
புத்தகக்காட்சி என்னும் புனித யாத்திரை!
- எழுத்தாளர் பாவண்ணன்
சென்னை புத்தகக் கண்காட்சி என்பது எழுத்தாளர்களும் வாசகர்களும் பங்கேற்றுக் களிக்கவேண்டிய ஒரு திருவிழா. ஒரு புத்தகத்தைக் கூட வாங்காவிட்டாலும் இரு புறங்களிலும் புத்தகக்கடைகளை மட்டுமே கொண்ட பாதையின் ஊடே நடந்துசெல்வது ஒரு பேரனுபவம். மேகங்களுக்கு நடுவில் மிதந்துசெல்வதுபோன்ற ஓர் அனுபவத்தை அளிக்கும் இடம். திரும்பிய திசையிலெங்கும் எண்ணற்ற தலைப்புகளில் புத்தகங்களைப் பார்ப்பதற்கும் புன்னகை பூத்தபடி கையசைத்து வரவேற்கும் நண்பர்களைச் சந்தித்து உரையாடுவதற்கும் புத்தகக் கண்காட்சி நல்வாய்ப்பான இடமாக உள்ளது. ஒருநாள் அல்ல, இருநாள் அல்ல, இரு வாரங்கள் தொடர்ச்சியாக இந்த வாய்ப்பை சென்னை புத்தகக்கண்காட்சி நமக்கு வழங்குகிறது. ஒரு நாடக விழாவில் தினந்தோறும் நாடகங்களைப் பார்க்கச் செல்வதுபோல அல்லது இசைவிழாவில் தினந்தோறும் கச்சேரிகளுக்குச் செல்வதுபோல, வாய்ப்புள்ளவர்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் புத்தகக்கண்காட்சிக்குச் சென்று அந்த இன்பத்தில் திளைத்துவிட்டு வரவேண்டும். ஆண்டுமுழுவதும் நினைத்து நினைத்து உரையாடிக் களிப்பதற்கான பல தருணங்களை நாம் அக்கண்காட்சி வழியாக பெறலாம். சென்னை நகரத்திலேயே வசிக்கும் ஒரு சிலருக்கு மட்டுமே அத்தகு வாய்ப்புகள் அமையக்கூடும். என்னைப் போல வெளியூர்களில் வசிப்பவர்கள் குறிப்பிட்ட ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே திட்டமிட்டு அக்கண்காட்சிக்குச் சென்றுவர இயலும். அந்த இரண்டு நாள் அனுபவத்துக்காக ஆண்டுமுழுவதும் நினைத்து நினைத்துக் கனவு காண்பதுகூட ஒருவகையான இனிய அனுபவம். ஒவ்வொரு மாதமும் பத்திரிகைகளில் வெளிவரும் விளம்பரங்களையும் மதிப்புரைகளையும் பார்த்துப் பார்த்து வாங்கிப் படிக்கவேண்டிய புத்தகங்களின் பெயர்களை எழுதி வைத்திருப்பது என் வழக்கம். அந்தப் பட்டியலோடுதான் கண்காட்சிக்குச் செல்வேன். எனினும் திட்டமிட்ட புத்தகங்களோடு திட்டமிடாமல் சட்டென பார்வையில் தென்படும் புத்தகங்களில் ஒருசிலவற்றையும் சேர்த்து வாங்குவது வழக்கம். அதைத் தவிர்க்கவே முடியாது. அவற்றையெல்லாம் பெட்டி நிறைய சுமந்துகொண்டு ஊருக்குத் திரும்பும்போது ஏதோ தெரிந்தவர்கள் திருமணத்துக்குச் சென்று வந்ததுபோல மனமெல்லாம் நிறைந்திருக்கும். ஏற்கெனவே அறிமுகமான நண்பர்களின் சந்திப்பும் கைகுலுக்கல்களும் தழுவல்களும் உரையாடல்களும் புதிதாக அறிமுகமான நண்பர்களின் உரையாடல்களும் கனவுக்காட்சியைப்போல மனத்தில் மிதந்தபடியே இருக்கும். அப்படிப்பட்ட மனநிறைவையும் மிதக்கும் உணர்வையும் புத்தகக்கண்காட்சியைத் தவிர வேறெந்த இடத்திலிருந்தும் நாம் பெற்றுவிடமுடியாது. சுருக்கமாகச் சொன்னால், புத்தகக் கண்காட்சி என்பது புத்தகங்களை வாங்குவதற்கோ, புரட்டிப் புரட்டி வேடிக்கை பார்ப்பதற்கோ உரிய சந்தை மட்டுமல்ல, வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஒரு புனித யாத்திரைக்கான இடம்.
புத்தகங்கள் வாங்குவது செலவல்ல , அது அறிவு சார் மூலதனம்!
-மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமி
புத்தகத் திருவிழா என்றுதான் நான் சொல்ல விரும்புகிறேன். புத்தகச் சந்தை என்றோ புத்தகக் கண்காட்சி என்றோ நான் இதைப் பார்க்கவில்லை.
இதைப் புத்தகங்களைச் சந்தைப்படுத்தும் ஒன்றாக நினைக்கக் கூடாது.புக்ஃபேர் என்பது அறிவு இயக்கம் ,இது ஓர் அறிவுசார் செயல்பாடு.இது அறிவுக் கலாச்சாரத்தின் ஓர் அடையாளம்.
புத்தக வாசிப்பு என்பது நம்மை மேம்படுத்துவது என்பதைப் பொதுவாக சொல்வார்கள். ஆனாலும்
புத்தகம் வாங்குவதை அனாவசியமான செலவு என்று நினைக்கக்கூடிய மனப்போக்கும் எல்லாக் காலத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படி நினைப்பவர்கள் புத்தகங்களை எழுதுபவர்களை, இந்த அறிவு இயக்கத்தை மதிக்காதவர்களாகவே இருக்கிறார்கள்.அப்படி வீண் செலவு என்று நினைப்பவர்களை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை.
புத்தகங்கள் என்பது அறிவு சார் மூலதனம் என்று நினைப்பவர்கள் எப்போதும் சிறுபான்மையினர் தான். இவர்கள் அந்த பெரும்பான்மையினரின் இகழ்ச்சியைப் பொருட்படுத்தத் தேவையில்லை. இது பற்றி எடுத்துக்காட்ட வெளிநாடுகளுக்கு எல்லாம் செல்ல வேண்டாம் . நம் அருகே இருக்கும் கேரளாவில்பாருங்கள். அங்கே எழுத்தாளர்களுக்கும் புத்தகங்களுக்கும் பெரிய மதிப்பு இருக்கிறது. எழுத்தாளரின் புத்தகங்களைப் படித்திராத வர்கள் கூட எழுத்தாளரை மரியாதையோடு நடத்துவதைப் பார்க்க முடியும். அது நம்மிடையே இல்லை என்பது வருத்தமான ஒன்றுதான். இங்கே எழுத்தாளனைப் பார்த்தவுடன் பலரும் கேட்கும் கேள்வி "இதுக்கெல்லாம் எவ்வளவு கொடுப்பான்?" என்பதுதான்.
