியாக மாறியது.

விட்டல் ராவ் வரைந்த ஓவியம்
விட்டல் ராவ் வரைந்த ஓவியம்
Q

ஓவியராக உங்களது அனுபவங்கள்?

A

மனம் போன போக்கில் ஏதேதோ வரைந்து கொண்டிருந்த எனக்கு ஓவியக் கல்லூரி போன பிறகுதான் ஒரு திறப்பு கிடைத்தது போல் உணர்ந்தேன். ஏராளமாகக் கற்றுக் கொண்டேன்.

அப்போது ராணி பூவையா,  அந்தோணி தாஸ், சுரேந்திரநாத், சந்தானராஜ், கன்னியப்பன் போன்றவர்கள் அங்கே ஒவ்வொரு துறையிலும் கோலோச்சினார்கள். அச்சுதன் கூடலூர், தனுஷ்கோடி என்று புகழ்பெற்ற ஓவியர்கள் இருந்தார்கள். நிறைய சொல்லிக் கொடுத்தார்கள். அங்கே இரண்டு ஆண்டுகள் படிப்பு முடிந்தது.

அப்படிப்பட்ட ஆரோக்கியமான  சூழலில் தான் நான் சேர்ந்து படித்தேன். படிக்கும்போதே ஓவியக்கண்காட்சி ஆர்வம் வந்துவிட்டது. படிப்புக்குப் பிறகு நாங்கள் நண்பர்களுடன் இணைந்து மும்பை ஹைதராபாத்,கல்கத்தா, பெங்களூர், மைசூர் என்று ஏராளமான இடங்களுக்குச் சென்று ஓவியக் கண்காட்சிகள் நடத்தினோம். ஒருமுறை மும்பை ஜஹாங்கீர் ஆர்ட் கேலரியில் ஆறு நாள் கண்காட்சி நடத்தினோம்.எங்களுக்கு அங்கே அறை எடுத்து தங்க வசதி இல்லை. நாங்கள் புத்தகங்களைத் தலைக்குத் தலையணை மாதிரி வைத்துக் கொண்டு பிளாட்பாரத்தில் படுத்துக் கிடந்தோம் .அந்த கேலரியின் காவல்காரர் எங்களைப் பற்றி விசாரித்தார் எத்தனை நாள் தங்க வேண்டும் என்றார். மீதியுள்ள ஐந்து நாட்கள் தங்கி இருக்க வேண்டியதைக் கூறினோம். அவர் எங்களை உள்ளே வந்து படுக்க அனுமதித்தார். இப்படி எல்லாம் நாங்கள் கஷ்டப்பட்டு கண்காட்சிகள் நடத்தினோம். நாங்கள் எல்லாம் இணைந்து மெட்ராஸ் ஆர்ட் கிளப் என்று சென்னையில் இயங்கினோம்.இங்கேயும் நிறைய கண்காட்சிகள் நடத்தினோம்.ஓவியத்திலிருந்து எழுத்துத் துறைக்கு வந்த பிறகும் என்னுள் ஓவியன் இருந்து கொண்டே இருப்பான்.

Q

ஓவியர் எப்போது எழுத்தாளர் ஆனார் ?

A

நான் முன்பே கூறியபடி அறிமுகமான அந்த  விமர்சகர் எம். கோவிந்தன்  இரவு 10 மணிக்கு என்னை அழைப்பார். அப்போது நாங்கள் இருவரும் மெரினா கடற்கரைக்குச் செல்வோம். கடற்கரை சென்று கடல் அலையை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்போம் .இரண்டு மணி நேரமாக பேசவே மாட்டோம். பேசக்கூடாது என்பார். விரிந்து பரந்த கடலை, ஆர்ப்பரிக்கும் அதன் அலைகளை,அதன் கரை தெரியாத அந்த பிரம்மாண்டத்தை, இந்தப் பிரபஞ்சத்தின் விசாலத்தை உற்று நோக்க வேண்டும் என்பார். திரும்பி வரும் வழியில் தான் பேசுவோம். இப்படி இரவு 12 மணி வரைக்கும் பேசிக் கொண்டே இருப்போம்.

அப்போது என்னென்ன படித்திருக்கிறாய் என்றார். தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறைய நாவல்கள் கதைகள் என்று சொன்னேன். ஆங்கிலம் கிடக்கட்டும் தமிழில் யார் யார் எழுதியது என்றார். க.நா.சு. கு.அழகிரிசாமி, சி.சு செல்லப்பா என்று நான் ஒரு பட்டியல் போட்டேன். சமகாலத்தில் நவீன எழுத்து என்று  யாருடையதைப் படித்தாய் என்றார். நான் ஒன்றும் புரியாமல் விழித்தேன். ஏனென்றால் நான் முந்தைய கால இலக்கியங்களைப் படித்து வந்தேன். 'கோணல்கள் ' படித்ததுண்டா என்றார். இல்லை என்றேன். சா.கந்தசாமி, ராமகிருஷ்ணன் (க்ரியா ), ம. ராஜாராம், நா. கிருஷ்ணமூர்த்தி என்ற நான்கு பேரால் உருவான அந்தச் சிறுகதைத் தொகுப்பைப் படிக்கக் கொடுத்தார். அதன் பிறகுதான் நவீன இலக்கியத்தின் மீது  எனது பார்வை திரும்பியது.

சமகாலத்தில் என்று நான் ஜெயகாந்தனைப் படிக்க ஆரம்பித்தேன். அவர் என்னைப் பெரிதும் பாதித்தார். அவரது எழுத்தில் ஆனந்த விகடனில் தொடராக வருவதைப் படித்துவிட்டு அவரது எழுத்தின் மீது எனக்கு மயக்கம் வந்தது. எழுதத் தோன்றியது. உடனே எழுத ஆரம்பித்தேன். படித்துப் பார்த்தபோது அது நன்றாக இல்லை. அவரது பாதிப்பில் இருந்தது போல இருந்தது .பிறகு யோசித்துப் பார்த்தபோது. நம் வாழ்க்கையில் ஏதேதோ நடந்திருக்கிறது. நாமாக நம் அனுபவங்களை வைத்து ஏன் எழுதக்கூடாது? ஜெயகாந்தனின்  பாதிப்பு என் எழுத்தில்  ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டேன். இப்போதும் எப்போதும் நான் சொல்வேன் எல்லாருடைய வாழ்க்கையிலும் கதைகள் உண்டு. ஒவ்வொருவரிடம் ஒரு சிறப்பான நாவல் இருக்கும்.

பிறகு தான் தீபம் நா.பார்த்தசாரதியின் தொடர்பு கிடைத்தது.தீபம் இதழுக்குக் கதை ஒன்றை அனுப்பினேன். எப்போதும் அவர்கள் கதையை அப்படியே போட்டு விட மாட்டார்கள், திருத்தங்கள் சொல்லி மாற்றச் சொல்வார்கள். ஒருமுறை அப்படித் திருப்பிக் கொடுத்த கதையை நான் வாங்கியபோது இதை அப்படியே விட்டு விடாதீர்கள் இது தீபத்தில் பிரசுரமாகா விட்டாலும் , வேறு எதற்காவது கூட அனுப்பலாம் அங்கே பிரசுரமாக வாய்ப்பு உண்டு என்றார் நா.பா. அப்படி நான் அனுப்பிய கதை ஆனந்த விகடனில்  பிரசுரமானது. தீபம் நிராகரித்த கதை என்றாலும் பெரிய பத்திரிகையான ஆனந்த விகடனில் முதல் கதை வந்ததற்கு வாழ்த்துக்கள் என்றார் நா.பா. அந்த ஆண்டு 1967. அதன் பிறகு நிறைய சிறுகதைகள்  எழுதினேன். விகடனில் திரும்பி வந்தது, தீபத்தில் வெளி வரும். இரண்டிலும் நிராகரிக்கப்பட்டுத் திரும்பி வந்தது  தினமணிக் கதிரில் வரும் அல்லது கணையாழியில் பிரசுரமாகும்.இப்படித் தொடர்ந்து பிரசுரம் செய்ய ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒரு இலக்கிய தர்மம் இருக்கும் அது ஒவ்வொன்றுக்கும் மாறுபடும்.

Q

ஆனந்த விகடனில் முதல் சிறுகதை வெளியான அனுபவம்?

A

அப்போதெல்லாம்  அலுவலகம் செல்பவர்களின் விருப்பமாக குமுதம், விகடன் படிப்பது என்று இருந்தது.இந்த இரண்டு பத்திரிகைகள் தான் அவர்களது உலகமாக இருந்தது. நான் எழுதிய அந்த முதல் சிறுகதை 'வாழ்க்கைக்கு  ஓர் அர்த்தம் ' விகடனில் வந்தது.ஓவியர் மாயா படம் வரைந்து இருந்தார். அப்போது என் அலுவலகம் முழுதும் அது செய்தியாகப் பரவி விட்டது. என்னிடம் பேசிய பத்து பேரில் ஆறு பேர் கேட்ட கேள்வி ''இந்த கதைக்கு எவ்வளவு கொடுப்பான்?''என்பதுதான். பிறகு ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு என் 'தமிழகக் கோட்டைகள்' நூலுக்கு திருப்பூரில் எனக்கு ஒரு விருது கொடுத்தார்கள், ஒரு விருதுத் தொகையும் கொடுத்தார்கள். என்னிடம் எதிர்ப்பட்டவர்கள் கேட்ட கேள்வி ''எவ்வளவு தொகை?" என்பது தான். அந்தக் கேள்வி இன்றும் தொடர்கிறது. அந்தத் தொகை சொல்லிக் கொள்கிற மாதிரியும் இருக்காது என்பது அவர்களுக்குத் தெரியாது. இந்தத் தொகைக்காக அலைகிறவர்கள் எழுத்தாளர்கள்  அல்ல என்பதும் அவர்களுக்குத் தெரியாது.

எங்கள் அலுவலகத்தில் அந்த விகடன் சிறுகதையைக் கேள்விப்பட்டு பல பேர் வந்தாலும் அப்பொழுது இரண்டு பேர் மட்டுமே படித்திருந்தார்கள். ஒரு பெண்மணி வந்தார். நானும் கதை எழுதுவேன் நன்றாக இருக்கிறதா என்று பார்த்துச் சொல் முடியுமா? என்றார். நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? எப்படி பத்திரிகைக்கு எழுத வேண்டும்? எப்படி அனுப்ப வேண்டும்  என்று சொல்ல முடியுமா என்றெல்லாம்  கேட்டார்.  கதையைப் படிக்காமலேயே பேசியவர்கள் தான் அதிகம் அதனால் பிறகெல்லாம் நான் என் கதைகள் பிரசுரமானால் வெளியே சொல்வதில்லை.

Vittal rao
விட்டல் ராவ்
Q

தினமணிக்கதிரில் முதல் நாவலான  'இன்னொரு தாஜ்மஹால் ' எழுதிய அனுபவம் பற்றி?

A

நான் ஒரு வீடு கட்டினேன் அரசிடம் கடன் வாங்கி மிகவும் சிரமப்பட்டுப் போராடி அந்த வீட்டைக் கட்டிக் கொண்டிருந்தேன். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து ரசித்து கட்டிக் கொண்டிருந்தேன். கண் முன்னே அது ஒரு கனவு வளர்வது போல் இருந்தது. எப்போதும் அது பற்றியே  சிந்தனையும் பேச்சும் என்று இருந்தேன். அப்போது ஒருவர் என்னைக் கேலியாக என்ன பெரிய தாஜ்மஹாலா கட்டுகிறீர்கள் ? என்றார். ஆமாம் எனக்கு இது தாஜ்மஹால் தான் என்றேன். அப்படி வந்ததுதான் 'இன்னொரு தாஜ்மஹால் 'நாவல்.

Q

சென்னை வாழ்க்கை பற்றியும் நகரைப் பற்றியும் நிறைய பதிவுகள்… காலவெளி, நிலநடுக்கோடு, காம்ரேடுகள் போன்ற நாவல்களில் உள்ளன. அதேபோல் சேலம் நகரைப் பற்றியும் ஓர் அன்னாடுகாச்சியின் சேலம் என கட்டுரைநூல் எழுதி இருக்கிறீர்கள். நகரங்கள் உங்கள் எழுத்தைப் பாதித்த விதம் குறித்து சொல்ல முடியுமா?

A

கிராமங்கள் என்றால் குறிப்பிட்ட மனிதர்கள் குறிப்பிட்ட அனுபவங்கள் என்று ஒரு  சிறிய வட்டத்திற்குள் இருப்பது போல் தோன்றும். ஆனால்  நகரங்கள் என்கிற போது அது தினந்தோறும் மாறிக்கொண்டே இருக்கும். சில நாட்கள் கழித்து நகரப் பகுதியைப் போய் பார்த்தால் அடையாளம் மாறி இருக்கும். அந்த அளவுக்கு மாற்றங்கள் நிகழ்வதுண்டு. அதேபோல் மனிதர்களும் புதிது புதிதாக வந்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் சார்ந்த பிரச்சினைகள் வாழ்க்கை எல்லாமே அன்றாடம் மாறுபவை,உற்று நோக்க ஏராளமான விஷயங்கள் கிடைக்கும்.

நாங்கள்  ஒரு சிறிய ஊராக இருந்தபோது எடப்பாடியில் கொஞ்ச நாள்கள் வசித்தோம். அந்த எடப்பாடி இப்போது பெரிதாக வளர்ந்து விட்டது. இப்படி  மாநகரங்கள் நகரங்களில் ஏராளமான தகவல்கள் ஒளிந்துள்ளன. உற்று நோக்கினால் ஏராளமான விஷயங்கள், கதைக் கருக்கள் கிடைக்கும். உலகமயமாக்கலின் விளைவை அதன் மாற்றங்களை தாக்கங்களை  நகரங்களில் ஏராளம் பார்க்கலாம்.

Q

'வண்ண முகங்கள்' நாடகக் கலைஞர்களின் வாழ்க்கையைப் பற்றி பேசியது. அதற்கான அனுபவம் எப்படி? அதில் வரும் குப்பி வீரண்ணா தியேட்டர் எத்தனை ஆண்டு காலம் அனுபவம்?

A

எனது அக்கா சாந்தம்மாள் 25 ஆண்டுகளாக அந்தக் குப்பி வீரண்ணா நாடகக் கம்பெனி கம்பெனியில் நடித்து வந்தார். அவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார. எனது  தமக்கையின் வாழ்க்கையைத் தழுவி அவரது நாடக அனுபவங்களை வைத்து  எழுதியது தான் 'வண்ண முகங்கள்' நாவல்.

எனது அக்கா ஒரு நாடகக் கலைஞர் மட்டுமல்ல அவர் திரைப்படங்களிலும்  நடித்துள்ளார். மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் எல்லாம் நடித்துள்ளார். அந்த குப்பி வீரண்ணா நாடகக் கம்பெனியில் என் அக்கா நடித்து வந்தார். நான் தொலைபேசியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அந்தக் கம்பெனி நடத்தும் நாடகம் எங்கு நடந்தாலும் சென்று விட வேண்டும் என நினைப்பேன். ஏனென்றால் அவ்வளவு பிரம்மாண்டமாக அவ்வளவு திட்டமிடலோடு நடக்கும். நான் விடுப்பு போட்டு விட்டு 15 நாட்கள் கூட அந்த நாடகக் குழுக்களோடு தங்கி இருக்கிறேன். நேரில் பார்த்தபோது அது தனிப்பட்ட ஓர் உலகம் இயங்குவதாகத் தோன்றும்.

அந்த நாடகக் கம்பெனியில் காட்சி எந்த அளவுக்கு பிரமாண்டமாக இருக்கும் என்பதை இப்போது உங்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. ஏனென்றால் குருஷேத்திரம் போரில்,அர்ஜுனனும் கண்ணனும் பேசிக் கொள்வது என்கிற காட்சியில் நாடக மேடையில் இரண்டு யானைகளில் வந்து பேசிக் கொள்வார்கள். இந்த இரண்டு யானைகள் மீது அமர்ந்திருக்கும் போது  அவர்களுக்குள் விவாதம் நடக்கும். இப்படிப்பட்ட பிரம்மாண்டத்தை வேறு நாடக மேடையில் எங்கேயாவது பார்த்ததுண்டா? அந்த யானைகள், அதற்கான ஒத்திகை என்று சில மாதங்கள் முன் தயாரிப்பு வேலைகள் இருக்கும். கண்ணன் ரதத்தில் வந்தால் நிஜமான வெள்ளைக் குதிரைகள் வரும். இதெல்லாம் நான் கண்டு பிரமித்த பிரம்மாண்டங்கள். அங்குள்ள ஓர் ஓவியரைச் சந்தித்தேன். அவர்தான்  சித்தலிங்கம் ஆச்சார். அவரது  பணிகளைப் பார்த்து வியந்து போனேன்.

Q

தமிழ் நாடகம் நலிவுற்றதற்கு காரணம் என்ன?