வெளிநாடுகளில் எல்லாம் எழுத்தாளர்களைக் கொண்டாடுகிறார்கள். ஜேம்ஸ் ஜாய்ஸ் என்கிற எழுத்தாளர் எழுதிய 'யுலிசிஸ்' நாவலில் வரும் கதாநாயகன் ஹெரால்ட் ப்ளூம் என்பவன் இந்த இடத்தில்தான் நின்றான், இந்த இடத்தில்தான் திரும்பினான், இந்தக் கடையில் தான் இருமல் மருந்து வாங்கினான் என்று அங்கே பிளாட்பாரத்தில் பதித்து வைத்துள்ளார்கள்.நம்மூரில் திருவள்ளுவருக்கும் கம்பருக்கும் பாரதிக்கும் சிலை வைப்பது என்பது ஓர் அரசியல் செயல்பாட்டாகத்தான் இருக்கிறதே தவிர ரசனை சார்ந்த ஒன்றாக இருக்கிறதா என்பது சந்தேகம் தான்.பல பேர் சொல்கிறார்கள் ஏன் எழுத்தாளர்கள் கூட சொல்கிறார்கள் ,போன ஆண்டு வாங்கியவை முந்தைய ஆண்டு வாங்கியவை படிக்காமல் வைத்திருக்கிறேன். பின்னே ஏன் இப்போதும் புத்தகங்கள் வாங்க வேண்டும் என்கிறார்கள்.இதை நினைத்தால் எனக்குச் சிரிப்பாக இருக்கும்.என்னுடைய சேகரிப்பில் வீட்டில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை அதிகம்தான்.இவ்வளவு புத்தகங்கள் வாங்கி வைத்திருக்கிறோமே பலவற்றைப் படிக்கவில்லையே என்கிற எண்ணம் எனக்கும் வந்திருக்கிறது. சுந்தர ராமசாமி ஒருமுறை எழுதியிருந்தார் 'என்னுடைய புத்தக அடுக்குகளில் படித்த புத்தகங்களை விட படிக்காத புத்தகங்களின் உயரம் அதிகமாகிக் கொண்டு வருவது எனக்குக் குற்ற உணர்ச்சி அளிக்கிறது' என்று . அதேபோல் நானும் உணர்ந்ததுண்டு. ஆனால் அந்தக் குற்ற உணர்ச்சி போனது உம்பெர்டோ எக்கோவால் தான்.அவர் தன் வீட்டில் ஐம்பதாயிரம் புத்தகங்களுக்கு மேல் வைத்திருக்கிறார்.இத்தனை புத்தகங்கள் வைத்திருக்கிறீர்களே அத்தனையும் படித்து விட்டீர்களா என்று ஒருவர் கேட்டபோது,'இந்த மாதிரி கேட்பதே ஒரு முட்டாள் தனம்' என்றார் அவர்.
'நீங்கள் வாங்கும் அத்தனை புத்தகங்களையும் படிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.படிக்கக் கூடியதை விட அதிகமாக புத்தகங்கள் வாங்குபவர்களை எதற்கு இவ்வளவு புத்தகம் வாங்குகிறாய் எல்லாவற்றையும் படிக்கப் போகிறாயா என்று கேட்பது கூட முட்டாள்தனம் தான்' என்கிறார் அவர்.'நீங்கள் வீட்டில் எவ்வளவோ உபகரணங்கள் வைத்திருக்கிறீர்கள். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தப் போவதில்லை. தேவைப்படும் நேரத்தில் மட்டும்தானே பயன்படுத்துகிறீர்கள்.சிலவற்றைப் பிற்காலத் தேவை கருதி வாங்குவீர்கள் .அதே போல் தான் புத்தகங்களும். அந்தப் புத்தகங்களும் ஒரு மருந்துமாதிரி தான்' என்கிறார். 'மருந்து வாங்கி அலமாரியில் அடுக்கி வைத்துக் கொள்வது எல்லாவற்றையும் சாப்பிட வேண்டும் என்பதற்கு அல்ல. தேவைப்படும் நேரத்தில் எடுத்துப் பயன்படுத்திக் கொள்வதற்குத்தான், ஒரு பாதுகாப்புக்காகத் தான்.புத்தகங்கள் மருந்து போன்றவைதான் . அவை குறைவாக இருப்பதை விட அதிகமாய் இருப்பது நல்லது, பாதுகாப்பானது.நிறைய மருந்து வைத்திருப்பது, அவசியம் ஏற்படுகிற போது தேவைப்பட்டதை எடுத்துச் சாப்பிடுவது போல்தான் நிறைய புத்தகங்கள் வைத்திருப்பதும்' என்கிறார்.
நான் புத்தகங்களில் முக்கியமானவை என்று நினைப்பது,கேள்விப்படுவது எல்லாமும் வாங்கி விடுவேன்.வாங்கியவுடன் படிப்பேன் என்று சொல்ல முடியாது. புரட்டிப்பார்ப்பேன் அதற்குள் வேறு வேலைகள் வந்துவிடும்.அப்புறம் படிக்கலாம் என்று வைத்து விடுவேன் அப்படிப் படிக்க வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே தான் போகிறது .அதற்காக வாங்குவதை நிறுத்த மாட்டேன்.திடீரென்று தேவைப்படும் போது நாம் தேடிக் கொண்டிருக்க முடியாது. அப்போது அதைப் புரட்டிப் பார்த்து, படித்துப் பார்த்து தெரிந்து கொள்வேன்.
உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால் ப்ராப்பெட் சாங் (Prophet Song)என்கிற பால் லின்ச் (Paul Lynch)எழுதிய நாவல் சில ஆண்டுகளுக்கு முன்பு புக்கர் பரிசு வாங்கியது. அயர்லாந்தில் 1984 நாவலில் வருவதைப் போல அராஜகமான காலகட்டத்தை பற்றிச் சொல்வது. இது பற்றி ஒரு விவாதம் வந்த போது, அந்த நாவலை முன்பே படித்திருந்தாலும் அந்த விமர்சனத்திற்காக மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டி இருந்தது. அதேபோல் 'சோலார் போன்ஸ் 'என்கிற நாவல் மைக் மெக்கார்மக் எழுதியது. 250 பக்கம் முற்றுப்புள்ளி இல்லாமல் ஒரே வாக்கியத்தில் எழுதப்பட்ட நாவல் அது. அண்மையில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் லாசியோ (László Krasznahorkai) நீள நீள கூட்டு வாக்கியங்கள் கொண்டு ஒரே வாக்கியமாக எழுதுகிறார் என்று சொல்லப்பட்டபோது 'சோலார் போன்ஸ்' நாவலும் அப்படி எழுதப்பட்டது தான் என்று நினைவுக்கு வந்தது. அந்தத் தகவல் தெரியும் ,ஆனால் அந்த நாவலை நான் படிக்கவில்லை.வாங்கி வைத்திருக்கிறேன்.அது பற்றி எழுதவேண்டும் என்பதற்காக அந்த நாவலை எடுத்துப் படித்துவிட்டு எழுதினேன்.
புத்தகம் என்பது கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் மருந்து மாதிரி என்று நான் நினைக்கிறேன்.புத்தகம் என்பது வெறும் கதைப் புத்தகம் அல்ல என்னைப் பொறுத்தவரை அது அறிவின் அடையாளம். புத்தகத் திருவிழா என்பது ஓர் அறிவுக் கொண்டாட்டம்.அது பொழுது போக்கு விஷயம் அல்ல, டெல்லி அப்பளம் சாப்பிடுவது போல் அல்ல.
நான் முதலில் கல்லூரியில் சேர்ந்திருந்த காலகட்டத்தில் 1978 ஆம் ஆண்டு என் தந்தையுடன் முதன் முதலில் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றேன். அது சென்னை புத்தகக் கண்காட்சி ஆரம்பித்த இரண்டாம் ஆண்டு.சென்னை காயிதே மில்லத் கல்லூரி வளாகத்திற்குள் இருந்த ஒரு மதரசா பள்ளியில் நடந்தது. அப்பா திராவிட இயக்கப் பற்று உடையவர். அவர் அரசியல், வரலாறு சார்ந்த புத்தகங்களையே வாங்கினார். அவர் வாங்கியதில் ஒன்றுகூட ஞாபகம் இருக்கிறது பெரியார் எழுதிய 'மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம்' என்கிற புத்தகம் அது. அப்பா அதை என்னைப் படிக்கச் சொல்லி வலியுறுத்தினார். ஆனால் என் கவனம் இலக்கியம் பக்கம்தான் சென்றது.அப்படி அப்போது நான் எனக்குப் பிடித்த ஜே.டி.சாலிங்கரின் ' தி கேச்சர் இன் த ரை ' (The Catcher in the Rye) 'நாளை மற்றும் ஒரு நாளே' புத்தகங்கள் வாங்கினேன். இது எனது முதல் புத்தகக் காட்சி அனுபவம். பிறகு 1982 க்குப் பிறகு நடந்த ஏறக்குறைய அனைத்துப் புத்தகக் காட்சிகளுக்கும் சென்றிருக்கிறேன்.புத்தகங்கள் வாங்குவதைவிட இத்தனை புத்தகங்கள் சூழ்ந்து இருக்கிற இடத்தில் நடந்து போகிற உணர்வு இருக்கிறது அல்லவா, அது அலாதியான அனுபவம் . என்னைச் சுற்றி இத்தனை புத்தகங்கள் இருக்கின்றன இத்தனை எழுத்தாளர்களின் எண்ணங்கள் சூழ்ந்து இருக்கின்றன என்கிற எண்ணம் நீங்கள் பூங்காக்களிலோ கடற்கரையிலோ ஏன் தங்கமும் வைரமும் கொட்டி வைத்திருக்கிற ஜுவல்லரிகள் நிறைந்த ரங்கநாதன் தெருவிலோ கிடைக்காது. புத்தகக் கடைகள் மத்தியில் நடக்கும்போது அங்கே எழுத்து வடிவில் அச்சிடப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ள எழுத்தாளர்களின் எண்ணங்கள் உங்களைச் சூழ்ந்திருக்க, அவற்றின் நடுவே நீங்கள் நடந்து செல்லும் போது உணர்வதை பணத்தை வைத்து அளவிட முடியாது. காசு இருந்தால் வாங்கப் போகிறீர்கள் இல்லாவிட்டால் இல்லை .,அது வேறு .ஆனால் புத்தகங்கள் மத்தியில் இருக்கும் உணர்வு என்பது வேறு எதிலும் இந்த உலகத்தில் கிடைக்காது.புத்தகங்களுக்கு இடையில் வாழ்கிற மாதிரி ஓர் உன்னத வாழ்வு வேறு எதுவும் கிடையாது.
உற்சாகத் திருவிழா!
- எழுத்தாளர் ராஜேஷ்குமார்
ஒவ்வோராண்டும் பல ஊர்களில் புத்தகக் கண்காட்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன.சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி அதற்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி எனக்குக் தெரிகிறது. ஏனென்றால் அங்கே இருக்கும் வாசகர்கள் பெருமளவில் புத்தகங்களை வாங்குகிறார்கள்; எழுத்தாளர்களைக் கொண்டாடுகிறார்கள் .அதேபோல மற்ற ஊர்கள் சிறியதாக இருந்தாலும் அங்கே இருக்கும் வாசகர்களும் மிகுந்த ஆர்வத்தோடு வந்து புத்தகங்களை வாங்கிச் செல்வதை என்னால் பார்க்க முடிகிறது .நான் ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சிகள் எந்த ஊரில் நடந்தாலும் அங்கே போவதற்காக முயற்சிகளை எடுத்துக் கொள்வேன். சென்னையில் கடந்த நான்கு முறையும் சென்று வந்திருக்கிறேன். ஒவ்வொரு முறை அங்கே நான் செல்லும்போதும் வரும் தேதியையும் அரங்குகள் எண்களையும் தெரிவிப்பதுண்டு. அப்படிச் சென்றபோது அங்கே பெரிய அளவில் ஒரு கூட்டம் எனக்காகக் காத்துக் கொண்டிருப்பதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஏனென்றால் திரைப்பட நடிகர்களுக்கு மட்டுமே ஒரு கவர்ச்சியும் ஓர் ஈர்ப்பும் இருக்கிற காலகட்டத்தில் எழுத்தாளர்களையும் அவர்கள் கொண்டாடுவதும் அவர்களோடு நின்று செல்ஃபி எடுத்துக் கொள்வதும் பேசுவதும் எனக்கு மிகுந்த மன மகிழ்ச்சியைக் தந்தது. புத்தகங்களை அவர்கள் வாங்குகிறார்களோ இல்லையோ எழுத்தாளர்களை அவர்கள் பெரியளவில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அது எந்த எழுத்தாளராக இருந்தாலும் சரி,அந்தந்த எழுத்தாளருக்குரிய வாசகர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு கேள்விகள் கேட்பதும் அவர்கள் அதற்குப் பதில் சொல்வதும் ஒரு ஆனந்த காட்சியாகவே எனக்குத் தெரிகிறது. என்னைப் பொறுத்தவரையில் நான் புத்தகக் கண்காட்சி செல்லும் பொழுது என்னுடைய குழந்தைகளைப் பார்க்கும் ஒரு தந்தையின் உணர்வோடு தான் அங்கே செல்கின்றேன் .