A

அதை முன்னெடுக்க ஆளில்லாதது ஒரு காரணம். ஆனால் மற்ற மொழிகளில் எல்லாம் நாடகங்கள் சிறப்பாகவே நடைபெற்று வருகின்றன. மும்பை, கல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரில் எல்லாம் நாடகங்கள் நடைபெற்று வருகின்றன. பெங்களூரில் 'ரங்க சங்கரா' என்ற அரங்கம் உள்ளது. அது சங்கர்நாக்கின் மனைவியும் நாடக நடிகையும் திரைப்பட நடிகையுமான அருந்ததிநாக் முயற்சியில் உருவாக்கப்பட்டது. இன்றும்  அரங்கு நிறைந்த ஹவுஸ்புல் காட்சிகளாக அங்கே நாடகங்கள் நடக்கின்றன. முன்பதிவு செய்யாதவர்களுக்கு டிக்கெட் கிடைக்காது என்ற நிலை உள்ளது. அந்த அளவிற்கு வெற்றிகரமாக நடத்துகிறார்கள். தமிழ்நாடு என்கிற போது திரைப்படத்துக்கு முன்னுரிமை கொடுத்ததால் நாடகம் காணாமல் போய்விட்டது.தமிழில் தான் நாடகங்களுக்கு இந்த நலிவுற்ற நிலை இருக்கிறது. மராத்தியில், பெங்காலியில், கன்னடத்தில் மிக நன்றாக இருக்கிறது. டில்லியில் கூட ஆங்கில , உருது நாடகங்கள் நல்ல முறையில் அரங்கேற்றப்படுகின்றன. நான் சொன்ன இந்த மொழிகளில் எல்லாம் முன்பதிவு செய்யாமல் போனால்  இடம் கிடைக்காது என்கிற அளவிற்கு இன்றும் நல்ல வரவேற்போடு நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழில் திரைப்படம் வந்தது, நாடகங்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது. தமிழில் நடிப்பவர்கள் எல்லாம் நாடகப் பாதிப்பில் இருந்து இன்னும் மாறவில்லை.சினிமாவில் உள்ள நாடகத்தனம் சினிமாவில் இருந்து வெளியேற வேண்டும்.

நஸ்ருதீன் ஷா இந்தியாவிலேயே மிகச் சிறந்த நடிகர். அவர் நடித்த இரண்டு ஆங்கில நாடகங்கள் பார்த்தேன்.அற்புதமாக இருந்தன. தமிழில் இப்படி நிறைய செய்யலாம். நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு அவகாசமும் ஆர்வமும் இருக்க வேண்டும்: சில தியாகங்கள் செய்ய வேண்டும். போனால் போகிறது என்று தைரியமாக இறங்க வேண்டும்.இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும். எதுவுமே இல்லையே என்று நாம் வருந்துவதை விட வருவார்கள் செய்வார்கள் என்று நம்புவோம்.

Q

இலக்கிய செயல்பாடுகளும் இலக்கியவாதிக்குத் தேவை என்பது ஒரு தரப்பு. படைப்பது மட்டுமே நம் வேலை என்பது இன்னொரு தரப்பு. நீங்கள் எந்த தரப்பு ?

A

இலக்கிய செயல்பாடுகளும் தேவை தான். நான் நான் ஒரு இடதுசாரி சிந்தனை சார்புள்ளவன். எனவே அது சார்ந்த இலக்கிய அமைப்புகளில் பங்கெடுப்பதும் செயல்படுவதும் உண்டு. இது தவிர இலக்கியம் அல்லாத பல்வேறு போராட்டங்களிலும் நான் ஈடுபட்டு இருக்கிறேன்.

vittal rao
விட்டல் ராவ்
Q

உங்கள் கதைகளில் உண்மைச் சம்பவத்தின் பாதிப்புகள் எந்த அளவுக்கு இருக்கும்?

A

ஒரு சிறு சம்பவம் சொல்கிறேன். என் சிறுவயதில் நாங்கள் வாழ்ந்த எடப்பாடியில் குரங்காறு என்று ஒரு ஆறு இருக்கும். அதன் அந்தக் கரையில் நைனாம்பட்டி என்றொரு பகுதி உண்டு. அதில் முஸ்லிம்கள் நிறைய பேர் வசிப்பார்கள். அவர்கள் குதிரை வண்டி ஓட்டிப் பிழைப்பு நடத்துபவர்கள். விடுதலை கிடைத்த பிறகு காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது மதக்கலவரம் அங்கே வெடித்தது. அதை முன்னின்று நடத்தியது  யார் என்பது பிறகு தான் எனக்குத் தெரியும்.அந்த முஸ்லிம்களின் வீடுகள் தாக்கப்பட்டன, உடைமைகள் சூறையாடப்பட்டன வீடுகள் கொளுத்தப்பட்டன. இதே போன்ற கலவரம் மேல்விஷாரம், ஆற்காடு, வேலூர் போன்ற இடங்களிலும் நடைபெற்றது. பணக்கார முஸ்லிம்கள் நகரங்களில் பாதுகாப்பாக இருந்தார்கள். இதில் என்ன கொடுமை என்றால் அந்த ஏழை முஸ்லிம்களின் துயரங்களைப் பாடல் பாடி பாட்டு புத்தகம் போட்டுப் பலரும் சம்பாதித்தார்கள். இந்த சம்பவங்களை எனது நதிமூலம் கதையின் முக்கியமான அத்தியாயமாக நான் எழுதியிருப்பேன். இப்படி சந்தித்த அனுபவங்கள் நிறைய கதைகளில் வரும்.

சேலம் மண்ணின் கதையாக 'நதிமூலம்' 1920 முதல் 1960 வரை பதிவு செய்யப்பட்டிருக்கும். அதன் தொடர்ச்சியாக 'நிலநடுக்கோடு' 1961 முதல் 1991 வரை செல்லும். இதில் இடப்பெயர்ச்சியால் மக்கள் படும் துன்பங்களையும் துயரங்களையும் பதிவு செய்திருந்தேன்.

Q

இன்றைய சென்னை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

A

நான் சென்னையில் பல்லாண்டுகள் தங்கி இருந்தேன். இப்போதைய சென்னையைப் பார்க்கும்போது அது வேறாக இருக்கிறது. உலகமயமாக்கலின் விளைவுகளை உலகெங்கிலும் பார்க்கிறோம். அதன் பெரிய பாதிப்பை சென்னையிலும் பார்க்கிறேன். நான் சென்னையில் பல ஆண்டுகள் இருந்தாலும் எல்லா இடங்களும் எனக்கு இன்று புதிதாகத் தெரிகின்றன. அந்த அளவிற்கு மாற்றங்கள். பெரிய நகரத்தின் இயல்பு அது தான். தினந்தோறும் மாறிக் கொண்டிருக்கும். முன்பெல்லாம் சென்னைக்கு செங்கல்பட்டு, ஜோலார்பேட்டை, வேலூர், அரக்கோணம் போன்ற பகுதிகளில் இருந்து வேலைக்கு வருவார்கள். இப்போது ஏராளமான வட மாநிலத்தினர் உள்ளே வருகிறார்கள். இந்த இடப்பெயர்ச்சி உலகம் பூராவும் நடந்து கொண்டிருக்கிறது. அதை சென்னையிலும் பார்க்கலாம். நான் பெங்களூரில் வசித்தாலும் சென்னை பற்றி நான் நினைத்துப் பார்க்கும்போது எனக்குத் தோன்றுவது இதுதான். இங்கே நான் தன்னந்தனியாக இருப்பது போல்  உணர்வேன்.

Q

பொதுவாகத் திரைப்படங்கள் குறித்த உங்கள் கட்டுரைகள் பலருக்கு வழிகாட்டியாக இருந்துள்ளன. சென்னையில் இருந்த காலகட்டத்தில் திரைப்படங்கள் பற்றி எழுதலாம் என எப்போது தோன்றியது?

A

இலக்கிய சிந்தனை அமைப்பு சிறப்பாகச் செயல்பட்டுப் பேசப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும் . இலக்கியத்திற்காக உண்மையிலேயே நிறைய பணிகளைச் செய்துள்ளார்கள். ப.லட்சுமணன், ப. சிதம்பரம் மற்றும் பாரதி மூவரும் அந்த அமைப்பை நன்றாகக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். பிறகு அவர்களுடன் வானதி திருநாவுக்கரசும் இணைந்து கொண்டார். அந்த அமைப்பின் கூட்டத்திற்கு பல்வேறு மொழிகளில் இருந்து வெளி மாநிலத்திலிருந்து எல்லாம் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் அழைக்கப்படுவார்கள். அப்படி கன்னடத்திலிருந்து யூ. ஆர். அனந்தமூர்த்தி, டாக்டர் சிவராமகாரந்த், தெலுங்கிலிருந்து பால குன்னி பத்ம ராஜு, பெங்காலியில் இருந்து மகா ஸ்வேதா தேவி, மலையாளத்திலிருந்து தகழி சிவசங்கரன் பிள்ளை,வைக்கம் முகமது பஷீர், எம்.டி. வாசுதேவன் நாயர்  போன்ற  படைப்பாளிகள், தமிழில் பிரபலமான படைப்பாளிகள் என ஏராளமான எழுத்தாளர்கள் அங்கே  விருந்தினர்களாகச் சிறப்புரையாற்றி இருக்கிறார்கள்.