ஒரு காலகட்டத்தில் புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும் பொழுது மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் இருப்பதைப் பார்த்துவிட்டு என்னுடைய புத்தகங்களும் ஒருநாள் இப்படி அரங்குகளிலே அலங்கரிக்க வேண்டும் என்ற ஏக்கத்தோடு வலம் வருவேன்.
ஆனால் இன்றைக்கு பத்துக்கும் மேற்பட்ட அரபங்குகளில் என்னுடைய புத்தகங்கள் அலமாரிகளில் அழகாக அலங்கரித்து என்னை வரவேற்பதைப் பார்க்கும் பொழுது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த முறை சென்னை புத்தகக் கண்காட்சியில் பல பதிப்பகங்கள் 'இங்கே ராஜேஷ்குமாரின் புத்தகங்கள் கிடைக்கும் 'என்று எனக்கான பேனர்களை வைத்து எனக்கு மிகுந்த மரியாதை அளித்துள்ளார்கள். வாசகர்களும் அதைப் பார்த்து மகிழ்கிறார்கள். அதை எண்ணிப்பார்த்து எனது மனம் மகிழ்கிறது. வாசிப்பு திறன் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது .இல்லை என்றால் சென்னை புத்தகக் கண்காட்சி இவ்வளவு சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடக்காது. எத்தனையோ திரைப்படங்கள் வந்தாலும் அதை மீறிக்கொண்டு இங்கு வருகின்ற அந்த எழுச்சிமிக்க வாசகர் கூட்டம் மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது. இது ஆண்டாண்டு காலம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
வாசிப்பு மேம்பட வேண்டும்!
- பேராசிரியர் கல்யாணராமன்
புத்தகக் கண்காட்சி என்பது ஓட்டலுக்கு சாப்பிடச் செல்வது, திரை அரங்கிற்கு படம் பார்க்கச் செல்வது,விடுமுறை விட்டால் மது அருந்தச் செல்வது ,ஷாப்பிங் மால் செல்வது போன்று ஒரு கொண்டாட்ட அனுபவமாக இன்று மாறி இருக்கிறது.
20 ஆண்டுகளுக்கு முன்பு நாம் செல்லும் போது புதிய புத்தகங்கள் என்ன கிடைக்கும் அதை எப்படி வாசிப்பது நல்ல நாவலை ,நல்ல சிறுகதைத் தொகுப்பைக் கண்டுபிடிப்பது எப்படி என்கிற மனநிலையில் சென்றோம். அந்தக் புத்தகக் கண்காட்சியில் அந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்துவிட்டு நண்பர்களுடன் உரையாடுவோம்,இலக்கியவாதிகளுடன் பேசுவோம்.சில அரிய சந்திப்புகளைப் பெறுவோம். இப்படி ஒரு மகிழ்ச்சிகரமான வித்தியாசமான அனுபவமாக இருந்தது.வாசிப்பு சார்ந்த ஆர்வத்திற்குத் தீனி போடும் வகையில் அந்த புத்தகச் சந்தைகள் இருந்தன.
இன்றைய கண்காட்சியில் நிறைய நூல்கள் வருகின்றன. எது தரமானது எது தரம் குறைந்தது என்பதைக் கண்டுபிடிப்பது பெரும் சவாலாக இருக்கிறது.இந்த வேறுபாட்டை அறிந்து கொள்வதற்கு நிறைய வாசிக்க வேண்டும் .ஆனால் மேம்போக்கான தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் சூழல்தான் இன்று உள்ளது.
ஆனாலும் புத்தகச் சந்தைக்கு போவது என்பது இன்று ஒரு கொண்டாட்டமான அனுபவமாக மாறி இருக்கிறது.
அங்கே செல்லும்போது நிறைய பேருடன் உரையாட முடியும். ஒவ்வொரு இடத்திலேயும் இலக்கியம் சார்ந்த கூட்டங்கள் எப்படி நடத்தப்படுகின்றன என்பதை அவதானிக்க முடியும். இப்படிப் பல வகையான ஒரு நூதமான கலவையான அனுபவங்கள் கொண்டதாக இன்றைய புத்தகக் காட்சி மாறி இருக்கிறது.
இன்று இங்கே வந்து புத்தகங்களை வாங்குவது படிப்பது அது சார்ந்து விவாதிப்பது என்பதாக மட்டும் இல்லை. இது நம்முடைய அரசியல் பண்பாடு, கலாச்சாரம், சார்ந்த பல்வேறு மனிதர்கள் பல்வேறு ஆளுமைகள்,அவர்களது செயல்பாடுகள் போன்றவற்றைப் புரிந்து கொள்ளவும் உதவுகிறது. அங்கே நடைபெறுகிற கூட்டங்கள், கிடைக்கக்கூடிய எதிர்பாராத சந்திப்புகள் இப்படிப் பல வகையான மகிழ்வான விஷயங்கள் சேர்ந்ததாக உள்ளது. இப்படித் தொடர்ச்சியாக ஒரு கால் நூற்றாண்டாக இந்தப்புத்தக சந்தை அனுபவம் இருக்கிறது.முன்பு மாதிரி இப்போது இல்லையே என்கிற ஏக்கம் சிலருக்கு இருக்கும்.
ஆனால் புதிதாக வருகிற இளைஞர்களுக்கு இது ஒரு கொண்டாட்டமான உற்சாகமான அனுபவமாகவே இருக்கிறது.
ஆனால் தரமான புத்தகங்கள் அதற்கான இலக்கிய மதிப்பு இதெல்லாம் பழைய புத்தக கண்காட்சிகளில் இருந்தது போல் இப்போது இல்லை என்று தோன்றுகிறது.சில புத்தகங்கள் வந்து பெரிதாகப் பேசப்படும்,அதற்கான தகுதியும் நியாயமும் உள்ளது என்பதை வாசிப்பின் மூலம் அறிய முடியும். ஆனால் இன்று புற்றீசல் போல நிறைய புத்தகங்கள் வருகின்றன. அந்தப் புத்தகக் கண்காட்சி முடிவதற்குள் கூட நம்மால் முக்கியமாகப் படிக்கப்பட வேண்டிய புத்தகங்கள் பற்றிச் சில ஆளுமைகள் குறிப்பிட்டாலும் கூட அதெல்லாம் ஒரு மேம்போக்கான புத்தகக் குறிப்புகளாக மட்டும்தான் இருக்கின்றன. ஓர் ஆழமான வாசிப்பு ஆழமான மதிப்புரைகள் கூட இன்றைக்கு இலக்கிய இதழ்களில் வருவதாகச் சொல்ல முடியவில்லை.வாசிப்பவர் எண்ணிக்கை பெருகியிருந்தாலும் அதில் ஆழம் இருக்கிறதா என்பது சந்தேகமாக இருக்கிறது.சமுதாய மாற்றங்கள் ஏற்படுத்தும் புத்தகங்களும் அருகி வருகின்றன.
சென்னை புத்தகக் காட்சிக்கு ஏராளமான பேர் வருகிறார்கள் என்பது உண்மைதான். பலரும் இளைஞர்களாக இருக்கிறார்கள்.ஆனால் முன்பு போல் தீவிரவாசிப்பு உள்ளவர்களா என்பது கேள்விக்குறி.வாசிப்பு பழக்கம் இல்லாதவர்களும் வருகிறார்கள். பல்வேறு சமூகத்தினுடைய பல்வேறு கண்ணிகளிலிருந்து இந்த புத்தகசந்தையில் கலந்து கொள்கிறார்கள். இது ஆரோக்கியமான ஒன்றுதான். அதாவது புத்தகச்சந்தை நிகழ்ந்தால் பல லட்சம் பேர் வருவார்கள் என்பது உத்திரவாதம் ஆக்கப்பட்டுள்ளது.அதே அளவில் ஆழமான வாசிப்பும் சில ஆண்டுகளில் சாத்தியப்படும் என்று நம்புகிறோம்.அப்படி நடந்தால் இந்தச் புத்தகச்சந்தை சமுதாயத்தில் பெரிய நன்மையை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.
கலை இலக்கியத்திற்கு மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதம் !
-எழுத்தாளர் பெருமாள் முருகன்
சென்னை புத்தகக் கண்காட்சி ஒரு பண்பாட்டு நிகழ்வாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எழுத்தாளர்கள், வாசகர்கள், பதிப்பாளர்கள் எல்லாருமே இதை எதிர்பார்க்கிறார்கள். சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டித்தான் பதிப்பாளர்கள் பல நூல்களை வெளியிடுகிறார்கள். மாவட்டம் தோறும் இந்தக் கண்காட்சிகள் நடந்தாலும் கூட சென்னை புத்தகக் கண்காட்சிக்கு இருக்கக்கூடிய முக்கியத்துவம் கொஞ்சம் கூட குறையவில்லை. அதை ஒட்டித்தான் புதிய நூல்கள் வெளியிடுவது மறுபதிப்பு செய்வது போன்றவை நடக்கின்றன.அந்த வகையிலேயேதான் பதிப்பகங்களும் திட்டமிடுகின்றன. அதேபோல எழுத்தாளர்கள் சென்னை புத்தகக் கண்காட்சியில் தங்களுடைய ஒரு நூலாவது வந்துவிட வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறார்கள். அதேபோல வாசகர்களும் இதை எதிர்பார்க்கிறார்கள். அதற்கு முக்கியமான காரணம் மற்ற மாவட்ட புத்தகக் கண்காட்சிகளில் பெரும்பாலும் புத்தகம் விற்பனை செய்யக்கூடிய கடைகள் தான் இடம்பெறுகின்றன. சென்னை புத்தகக் கண்காட்சியில் பெரும்பாலும் பதிப்பகங்களே வந்து அவர்களே விற்பனைக்குக் கடை போடுகிறார்கள். அதனால் விரும்பிய புத்தகங்களை வாங்கலாம் . எந்தப் பதிப்பகம் வெளியிட்டு.என்னென்ன புத்தகங்கள் வந்திருக்கின்றன என்று தெரிந்துகொண்டு நேரடியாகப் போய் வாங்க முடியும். அந்த மாதிரியான வாய்ப்பு இப்போது வாசகர்களுக்கு இங்கே கிடைக்கிறது.இக் கண்காட்சியில் நிறைய எழுத்தாளர்கள் வருகிறார்கள். எழுத்தாளர்கள் - வாசகர்கள் சந்திப்புகள் நடக்கின்றன. வாசகர்கள் அவர்களைச் சந்தித்துப் பேசுவதும் புத்தகங்களில் கையொப்பம் பெறுவதும் என வாய்ப்புகள் அமைகின்றன.
இதெல்லாம் இருக்கக்கூடிய காரணத்தினால் சென்னை புத்தகக் கண்காட்சி கலை இலக்கியத்திற்கு மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதம் போல அமைந்திருக்கிறது. அது ஒரு பண்பாட்டு நிகழ்வாகவும் மாறி இருக்கிறது.நான் 1990 களிலிருந்து பல ஆண்டுகளாக இந்த புத்தகக் கண்காட்சிக்கு வந்து கொண்டிருக்கிறேன்.
அப்போதெல்லாம் இருந்ததைவிட இப்போது மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்து இருக்கிறது. வாசகர் எண்ணிக்கை கூடி இருக்கிறது. இந்த மாதிரி நிறைய மாற்றங்கள் நடந்து இருக்கின்றன.
அங்கே சென்று கடைகளைப் பார்ப்பது, புத்தகங்களைப் பார்ப்பது, எழுத்தாளர்கள் வாசகர்களைச் சந்திப்பது, பேசுவது எல்லாமே மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றுதான் .இது ஓர் எழுத்தாளருக்கு மிக முக்கியமானது என்று கருதுகிறேன்.
என்னைப் பொறுத்தவரைக்கும் என்னுடைய நூல்கள் இப்போது கிட்டத்தட்ட ஐம்பது நூல்கள் காலச்சுவடு பதிப்பகம் மூலமாக வெளிவந்திருக்கின்றன. இவை எல்லாமே புத்தகக் கண்காட்சியில் கிடைக்கின்றன .இப்போது ஆங்கிலத்தில் வந்துள்ள எனது நூல்களும் இங்கே கிடைக்கின்றன.நான் இப்போது புத்தகங்கள் வாங்குவது குறைந்து விட்டது.போகும்போது வாசகர்களைச் சந்திப்பது, கையொப்பமிடுவது, அவர்களுடன் பேசுவது, நண்பர்களைச் சந்திப்பது என்று என் நேரம் சென்று விடுகிறது.
ஆனால் அது மிகவும் மகிழ்ச்சியாகக்தான் இருக்கிறது .
தமிழில் படிக்கிற வாசகர்களுடைய எண்ணிக்கை மிகவும் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்றுதான் தோன்றுகிறது. குறிப்பாக நவீன இலக்கியம் படிப்பவர்களும் அதிகரித்து வருகிறார்கள். இது ஆச்சரியப்பட மட்டுமல்ல மகிழ வேண்டிய ஒரு செய்தி.முன்பு எழுத்தாளர்களைச் சந்திப்பது கையொப்பம் பெறுவது மிகவும் அரிதான ஒன்றாகவே இருக்கும். இன்று வரிசையில் நின்று பேசுகிறார்கள், கையொப்பம் வாங்குகிறார்கள். இது ஒரு நல்ல ஆரோக்கியமான செயல்.இந்தக் கண்காட்சி நடைபெறும் அனைத்து நாட்களும் செல்ல வேண்டுமென்றுதான் எனக்கு ஆசை. ஆனால் நான் நாமக்கல்லில் இருந்து சென்னை வரவேண்டும்.