ஒரு முறை  ஒரு விருந்தினர் உரையாற்ற வேண்டியவர் வரவில்லை. எனக்கு போன் செய்து நீங்கள் உரையாற்ற முடியுமா என்று கேட்டார்கள். திடீரென்று தலைப்பு கொடுத்தால் என்னால் எப்படி உரையாற்ற முடியும் என்று நான் கூறினேன். நீங்களே ஒரு தலைப்பு கொடுத்து உரையாற்றுங்கள் என்றார்கள். அப்படித்தான் அடுத்த நாளே சென்று இலக்கியமும் திரைப்படமும் என்று நான் ஒன்றரை மணி நேரம் உரையாற்றினேன். அதைப் பலரும் பாராட்டினார்கள் அந்த விழாவுக்கு கோமல் சுவாமிநாதன், திருப்பூர் கிருஷ்ணன் இருவரும் வந்திருந்தார்கள். திருப்பூர் கிருஷ்ணன் இந்த உரையைக் கட்டுரையாக்கித் தர முடியுமா? என்று கேட்டார். அதேபோல் மறுநாளே நான் எழுதிக் கொடுத்தேன். அது உடனே தினமணியில் வந்தது. அதற்கு ஏராளமான பாராட்டுகள் கிடைத்தன. அதன் பிறகு கோமல் சுவாமிநாதன் சுபமங்களாவில் எழுதச் சொன்னார். தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து எழுதச் சொன்னார். இப்படி என்னை எழுதச் சொல்லி, திரைப்படங்கள் குறித்து நிறைய எழுத வைத்து விட்டார்கள்.

'நிழல்' திருநாவுக்கரசு தனது 'நிழல்' பத்திரிகையில் தொடர்ந்து எழுதச் சொன்னார். இன்று வரை நான் அதில் எழுதிக் கொண்டிருக்கிறேன். நான் எழுதும் திரைப்படங்கள் எல்லாம் செவ்வியல் தன்மை கொண்டவை. குறிப்பிடத்தக்க பட உருவாக்கத்திற்குப் பெயர் பெற்றவை என்று தான் இருக்கும்.இப்படிக் கலாபூர்வமான படங்களைத் தான் நான் அதிகம் எழுதுவேன். அப்படி நான் பல இதழ்களில் கட்டுரைகளாக, கட்டுரைத் தொடர்களாக எழுதியவை தமிழ் சினிமாவின் பரிமாணங்கள், நவீன கன்னட சினிமா, சில உலக திரைப்படங்களும் கலைஞர்களும்,பயாஸ்கோப் காரன் என்று நூல்களாக வடிவம் பெற்றன.

Q

சினிமா சார்ந்து எழுதுவதற்காகத் திரைப்படங்கள் பார்த்த அனுபவங்கள் பற்றிக் கூற முடியுமா?

A

சின்ன வயதில் இருந்தே திரைப்படங்கள் பார்க்கும் பழக்கம் எனக்கு உண்டு. அப்போதெல்லாம் நாங்கள் குடும்பத்தோடு திரையரங்கம் செல்வோம். இப்படி 1930  முதல் 1950 வரை படங்கள் பார்த்துள்ளேன். எவ்வளவோ வணிகக் குப்பைகளை பார்த்திருக்கிறோம். போகப் போக வணிகப் படங்களை தவித்து விட்டேன்.உலகத் திரைப்படங்களைப் பார்த்து ரசனை மாற்றம். ஒப்பீட்டு ரசனை போன்றவற்றைக் கணிக்க முடிந்தது. நான் சென்னையில் ஏராளமான திரைப்பட இயக்கங்களில் உறுப்பினராக இருந்து தொடர்ந்து செயல்பட்டு இருக்கிறேன். பல பிலிம் சொசைட்டிகளில் நான் உறுப்பினராக இருந்தேன். எனவே பல்வேறு நாடுகளின் பல்வேறு விதமான திரைப் படங்களைப்  பார்ப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஹாலிவுட் படங்களை பிரிட்டிஷ் கவுன்சில், அமெரிக்கன் எம்பஸியிலும், ரஷ்யப் படங்களை ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரிலும், ஜெர்மன் படங்களை மாக்ஸ் முல்லர் பவனிலும் பார்ப்பேன். இது போன்ற இடங்களில் அந்தந்த நாட்டுச் சிறந்த திரைப்படங்களைத் திரையிடுவார்கள். அதையெல்லாம் நான் தவறாமல் போய்ப் பார்ப்பது உண்டு. மற்றபடி வணிகரீதியான படங்களை நான் பார்ப்பதில்லை. அது பற்றி நான் எழுதுவதுமில்லை.ரசிகனை ஏமாற்றும் வணிகக் குப்பைகள் பற்றி நான் எழுதுவதில்லை. திரையரங்கம் போய் பார்க்க முடியாத சூழலில் டிவிடியில் பார்ப்பேன். என்னிடம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிவிடிக்கள் உள்ளன.

பென் டிரைவ்வில் அப்படி ஆயிரத்துக்கு மேல் உள்ளன. எனக்கு நல்ல நினைவாற்றல் உண்டு .ஒரு திரைப்படத்திற்கு இணையான இன்னொரு படத்தை என்னால் கூற முடியும். இப்படி ஒப்பீட்டு ரசனையை வளர்த்துக் கொண்டுள்ளேன்.சினிமா போலவே எனக்கு ஓவியம், சிற்பம், புகைப்படக் கலை அனைத்திலும் ஈடுபாடு உண்டு.

உதாரணத்திற்கு ஒளிப்பதிவு என்று எடுத்துக்கொண்டால்,சினிமா ஒளிப்பதிவில் குரு தத் திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் வி .கே . மூர்த்தி எப்படி ஒளிப்பதிவு செய்வார், மிருணாள் சென் படத்தின் ஒளிப்பதிவாளர் கே. கே. மகாஜன் எப்படிச் செய்வார் என்று என்னால் கூற முடியும்,.அடூர் கோபால கிருஷ்ணனின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மா என்ன செய்வார்? கிரிஷ் காசரவள்ளியின் ஒளிப்பதிவாளர் ராமச்சந்திரா எப்படி இயங்குவார் என்று எனக்குத் தெரியும். அவர்கள் செய்யும் ஒளியும் நிழலும்  விளையாட்டை என்னால் வகைப்படுத்திக் கூற முடியும். இப்படி ஒவ்வொன்றையும் என்னால் வகைப்படுத்த முடியும். நான் எல்லா வகைமையிலும் எழுதி இருக்கிறேன். க.நா. சு சினிமா எழுத மாட்டார். தி.ஜா.இசை பற்றி எழுதி இருக்கிறார் ஆனால் ஓவியம் பற்றி எழுத மாட்டார். நான் எல்லாமும் பற்றி எழுதி இருக்கிறேன்.

முன்பெல்லாம்  வணிக ரீதியிலான படங்களை  நாங்கள் குடும்பத்தோடு நிறைய  பார்ப்போம். பிறகு நான் குறைத்துக் கொண்டேன் ஒரு கட்டத்தில் நிறுத்தி விட்டேன். நான் பார்த்த வணிகப் படங்கள் என்று எடுத்துக் கொண்டால், 'காதல் தேசம்'படம் பற்றி  எழுதுவதற்கு வாஸந்தி அனுப்பி வைத்தார். அதேபோல கோமல்  சுவாமிநாதன் 'பம்பாய்' படம் பற்றி விமர்சனம் எழுதுவதற்கு நான், வண்ண நிலவன், செ.யோகநாதன் என்று மூன்று பேரையும் தனித்தனியாக தனித்தனி நாட்களில் அனுப்பி வைத்தார். அனேகமாக 'மின்சார கனவு' தான் நான் கடைசியாகப் பார்த்த வணிக ரீதியிலான படமாக இருக்கும்.

Q

தமிழ்த் திரைப்படங்கள் குறித்து எப்போதும் அதிருப்தியையும் ஆதங்கத்தையும்  கோபத்தையும் கூட வெளிப்படுத்துகிறீர்களே ஏன்?