பெரிய பதிப்பகங்கள் மட்டுமல்ல சிறு பதிப்பகங்களும் இங்கே கடை போட்டுள்ளதால் அனைத்து நூல்களும் கிடைப்பதற்கு வாசகர்களுக்கு பெரிய வாய்ப்பாக இருக்கிறது. அதனால் தான் இவ்வளவு பேர் வருகிறார்கள்.எனவே இந்தச் சென்னை புத்தகக் கண்காட்சி முக்கியமான ஒன்றாகவே எனக்குப் படுகிறது. இங்கே சென்று வருவது ஒரு மகிழ்ச்சிகரமான உற்சாகம் தரக்கூடிய அனுபவமாக இருக்கிறது.
இப்போதெல்லாம் யாரும் புத்தகம் படிப்பதில்லை என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் .அந்த நிலையில் இவ்வளவு பேர் இங்கே வந்து புத்தகம் வாங்குவது உண்மையிலே எனக்குப் பிரமிப்பாக இருக்கிறது.
ஓர் எழுத்தாளராக என்னைப் பொறுத்தவரை நமது புத்தகங்களை யார் வாசிக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது .அவர்களது எண்ணங்களை அறிந்து கொள்ள முடிகிறது.முன்பு வாசகர்கள் தனியே எழுத்தாளர்கள் தனியே என்று இருப்பார்கள். இந்தக் கண்காட்சி இருவரும் இணைவதற்கான நல்லதொரு வாய்ப்பாக இருக்கிறது.அவர்களுடன் கலந்து பேசிட சில நிமிடங்கள் ஒதுக்க ஓர் எழுத்தாளராக நான் மிக மிகவும் விருப்பமாக இருக்கிறேன். இதற்கு
முன்னாடியெல்லாம் எனக்குள் ஒரு சோர்வு இருக்கும் .தமிழில் யாரும் புத்தகங்கள் படிப்பதில்லை, எந்த எதிர்வினையும் ஆற்றுவதில்லை என்கிற சலிப்பு நிலை இருந்தது. ஆனால் இந்தக்
கண்காட்சிக்கு வரும்போது இவ்வளவு பேர் வாங்குவதையும் படித்து விட்டு வந்து கருத்துகள் சொல்வதையும் பார்க்கும்போது உண்மையிலேயே நாம் இன்னும் எழுத நினைத்திருக்கக் கூடிய விஷயங்களை எல்லாம் எழுதவேண்டும் என்கிற உற்சாகம் கலந்த உணர்வெழுச்சி வந்து விடுகிறது.இது ஓர் எழுத்தாளனுக்கு மிக முக்கியம். அது அவனது செயலூக்கத்தைக் குறையாமல் பார்த்துக் கொள்ளும்.நான் எட்டாம் தேதி வந்தேன் மீண்டும் 17, 18, 19 தேதிகளில் சென்னை புத்தகக் காட்சிக்கு வருவேன். 18ஆம் தேதி காலச்சுவடு அரங்கில் வாசகர்களைச்சந்தித்து கலந்துரையாட இருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த அனுபவத்தை எதிர்நோக்கி இருக்கிறேன்.
மதுகேசவ் பொற்கண்ணன் - நூல் சேகரிப்பாளர்
புத்தகங்கள் மீது பெரிதும் ஆர்வமாக உள்ள நான், சென்னை புத்தகக் கண்காட்சியைத் தவற விடுவதே இல்லை. இப்படி 90களில் இருந்து தொடர்ந்து சென்று வருகிறேன்.புத்தகக் கண்காட்சி ஜனவரி மாதத்தில் எனக்கு ஒரு திருவிழாக் கொண்டாட்ட மனநிலையைக் கொண்டு வந்துவிடும்.
காயிதே மில்லத் கல்லூரி, தீவுத்திடல் .பச்சையப்பன் கல்லூரி எதிரில் என்று பல இடங்கள் மாறி இப்போது நந்தனம் ஒய்எம்சிஏ வில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.ஒவ்வொரு கண்காட்சியும் எனக்கு ஏதாவது ஒரு மறக்க முடியாத நினைவைக் கொண்டு வந்து விடும்.
ஒவ்வொரு கண்காட்சியின் போதும் நான் மூன்று நான்கு முறை சென்று வந்து விடுவேன்.வாசகர்கள் புத்தகங்களை அணுகுவது, எழுத்தாளர்கள் வாசகர்கள் உரையாடல் ,அங்கே நடக்கும் கலந்துரையாடல்கள்,வெளியீட்டுக் கூட்டங்கள் என்று புதுப் புது அனுபவங்களைப் பெற்றுத்தரும் ஒரு வாய்ப்பாக நான் இதை பார்க்கிறேன்.இந்த அனுபவங்கள் வேறெங்கும் கிடைக்காது என்று நான் நினைக்கிறேன்.புத்தக அரங்க அமைப்பாளர்கள் எழுத்தாளர்கள் வாசகர்கள் இடையிலொரு நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தும் வாய்ப்பாகவும் இது அமைந்துவிடுகிறது.சில அரங்குகளில் புத்தகங்கள் வெளியிடுவதைப் பார்க்கும் போது போகப்போக வணிக மயமாகி புத்தக வெளியீடு என்பது ஒரு அவசரக் கொண்டாட்டமாக மாறிவரும் சூழ்நிலையும் இருக்கிறது.ஆனால் தீவிரமான வாசகர்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.அவர்களை ஏமாற்ற முடியாது.
இன்று தொழில்நுட்ப பாய்ச்சலில் பளபளவென்று கண்ணைப் பறிக்கும் வகையில் புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதன் உள்ளடக்கம் எப்படி என்பதற்கு உத்திரவாதம் இல்லை. படைப்பு ரீதியான புத்தகங்களில் யார் எழுதியது,அது எப்படிப்பட்டதாக இருக்கும் என்று கணிக்க முடியும். ஆனால் அபுனைவுகளில் தலைப்புகளையும் புத்தக வடிவமைப்பையும் பார்த்து ஏமாந்து விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதை வாசகன் தான் உற்றறிந்து கண்டுபிடித்து வாங்க வேண்டும். எனக்கு புத்தக கண்காட்சிக்குள் நுழைந்து விட்டால் உடனே ஏதாவது வாங்கி நிரப்பிக் கொள்ள வேண்டும் என்கிற ஒரு அவசரமான பதற்றம் வந்துவிடும் .அந்த அளவுக்கு எனக்குப் புத்தகத்தின் மீது காதல் இருப்பதால் அவசரப்பட்டு வாங்கி விடுவேன். இது ஒரு பலவீனம் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு தலைப்பில் நான் வாங்கிவிட்டு அடுத்தடுத்த அரங்குக்கு செல்லும்போது அதே தலைப்பில் அதைவிட நல்ல தரமான புத்தகம் கிடைக்கும் போது எனக்கு ஏமாற்றம் ஆகிவிடும். அப்போது என் நண்பர்கள் சொல்வார்கள். முதலில் முழுவதையும் சுற்றிப் பார்த்து ஒரு வலம் வந்த பிறகு எல்லாவற்றையும் அலசி கணித்துக் கொண்டு பிறகு தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும் என்பார்கள். ஆனால் எனது அவசரம் அதற்குத் தடையாகிவிடும்.வாசகர்கள் புத்தகங்களை அணுகும் போது பல நடைமுறைகளைப் பார்க்க வேண்டி இருக்கிறது.நாம் தேடிப் பிடித்து ஒரு புத்தகத்தை எடுக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி ஒரு விதமானது. நாம் தேடாமலேயே நாம் எதிர்பார்ப்பதை விட உயர்வான புத்தகங்கள் கிடைக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி வேறு வகையில் அது ஒரு பரவசம் போல் இருக்கும்.
புத்தகம் வாங்குவது ஒரு மகிழ்ச்சி என்றால் வீடு வந்து அதைத் தொட்டுத் தடவிப் பார்த்து காகித வாசனையும் அச்சிடப்பட்ட மையின் வாசனையையும் மோந்து சுவாசத்தை உள்ளிழுத்து ரசிப்பது பிறகு படிப்பது வேறு வகையான பரவசம்.
நான் சிறுகச் சிறுகப் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களைச் சேர்த்து பத்தாயிரத்துக்கும் மேல் வைத்திருக்கிறேன். அதுவே ஒரு தனி நபர் நூலகமாக மாறி இருக்கிறது.இந்த நிலையிலும் எனக்கு ஆர்வம் குறையவில்லை.இலக்கியம், அரசியல், வரலாறு, தனிநபர் வரலாறு, தத்துவம் என்று வகைப்படுத்தி வாங்கிய நான் இப்போது சாதிகள் பற்றிய புத்தக வரிசையில் புத்தங்களை வாங்கித் தொகுத்து வருகிறேன்.
வாசகர்களுக்கான அடிப்படை வசதிகள் முன்பிருந்த மாதிரி இப்போது குறைபாடுகள் கொண்டதாக இல்லை. மிகவும் மேம்பட்டு இருக்கிறது.
எப்படி ஆயினும் புத்தகங்கள் வாசிப்பு வாசகர்கள் எழுத்தாளர்கள் என்கிற உலகம் அது வேறு வகையான மகிழ்வைத் தரக்கூடிய மனநிறைவை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. அதற்கு வழிவகை செய்யும் புத்தகக் கண்காட்சி என்றும் தொடர வேண்டும் என்பதுதான் என்னைப் போன்றவர்களின் ஆசை.
சிந்தனைத் திருவிழா!
-மொழிபெயர்ப்பாளர் கே .நல்ல தம்பி
சென்னை புத்தகக் கண்காட்சி எனக்கு எப்போதும் ஒரு விற்பனை மையம் அல்ல; அது ஒரு சிந்தனைத் திருவிழா. ஆண்டின் அந்த நாட்களில் சென்னை நகரமே வேறு சுவாசத்தில் இயங்குகிறது. வாசகர்களும் படைப்பாளிகளும் பதிப்பகங்களும் ஒரே இடத்தில் கூடும் அந்தச் சூழல், இலக்கியம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்கிற நம்பிக்கையை உறுதியாக்குகிறது.
இன்று டிஜிட்டல் உலகம் எல்லாவற்றையும் விரலின் நுனியில் கொண்டு வந்தாலும், ஒரு புத்தகத்தை நேரில் பார்க்கும் அனுபவத்துக்கு மாற்று இல்லை. அச்சுப் புத்தகத்தின் வாசம், அட்டையைத் தொடும் தருணம், பின்னட்டை உரையை வாசிப்பது, உள்ளடக்கத்தை புரட்டிப் பார்ப்பது— எல்லாம் ஒரு உள்ளார்ந்த நெருக்கத்தை ஏற்படுத்துகிறது.
மேலும், சிறிய பதிப்பகங்கள், புதிய எழுத்தாளர்கள், மறக்கப்பட்ட நூல்கள்—இவை எல்லாம் ஒரே இடத்தில் வாசகனைச் சந்திக்க முடியும் என்ற அரிய வாய்ப்பை இந்தக் கண்காட்சி வழங்குகிறது.
அங்கே சென்று வரும் அனுபவம் தனித்துவமானது. எந்தப் புத்தகத்தை வாங்குவது என்று தீர்மானிக்காமல் உள்ளே நுழைந்து, எதிர்பாராத ஒரு நூலைக் கண்டு அதில் சிக்கிக் கொள்வது இனிமையானது. சுமை அதிகமான பைகளோடு வெளியே வரும்போது, உடல் சோர்ந்திருந்தாலும் மனம் இதமாக நிறைவில் இருக்கும். அது அறிவின் சுமை; சோர்வைத் தராத சுமை.
புத்தகக் கண்காட்சி தரும் உணர்வெழுச்சி இன்னும் ஆழமானது. ஒரே நேரத்தில் பல தலைமுறைகள் வாசிப்பில் ஒன்றாக நிற்பதைப் பார்க்கும்போது, இலக்கியம் தொடர்ச்சியான ஓர் ஓட்டம் என்பதை உணர முடிகிறது. ஒரு படைப்பாளிக்கு அது வாசகனை நேரில் காணும் தருணம்; ஒரு வாசகனுக்கு அது படைப்பாளியை மனிதராக உணரும் தருணம். அந்தச் சந்திப்புகளில் தான் இலக்கியம் ஒரு கருத்தாக அல்ல, ஒரு வாழ்வாக மாறுகிறது.
புத்தகக் கண்காட்சி என்பது புத்தகங்களின் சந்தை அல்ல; சிந்தனைகளின் சங்கமம். அங்கே சென்று வருவது புத்தகங்களை வாங்குவதற்காக மட்டும் இல்லை -நம்மையே நாம் மீண்டும் வாசித்துக் கொள்வதற்காக.
ஓர் அறிவுத் திருவிழா!
-பேராசிரியர் மு.ராமசுவாமி
புத்தகம் வாசிப்பு என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றுதான். நான் பல ஆண்டுகளாகப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்று வருகிறேன்; புத்தகங்களை வாங்கி வருகிறேன். ஒரு காலத்தில் புத்தகக் கண்காட்சிக்குச் சென்னை சென்று புத்தகம் வாங்குவது, அதைப்பற்றி பேசிக் கொண்டிருப்பதையெல்லாம் பெருமைக்குரிய ஒன்றாக நினைத்துக் கொள்வோம்.