A

இது கோபம் அல்ல ஆதங்கம். தமிழில் நூறு வருஷத்தில் ஏழாயிரத்துக்கும் மேல் திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் ஒரே ஒரு படம் கூட தேசிய அளவில் சொல்கிற மாதிரி இல்லை. இந்திய சினிமாக்கள் குறிப்பாக தமிழ் சினிமா நாடகத்திலிருந்து வந்ததால் உரத்த கதியில் பேசுகின்றன. இப்போதுதான் மெல்ல மெல்ல மாறி வருகிறது. ஹாலிவுட் படங்கள் நாடகத்திலிருந்து வராததால் தணிந்த கதியில் பேசுகின்றன. 70களில் அங்கெல்லாம் மேலை நாடுகளில் புதிய அலை வந்து திரைப்படங்களின் முகமே மாறிவிட்டது. ஆனால் நாம் அப்படியே இருக்கிறோம். தமிழில் 'உன்னைப்போல் ஒருவன்' படத்தை நியோ ரியலிச வகைப் படமாக ஜெயகாந்தன் எடுத்தார். அப்போதே அவருக்குப் பிரபல சினிமாக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்; மிரட்டி இருக்கிறார்கள். அப்படி இருக்கிற நிலைமை மாறவே மாறாதா என்றால் அப்படி எல்லாம் சொல்ல முடியாது மாறும், மாற வேண்டும்.

தமிழ் சினிமாவில் கதைத் திருட்டுகள் அதிகம். இங்கே படமாக்கும் வகையில் எவ்வளவோ நாவல்கள், குறு நாவல்கள், படைப்புகள் இருக்கின்றன. ஏன் கதைகளைத் திருடுகிறார்கள்? திருடிய கதைக்குக் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் தங்கள் பெயர்களைப் போட்டுக் கொண்டு பணம் சம்பாதிக்கிறார்கள். புகழ் பெறுகிறார்கள் .

எத்தனைபேர் என்னென்ன கதைகளைத் திருடியிருக்கிறார்கள் என்று நான் ஒரு பட்டியலைப் போட்டேன். அதை வெளியிட்டதற்காக இந்த மாதிரியான கட்டுரை எல்லாம் போடக் கூடாது என்று அந்தப் பத்திரிகை ஆசிரியர் மிரட்டப்பட்டார். தமிழ் சினிமாவில் காலங்காலமாக இந்தத் திருட்டு நடந்துவருகிறது. மற்ற மொழிகளில் இந்தளவுக்குப் புகார்கள் இல்லை. ஆனாலும் தமிழ் சினிமாவில் நேர்மையான ஆட்களும் இருக்கிறார்கள். இதற்கு மூன்று பேரை உதாரணமாக நான் சொல்ல முடியும். முதலில் கே. ராம்நாத் என்ற இயக்குநர் இருந்தார். அவர் வெளிநாட்டுக் கதைகளை, நாடகங்களை சினிமாவாக எடுத்திருக்கிறார். 'மர்மயோகி' என்ற ஒரு படத்தை அவர் இயக்கினார். எம்ஜிஆர் நடித்த அந்தப் படம் நன்றாக ஓடியது. அந்தப்படம் ராபின்ஹுட் கதையையும் ஷேக்ஸ்பியரின் 'ஹாம்லெட்' கதையையும் மற்றும் ஒரு கதையையும் இணைத்து உருவாக்கியது என்று அவர் கூறினார்.' கன்னியின் காதலி' என்ற படம் 'ட்வெல்த்நைட்' என்ற கதை. விக்டர் ஹியூகோவின் 'லெமிஸரபில் 'கதையைத்தான் 'ஏழைபடும்பாடு' என்று எடுத்தார். வீணை எஸ். பாலச்சந்தர் ஜப்பானுக்கு வீணை கச்சேரிக்குச் சென்றபோது அங்கே அகிரா குரோசோவாவின் 'ரஷோமன்' படத்தைப் பார்த்து அதை நம்நாட்டுக்கு ஏற்றபடிமாற்றி அமைத்து எடுத்தார். அதுதான் 'அந்தநாள்'. அதை அவர் வெளியே வெளிப்படையாகக் கூறினார். அதேபோல் 'பொம்மை' படம் வெளிநாட்டுக் கதைகளின் இணைப்பில் உருவானது என்று அவர் கூறியிருந்தார். பிறகு மகேந்திரன் புதுமைப்பித்தன் எழுதிய 'சிற்றன்னை' கதையிலிருந்துதான் 'உதிரிப்பூக்கள்' கதை உருவானது என்று வெளிப்படையாகக் கூறினார். இப்படிப்பட்ட சில நேர்மையானவர்களும் சினிமாவில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Q

கன்னட சினிமா பற்றி நூல் எழுதி இருக்கிறீர்கள். கன்னட சினிமா தமிழ் சினிமாவுடன் ஒப்பிடுகையில் எப்படி உள்ளது?

A

கன்னட சினிமா சில விதங்களில் தமிழ் சினிமாவைவிட நன்றாக இருக்கிறது என்பேன். ஆனால் தமிழ் சினிமாவில் அது நடைபெறவே இல்லை. கன்னடத்தில் நியோ ரியலிசம் தன்மை கொண்ட அலை 1970 இல் ஆரம்பமானது. கன்னட சினிமாவில் ஒரே ஒரு புதிய முயற்சி முன்னெடுக்கப்பட்டது. 'சம்ஸ்காரா' என்ற படம். பட்டாபிராம ரெட்டி இயக்கியிருந்தார். கிரீஷ் கர்னாட் முதலில் நடித்த படம் அது. தேசிய விருது பெற்றது. அதைத்தொடர்ந்து பத்துப் படங்கள் அதே பாணியில் நல்ல முயற்சியாக வந்தன. இப்படி 60 படங்கள் வந்திருக்கும். இப்படித் தொடர்ந்து அங்கு முயற்சிகள் நடைபெறுகின்றன. தெலுங்கில் கூட நரசிங் ராஜ்  நவீன ஓவியர். அவர் 'தாசி', 'மட்டி மனுஷலு' படங்களை எடுத்தவர். அவர் 'ரங்கூல கலா' என்ற ஓவியம் பற்றிய கதையை எடுத்தார். அது தேசிய விருது பெற்றது. அவரைத் தொடர்ந்து சிலர் வந்தார்கள்.அப்போது அவருக்குத் தெலுங்கில்  வணிகத் திரையுலகத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த முக்கிய புள்ளிகளால் நேரடியாக மிரட்டல் விடுக்கப்பட்டது.  

ஆழ்ந்த அர்த்தமுள்ள தீவிரத் தன்மை கொண்ட நல்ல திரைப்படங்கள் தமிழில் இல்லை.ஆண் பெண் உறவு,காதல் பிரச்சினை தாண்டி தமிழில்  சிந்திப்பதில்லை.நல்ல முயற்சிகள் உருவாவதற்குத் தடையாக முதலீட்டாளர்கள் உள்ளார்கள். அவர்களின் தடை பெரிதாக உள்ளது. இவ்வளவு பாரம்பரியமும் ஆற்றலும் உள்ள திறமைசாலிகள் இருந்தாலும் அந்த மாதிரி கலாபூர்வமான முயற்சிக்குள் இவர்கள் நுழையவே இல்லை. அப்படி ஒரு மாற்றம் இங்கும் நிகழாதா? என்றால், எனக்கு நம்பிக்கை இருக்கிறது நடக்கும் என்று நினைக்கிறேன்.

Q

பொதுவாகத் தமிழர்கள் தங்கள் அரசியல் தலைவர்களைத் திரையில் தேடுவதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?

A

ஒரு காலத்தில் அண்ணா திரைப்படங்களுக்கு வசனம் எழுதினார். அவர் நடித்தும் இருக்கிறார். அதேபோல் கலைஞர் கருணாநிதி திரைப்படங்களில் வசனம் எழுதினார், பணியாற்றினார். அவர்கள் மேல் மக்களுக்கு ஒரு மதிப்பு வந்தது. அவர்களுக்குத் தலைவராக  இடம் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு எம்ஜிஆருடைய படங்களைப் பார்த்து அவர் மேல் ஒரு நம்பிக்கை வைத்தார்கள். அவரையும் தலைவராக ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்குப் பிறகு விஜயகாந்த், கமல் வந்தார்கள். ஆனால் நீடிக்க முடியவில்லை. எல்லா நடிகர்களுக்கும் அரசியலில் வருவதற்கு ஆசை இருக்கிறது. ஆனால்  மக்களிடம் அபிமானம் பெறுவது வேறு,வாக்களிப்பது என்பது வேறு என்று  இருக்கிறது. திரைப்பட நடிகர்களை  வேடிக்கை பார்க்க வருவது வேறு, தலைவராக ஏற்றுக் கொள்வது வேறு .ஒரு காலத்தில் இருந்த தேவையால், அந்த இடத்தை நிரப்ப  திரைப்படங்களிலிருந்து தலைவர்கள் வந்தார்கள். அப்போது மக்களிடம் ஏற்பிருந்தது. இப்போது அந்த நிலை இல்லை.

Q

உங்கள் படைப்புகளுக்கான விமர்சனம் வரவேற்பு எப்படி?

A

என் கதைகள் படைப்புகள் குறித்து சாதாரணமானவர்கள் சொல்லும் கருத்துக்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. எனது பிரபலமான நாவலை ஒருவர் வெளியிட்டார். அவர் ஏற்கெனவே எனது ஐந்து நாவல்களை வெளியிட்ட பதிப்பாளர். என் மீதுள்ள நம்பிக்கையில் அந்த நாவலைப் படிக்காமலேயே  அச்சுக்கு அனுப்பினார். பிறகு அச்சில் வந்த போது அதைப் படித்துப் பார்த்தபோது அது சுமாரான நாவல் போன்று இருக்கிறது என்று அவர் கூறினார். ஆனால் அதே நாவலை படித்துப் பார்த்த எனது இன்னொரு பதிப்பாளர் இது மாதிரி எங்களுக்குக் காத்திரமான நாவல் தரவில்லையே என்றார். எனது அந்த நாவல் பற்றி வெங்கட் சாமிநாதன் ஆங்கிலத்தில் பெரிய கட்டுரை எழுதிய பிறகு அதன் மதிப்பு மாறியது. வாஸந்தியும் அதுபற்றி நூல் விமர்சனம் எழுதினார். அதுதான் 'காலவெளி'. நவீன ஓவியர்கள் பற்றி நான் எழுதிய அந்தக் 'காலவெளி'யை  மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமி படித்துவிட்டுப் பாராட்டிப் பேசினார். பிறகு மறு பதிப்பு போட்டார்கள். மறுபடியும் வெங்கட் சாமிநாதன் தான் அதைப் பற்றிக் கணையாழியில் கட்டுரை எழுதினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பெங்களூரில் உள்ள சாய் ரமணா என்பவர் பிரமாதமான மறு பதிப்பு கொண்டு வந்துள்ளார். அதற்காக ஆதிமூலம் வரைந்து கொடுத்த  கோட்டோவியங்கள் மற்றும் முன்னுரையோடு கொண்டு வந்திருக்கிறார்.

எனது 'நதிமூலம்' பேசப்பட்ட நாவல் என்ற திருப்தியை எனக்குத் தந்தது. நவீன நாவல்கள் நூறில் ஒன்று என்று பட்டியலிட்டுப் பாராட்டப்பட்டது. க.நா. சு, கோவை ஞானி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், சா. கந்தசாமி ஆகியோர் அந்த நாவலைப் புகழ்ந்து பாராட்டினார்கள். முதலில் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது, பிறகு விஜயா பதிப்பகம் வெளியிட்டது.

நான் எழுதிய காலத்தில்   அசோகமித்திரன்  கணையாழியில் இருந்தபோது என்னிடம் படம் தான் கேட்பார், ஒரு நாளும் கதை கேட்டதில்லை. ஆனால் எனது போக்கிடம் நாவல் வந்த பிறகு,அதற்கு இலக்கிய சிந்தனை பரிசு கிடைத்த பிறகு எல்லாமே மாறியது. சாவி என்னை  இவன் வேறு மாதிரியான ஆள் என்று பார்த்தார். அப்போதும் சிலர் இவர் பத்திரிகைகளுக்கு ஏற்ற மாதிரி எழுதுபவர் என்று என்னை விமர்சித்தார்கள். 

வெகுஜன பத்திரிகைகளில் ஏராளமாக எழுதி வந்தவன் நான். ஆனால், அந்த நாவலுக்குப் பிறகு மெல்ல மெல்ல வெகுஜன பத்திரிகை உலகம் என்னைக் கைவிட்டது. ஆனால்  சிறுபத்திரிகை உலகம் என்னை இரு கரம் நீட்டி வரவேற்றது. பொதுவாகச் சிறு பத்திரிகைகளில் இருந்து வெகுஜன பத்திரிகைளுக்குத் தான் எழுத்தாளர்கள் வருவார்கள். நான் இங்கிருந்து அங்கு சென்றேன். 

Q

ஓவியர், புகைப்படக் கலைஞர், வரலாற்றாளர், படைப்பாளி… நீங்கள் கொண்டுள்ள இந்த முகங்களில் எது உங்களுக்குப் பிடித்தமானது?

A

இதில் தனிப்பட்ட ஒன்றாக நான் எதையும் நினைப்பது கடினம் என்று நினைக்கிறேன். ஒரு படைப்பாளியாக நாவலாசிரியராக கூடுதல் பெருமை ஈடுபாடு என்று வைத்துக் கொண்டாலும் நான் ஒரு புகைப்படக் கலைஞராகவும் இருக்கிறேன். ஓவியராகவும் இருக்கிறேன். அவை ஒன்றை விட்டு ஒன்று விலகாதபடி என்னுள் கலந்துள்ளன. எழுத்தாளர் ஒருவர் ஓவியராக இருப்பது சுலபம்தான். எல்லா ஓவியரும் நல்ல புகைப்படக் கலைஞர்கள் தான். ஏனென்றால் ஓவியர்கள் எப்போதும் கையில் ஒரு கேமராவுடன் திரிவார்கள். எந்த ஒரு நல்ல காட்சியையும் விட்டு விட மாட்டார்கள். அப்படி நான் ஆயிரக்கணக்கான படங்களை எடுத்திருக்கிறேன். பிலிம் ரோல் கேமராவிலிருந்து இப்போது டிஜிட்டல் கேமரா வரை வந்து விட்டேன்.

Q

எது உங்கள் எழுத்துமுறை...? அதாவது நீங்கள் எழுதும் விதம் எப்படி? குறிப்பாகத் தினமும் இவ்வளவு பக்கங்கள்,சொற்கள் எனத் திட்டமிடுவீர்களா?

A

இப்படி நான் திட்டமிட்டு எதையும்  எழுதுவதில்லை. சில பக்கங்கள் எழுதுவேன், சில வரிகள் கூட எழுதுவேன். விருப்பம் போல நான் எழுதுவேன். எந்தவிதமான திட்டமிட்ட தயாரிப்பும் என்னிடம் இருக்காது. ஒரே மூச்சில் எழுதுவது எத்தனை அத்தியாயங்கள் எழுதுவது மீண்டும் திருத்தி எழுதுவது என்ற திட்டங்கள் எதுவும் என்னிடமில்லை. எழுதத் தோன்றினால் எழுதுவேன். அந்த சுதந்திரத்தோடு தான் நான் இயங்கிக் கொண்டிருக்கிறேன்.

Q

ஒரு படைப்பை எழுதிவிட்டு அதிலேயே படைப்பு மனம் ஆழ்ந்து கிடக்குமா? மாறாக அதிலிருந்து வெளியேறி விடுவீர்களா?

A

ஒரு படைப்பு எழுதி முடிக்கப்படும் வரை அதே சிந்தனையில் தான் இருப்பேன். வேறு வேலை பார்த்தாலும், மனம் அதில் இருந்து வெளியே செல்லாது. ஏன், சாப்பிட்டாலும் கூட என்ன எழுதினோம் அடுத்து என்ன என்பதைப் பற்றியே என் சிந்தனை இருக்கும். அதை முடிக்கும் வரை அதிலிருந்து நான் விலகுவதில்லை.

Q

 நாவல்கள் எழுதும்போது ஒரே மூச்சில் தொடர்ந்து எழுதிவிடுவீர்களா? வெகுகாலம் பிடித்த நாவல் எது?

A

ஒரே முயற்சியில் எல்லாம் நாவல் எழுதுவதில்லை. 'நதிமூலம் ' எழுதுவதற்குத் தான் நீண்ட காலமானது.

Q

பல முக்கியமான படைப்புகளைத் தந்திருந்தாலும் அங்கீகாரம் என்பது உங்களுக்குக் குறைவாகவே உள்ளது.  இதற்கான காரணங்கள், வருத்தங்கள் ஏதும் உண்டா?

A

நான் என் பாதையில் போய்க் கொண்டிருக்கிறேன். விரும்பினால் இடது பக்கம் திரும்புவேன் அல்லது வலது பக்கம் திரும்புவேன் பிரிந்து செல்லும் ஒற்றையடிப் பாதை இருந்தால் அதிலும் செல்வேன். நான் எழுதிக் கொண்டே இருப்பேன். நான் எப்போதும் திரும்பிப் பார்ப்பதில்லை. எனக்கு எந்தப் பாராட்டுகளும் அங்கீகாரங்களும் வருகிறதா என்று நான் எதிர்பார்ப்பதில்லை. தொடர்ந்து நான் 57 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். விருதுகளுக்கோ அங்கீகாரங்களுக்கோ நான் எதிர்பார்த்து செய்வதில்லை. சிலர்  அவர்கள்  விருதுகள் வாங்கும் வரை விருதுகள் பெறுபவர்களை விமர்சிப்பார்கள்.

நான் இப்படி எந்த விருதையும் விமர்சிப்பதில்லை. ஏனென்றால் ஒவ்வொரு விருதுக்குப் பின்னும் அரசியல் உண்டு. பல்வேறு விதமான நிபந்தனைகள் இருக்கலாம். அதைப் பார்த்து தான் விருதுகள் கொடுக்கப்படுகின்றன. எனவே நான் அந்த அரசியலுக்குள்ளும் செல்வதில்லை. விமர்சனமும் செய்வதில்லை. ஏனென்றால் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. இப்போது எனக்கு விளக்கு விருது அறிவிக்கப்பட்ட போது உங்களுக்கு இத்தனை நாள் எவ்வளவோ பெரிய விருதுகள் எல்லாம் வந்திருக்க வேண்டும் என்று பலரும் தொலைபேசியில் பேசுகிறார்கள். ஏன் வரவில்லை என்று கேட்கிறார்கள். பெரிய பெரிய விருதுகளுக்கு எல்லாம் நீங்கள் தகுதியானவர்தான் என்று சொல்கிறார்கள். அது அவர்களது கருத்து. அதைப் பற்றி நான் எதையும் யோசிக்காமல் பதில் சொல்லாமல் நான் கடந்து போய்க்கொண்டே இருக்கிறேன்.

Q

தமிழ் இலக்கிய சூழலில் நிலவும் குழு மனப்பான்மை பற்றி?

A

இந்தக் குழு மனப்பான்மை தமிழ் இலக்கியம் மட்டுமல்ல எல்லா மொழி  இந்திய இலக்கியத்திலும் இருக்கிறது. ஒவ்வொன்றிலும் பல்வேறு பிரிவுகள் உட் பிரிவுகள்  என்று உள்ளன. இந்தக் குழு  மனப்பான்மைக்குப் பின்புலத்தில்  மதம் இருக்கும், ஜாதி இருக்கும், அரசியல் இருக்கும், சித்தாந்தம் இருக்கும், கோட்பாடுகள்  இருக்கும். இப்படி ஏதாவது ஒன்று இருக்கும். தமிழ் இலக்கிய சூழலில் மட்டும்  ஆளுக்கொரு கோஷ்டி என்று பல கோஷ்டிகள் உள்ளன.

Q

விமர்சனங்கள் அங்கீகாரங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

A

விமர்சனங்கள் தேவை , அவை மிகவும் முரட்டுத்தனமாகவும் படைத்தவரைப் புண்படுத்தும் படியாகவும் இருக்கின்றன என்றும் சிலர் சொல்வார்கள். உற்று நோக்கினால் இந்த விமர்சனத்தின் பின்னே ஓர் ஆதங்கம் இருப்பது தான் அதற்குக் காரணமாக இருக்கும். இன்னும் நன்றாக எதிர்பார்த்தேன், இதைவிட நன்றாக இவர் எழுதக்கூடியவர் தான்,  இப்படி எழுதி விட்டாரே என்கிற ஆதங்கத்தில் கோபத்தில் விளைந்த விமர்சனமாகக் கூட அது இருக்கலாம் ஆனால் விமர்சனத்தின் பின்னணியில் தவறான சுயநல நோக்கம் இருக்கக் கூடாது. விமர்சனம் என்கிற பெயரில் அந்தப் படைப்பைப் பற்றி அவதூறு பேசுவதாகவும் தனிமனித தாக்குதலாகவும் இருக்கக்கூடாது என்பது என் கருத்து.

Q

தற்கால நவீன ஓவியங்கள் குறித்து?

A

தற்கால நவீன ஓவியங்கள் குறித்து எனக்கு எந்தக் கருத்தும் இல்லாமல் இருக்கிறது. எனது ஓவிய நண்பர்கள் ஆதிமூலம், தட்சிணாமூர்த்தி, ஆசான்கள் அந்தோணிதாஸ், ராம்கோபால், சந்தானராஜ், போன்றவர்கள் மறைந்து விட்டார்கள் இப்போது இல்லை. சென்னையில் இருந்த போது எங்கு ஓவியக் கண்காட்சி நடந்தாலும் எனக்கு அழைப்பு வரும். போய்ப் பார்த்துவிட்டு வருவேன். பெங்களூர் வந்த பிறகு எங்கும் நான் வெளியில் செல்வதில்லை. ஏதாவது பத்திரிகைகளில் செய்தி வந்தால் பார்ப்பேன் அவ்வளவுதான். மற்றபடி இப்போது நவீன ஓவியத்துறையில் யார் தீவிரமாக இயங்குகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. எனது நவீன ஓவிய நண்பர்கள் பலரும் இப்போது இல்லை.மறைந்து விட்டார்கள். சென்னையில் இருந்த போது இருந்த ஓவியர்கள்  தொடர்பும் இப்போது இல்லை. இப்போது நான் பெங்களூரில் இருப்பதால் ஓவியங்களைப் பார்க்க முடிவதில்லை. உடல் நிலையும் ஒரு காரணம், எனக்கு 82 வயதாகி விட்டதால் வெளியில அதிகம் செல்ல முடியவில்லை. எனவே கருத்து சொல்ல முடியவில்லை.

எழுத்தாளர் பாவண்ணனுடன் விட்டல் ராவ்
எழுத்தாளர் பாவண்ணனுடன் விட்டல் ராவ்
Q

உங்கள் இலக்கிய உலக நண்பர்கள் யார்?

A

எனக்கு ஓவிய உலகத்தில் ஆதிமூலம் தொடங்கி, பல நண்பர்கள் இருந்தார்கள். இலக்கிய உலகத்தில் என்றால் இதயன் என்று எழுதுகிற குப்புசாமி எனக்கு மிக நெருங்கிய நண்பர்.ம.அரங்கநாதன் என்னை வெகு காலம் முன்பே இனம் கண்டு ஊக்கப்படுத்தி நட்பு பாராட்டியவர். இறுதிவரை அவர் என் நண்பராக இருந்தார். சா. கந்தசாமியும் என்னை ஊக்கப்படுத்தியவர். சகோதரி திலகவதியும் என்னோடு நட்பாக இருந்தார். பெங்களூர் சென்றபின் எனக்கு அணுக்க நண்பராகத் தொடர்பவர் எழுத்தாளர் பாவண்ணன். நான் பலரை இழந்து விட்டாலும் ஒரே தம்பியாக பாவண்ணன் இருக்கிறார்.  அற்புதமான மனிதர், அருமையான எழுத்தாளர், விசாலமான மனசுக்காரர். எல்லாவற்றையும் நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். பெங்களூரில் அவர் பக்கத்துணை இருக்கிற தைரியத்தில்தான்  நான் நம்பிக்கையோடும் நிம்மதியாகவும் இருக்கிறேன் என்று கூறலாம்.

Q

உங்கள் தாய்மொழி கன்னட மாக இருப்பதால் தமிழ் எழுத்துலகில் உங்களைத் தள்ளி நின்று பார்க்கிறார்களா?

A

நம்  நாட்டில் ஆங்கிலோ இந்தியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆங்கிலம் தான் பேசுகிறார்கள். ஆனாலும் அவர்களை வெள்ளைக்காரர்கள் அசல் வெள்ளைக்காரர்களாக அங்கீகரிப்பதில்லை. இங்கே நாமும் அவர்களை அசல் இந்தியர்களாகப் பார்ப்பதில்லை. இப்படிப்பட்ட ஊசலாட்டத்தில் தான் அவர்கள் இருக்கிறார்கள். இடப்பெயர்ச்சிகளால் இந்த மொழிக் கலப்பு நடந்ததில் இப்படிப்பட்ட நிலைமை உள்ளது. இப்படிப்பட்ட இரண்டுங்கெட்டான் உணர்வு உலகம் முழுக்க  இருக்கத்தான் செய்கிறது. இடம் பெயரும் மக்கள் ஒவ்வொரு  நாட்டிலும் ஒவ்வொரு நகரத்திலும் ஏன் ஒவ்வொரு கிராமத்திலும் கூட இந்த பிரச்சினையைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை நான் இப்போது பெங்களூரில் இருந்தாலும் அவர்கள் என்னை 'கொங்காட்டி' என்பார்கள். அதாவது சேலம் பக்கத்தில் இருந்து வந்ததை நினைவூட்டும் படி கொங்காட்டி என்கிறார்கள். அதாவது கொங்கு நாட்டான் என்கிறார்கள். அவர்கள் என்னைத் தமிழனாகத்தான் பார்க்கிறார்கள். நானும் உங்களை மாதிரி கன்னடம் தானே பேசுகிறேன் என்றால் எங்களைப் போல இயல்பாகப் பேசவில்லை என்கிறார்கள்.ஆனால் எனது வீட்டில் கொஞ்சம் கன்னடம் பேசினாலும் எனது பெற்றோர்கள் தாய்மொழியாக இருந்தாலும் அதில் தமிழ் கலந்து தான் பேசுவார்கள். அது அசல் கன்னடம் கிடையாது. இப்படி ஒவ்வொன்றும் அடுத்த மொழியின் பாதிப்போடு தான் இப்போது மாறியுள்ளது.  இந்தி மொழியை எடுத்தாலும் அதன் அசல் தன்மை இப்போது மாறி வருகிறது. நெருங்கிப் பார்த்தால் வெவ்வேறு மொழியின் சாயல் , கலப்பு இருப்பதைப் பார்க்கலாம்.

எனக்கு 2012 -ல் 'குசுமாஞ்சலி சம்மான்' விருது டெல்லியில் கொடுத்த போது,தமிழுக்கு என்று ஒன்றும் இந்திக்கு என்று ஒன்றும் கொடுக்கப்பட்டது. இந்திக்காகத் தேர்வு செய்யப்பட்ட அந்த  பெண் எழுத்தாளர், தான் எழுதியது இந்தியில் அல்ல மைதிலி மொழியில் என்றார். தனக்கு மைதிலி மொழிக்காகக் கொடுக்க வேண்டும் என்றார். இந்தியாவில் இந்தி மொழியை அதிகமாகப்  பேசுகிறார்கள் என்று நாம் நினைக்கிறோம்.ஆனால் நாம் எல்லோரும் பேசுவது ஒரே இந்தி என்று நினைக்கிறோம். இந்தியில் கடிபோலி, போஜ்பூரி, மைதிலி என்று பல வகைகள் உண்டு. ஹைதராபாத்தில்  தக்னி என்ற வகை உருது பேசுகிறார்கள். இப்படி  இடப்பெயர்ச்சிக்குப் பிறகு மொழியின் அசல் தன்மை மாறுகிறது.

பிஎஸ்என்எல்லில் நான் வேலை பார்த்தேன்.அது இன்ஜினியரிங் பிரிவு என்பதால்,பலமொழிக் காரர்களும் இருந்தார்கள். எனவே எனக்கு மொழிப் பிரச்சினை இருந்ததில்லை.சில நேரம் சாப்பாட்டு மேசையில் நீ என்ன ஆளு நீ என்ன ஆளு என்று கேள்வி வரும். கேலியாகப் பேசி சிரித்துக் கொள்வது உண்டு. இப்படி இடப்பெயர்ச்சியால் வரும் மொழிச் சிக்கல்கள் குறித்து 'நிலநடுக்கோடு' கதையில் நான் விரிவாக எழுதி இருக்கிறேன். அதில் இது மாதிரி எழும் பல கேள்விகளுக்குப் பதில் இருக்கும்.

இலக்கிய உலகத்தில் என்னைப் பற்றி சிலர் அப்படி நினைத்திருக்கலாம். வேறு காரணங்கள் கிடைக்காத போது சிலர் இதைக் கூறுவது உண்டு, இவர் வேற ஆள் கன்னடத்துக்காரர் என்று. நான் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. 

Q

உங்களை ஒரு படைப்பாளியாக இயங்க வைப்பதில் குடும்பத்தினரின் ஆதரவு ,எதிர்வினை எப்படி இருந்தது ?

A

எங்கள் பெற்றோருக்குப் பிள்ளைகள் நாங்கள் மொத்தம் ஏழு பேர். எனக்கு ஒரு அண்ணன், மூன்று அக்காக்கள், இரண்டு தங்கைகள். என்னுடன் பிறந்தவர்கள் ஆறு பேர் என்றாலும் நான் சின்ன வயதிலேயே படிப்பு வேலை என்று வீட்டுக்கு வெளியே வந்து தனியே வசிக்க ஆரம்பித்து விட்டேன். ஒரு கட்டத்தில்தான் அம்மா துணைக்கு வந்தார். நான் 1967 முதல் எழுதி வருகிறேன். எனக்கு 1973 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. என் மனைவியின் பெயர் கமலா, நாற்பது ஆண்டுகள் என்னுடன் இருந்தாள். அவள் இறந்த பிறகு ஒரு கையை இழந்தது போல் உணர்கிறேன்.

அவள் எனக்கு ஊன்று கோலாகவும் உந்து சக்தியாகவும் இருந்தாள். என்னைச் சுதந்திரமாக நிம்மதியாக படைப்புகளில் இயங்க வைத்ததில் எனது மனைவியின் பங்கு பெரியது. அவள் கொடுத்த ஊக்கமும் அதைவிடப் பெரிது.என் மனைவி மறைந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. கடைசி வரை எனக்கு உறுதுணையாக இருந்தாள். நான் எழுதுவதைப் படிக்கும் முதல் வாசகி அவள்தான். நான் ஒரு பக்கம் எழுதினாலும் ஒரு நாவல் எழுதினாலும் அவள் படிப்பாள். அச்சிட்டு வந்த முதல் பிரதியையும் அவள்தான் படிப்பாள். அவள் எனது முதல் வாசகி மட்டுமல்ல என் முதல் விமர்சகியும் கூட. நிறை குறைகளைச் சொல்வாள். நான் எழுதியதைப் படித்து விட்டுப் புரியாமல் இருந்தாலோ வேறு மாதிரி அதிகமாகத் தெரிந்தாலும் அதில் சிவப்பு மையினால் அடிக்கோடிட்டுக் காட்டுவாள். அது பற்றி நான் விளக்கிச் சொல்லிச் சமாதானப்படுத்த வேண்டும். சமாதானம் இல்லை என்றால் அதை மாற்றச் சொல்லி விடுவாள். அப்படிப்பட்ட ரசிகை. அவள், நான் வரையும் ஓவியங்கள் குறித்தும் சந்தேகங்கள் கேட்பாள். தெளிவுபடுத்திக் கொள்வாள். அவள் நல்ல கலையரசனை கொண்டவள். கைவினைப் பொருட்கள் செய்வதில் கெட்டிக்காரி. சிறுகதைகளும் எழுதி இருக்கிறாள். கல்கியின் சிறுகதைப் போட்டியில் பரிசு வாங்கி இருக்கிறாள். அவளது இழப்பின்  வெறுமையை என்னால் நிரப்ப முடியாமல் இருக்கிறேன். நான் பெங்களூர் வந்து பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. இங்கே அவளை நினைக்கும் போதெல்லாம் நான் தன்னந்தனியனாக உணர்கிறேன். என் ஒரே மகள் ஹரிணி என் எல்லா எழுத்தையும் பாராட்டுவாள். அவளுக்கு விமர்சிக்கத் தெரியாது. அந்தப் பார்வை அவளுக்குக் கிடையாது. (Ends)

***

விட்டல் ராவின் படைப்புலகம்!

நாவல்கள்:   

இன்னொரு தாஜ்மகால் - 1974,    போக்கிடம் - 1976,    தூறல் - 1976,    நதிமூலம் - 1981,    மற்றவர்கள் - 1992,  தருணம் -1992,  மீண்டும் அவளுக்காக - 1993,    காலவெளி - 1993,  வண்ண முகங்கள் - 1994,  காம்ரேடுகள் – 1996, மூலவரும் உற்சவரும் -2016, நிலநடுக்கோடு - 2018 

 சிறுகதைத் தொகுதிகள்:   

 முத்துக்கள் பத்து - 2010,  மரம் வைத்தவன் - 2018, வெளி மனிதன் - 2018, விட்டல் ராவ் கதைகள் - 2019, நெருக்கமான இடைவெளி

 கட்டுரைத் தொகுதிகள்: 

 ஓவியக் கலை உலகில் -1978 , தி.ஜ.ர.வின் எழுத்தும் தேசிய உணர்வும் -1994, சில உலகத் திரைப்படங்களும் கலைஞர்களும்- 1996,  தமிழகக் கோட்டைகள் - 2010, வாழ்வின் சில உன்னதங்கள் - 2011,நவீன கன்னட சினிமா - 2011,  கூடார நாட்கள் - 2012,தமிழ் சினிமாவின் பரிமாணங்கள் - 2012,    ஓர் அன்னாடுகாச்சியின் சேலம் - 2021,     நவீன கன்னட சினிமா,    கலை இலக்கியச் சங்கதிகள், தொலைபேசி நாட்கள்- 2023