நண்பர்களிடம் வாங்கிய புத்தகத்தைப் பற்றிப் பேசுவது கலந்துரையாடுவது என்பது அலாதியான இன்பம் தான்.
புத்தகக் கண்காட்சி என்பது எப்போதுமே நினைத்தாலே மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றுதான். அது ஓர் அறிவுத் திருவிழா அல்லவா?
சிலர் கண்காட்சி என்று பார்த்துவிட்டு மட்டும் செல்வார்கள். சிலர் புத்தகச் சந்தை என்று வாங்குவதற்கு வருவார்கள்.
முன்பெல்லாம் கையில் உள்ள பணம் எப்போது தீரும் என்று பார்த்துக் கொண்டிருப்போம். தீர்ந்த பிறகு வெறுமனே சுற்றுவதற்குப் பிடிக்காது. திரும்பி வந்துவிடுவோம். இப்போது செலவழிக்கும் முறை மாறி இருக்கிறது. ஜி - பே என்று ஒரு வசதி இருப்பதால் விரும்பிய புத்தகத்தை இப்போது வாங்கிக் கொண்டு வந்து விடலாம்.
ஒரு காலத்தில் நாம் வாங்க விரும்புகிற, தேடுகிற புத்தகத்தை எந்த இடத்தில் வாங்குவது? எந்த அரங்கில் வாங்குவது? என்பதை அறிவது சிரமமானதாக இருந்தது .இப்போது காலமாற்றத்தில் என்னென்ன புத்தகங்கள் வந்திருக்கின்றன? எந்த பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன?எந்த அரங்கில் கிடைக்கும் என்று மொபைல் போனிலேயே பல்வேறு வகையான விளம்பரங்கள், தகவல்கள் வந்து கொட்டுகின்றன.இந்த வேலைகளைப் புத்தகங்களை எழுதிய படைப்பாளிகளும் வெளியிடும் பதிப்பாளர்களும் நண்பர்களும் என்று பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.அந்த வகையில் புதிய புத்தக வரவுகளை அறிவது எளிதாக இருக்கிறது. எனவே தேடி அலையும் சிரமம் இப்போது இல்லை. அதுவும் நமது செல்பேசிக்கு அந்தத் தகவல் வந்து சேரும் போது புத்தகத் தெரிவு எளிதாக இருக்கிறது.
நான் பொதுவாக என் துறையான நாடகத்துறை சார்ந்தும் திரைத்துறை, சமூகம், அரசியல் சார்ந்தும் புத்தகங்கள் வாங்குவேன். நல்ல நாவல், நல்ல கவிதை நூல் என்று யாராவது நண்பர்கள் பரிந்துரைத்தால் அதை வாங்கிப் படிப்பது உண்டு. முன்பெல்லாம் ஈர்ப்பு வரும் புத்தகங்களை வாங்கி சரி இருக்கட்டுமே என்று அதை வாங்கி வைத்துக் கொள்வது வழக்கம். ஆனால் அதைப் படிக்க முடியாமல் அடுத்த புத்தகக் காட்சி வரை வைத்திருப்பது தெரியும் போதுதான் இன்னும் படிக்கவில்லையே என்று தோன்றும். அப்போது நமக்கே ஒரு மாதிரியாக இருக்கும்.
நிறைய படிக்க வேண்டும் என்று மனம் விரும்பினாலும் உடல்நிலை ஒத்துழைக்க வேண்டும். இப்போது என் வயதில் அதிகமாகப் படிக்க முடியாது. எனவே தேர்ந்தெடுத்து தான் இப்போது வாங்குகிறேன்.
தேவையில்லாத புத்தகங்களை நான் வாங்குவது இப்போது குறைந்துவிட்டது. ஏனென்றால் அதை எப்போது படிப்போம் அதுவரை கண் பார்வை எப்படி இருக்கும் என்று ஒரு அச்சம் இருப்பதால் மிகத் தேவையானதை மட்டும் தேர்வு செய்து வாங்கிக் கொள்கிறேன்.
ஒரு காலத்தில் ஆசையாக வாங்கிய புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அவற்றை எல்லாம் இப்போது வைத்துப் பராமரிப்பது சிரமமாக இருக்கிறது. எனக்குப் பின் என்ன ஆகும் என்ற கவலையும் வருகிறது .சில புத்தகங்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பேன். யாருக்கும் இரவில் கூட தர மாட்டேன். அப்போது எனது இணையர் அவர்கள் கூறுவார் .'வாழ்வில் எதுவும் நிச்சயம் இல்லை, இதை மட்டும் ஏன் இப்படிப் பாதுகாக்கிறீர்கள் ?'என்பார் அப்போது அது சாதாரணமாகத் தெரிந்தது.வயது முதிர்ந்த நிலையில் இப்பொழுது அதன் பொருள் விளங்குகிறது.
ஒரு காலத்தில் சென்னையில் தான் புத்தகக் காட்சி நடக்கும். அதற்கு செல்வதே சாகசமான பயணமாக இருக்கும். இப்போது மாவட்டம் தோறும் நடக்கின்றன .வாசகர்கள் எளிதில் வாங்கிக் கொள்கிறார்கள். அது சார்ந்த தகவல்களைப் பகிர்ந்து கொள்வது இன்று சுலபமாக இருக்கிறது.
இது இந்தக் காலத்தில் வாய்த்துள்ள நல்ல வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும்.
எப்படியாக இருந்தாலும் புத்தகக் கண்காட்சி என்பது இது ஓர் அறிவுத் திருவிழா என்பதில் சந்தேகம் இல்லை.
கண்காட்சியில் புத்தகங்களைப் பார்ப்பதும் அது சார்ந்த நண்பர்களைச் சந்திப்பதும் உரையாடுவதும் எழுத்தாளர்களுடன் சந்திப்பதும் என்று மகிழ்ச்சிக்குரிய தருணங்களை இந்த புத்தகக் கண்காட்சி ஏற்படுத்திக் கொடுக்கிறது .அந்த வகையில் புத்தகக் கண்காட்சி என்பது ஒரு நல்லதொரு உணர்வை மனதில் ஏற்படுத்த கூடிய ஒன்றாகவே இருக்கிறது.
வாசகர்களை தக்க வைக்கும் விழா!
-திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி
நான் உதவி இயக்குநராக இருந்த பொழுது நூல்கள் வாங்குவதற்குப் பதிலாக ஒட்டுமொத்த கேட்டலாக் அதாவது நூல் பட்டியல்களை மொத்தமாக வாங்கிக் கொண்டு செல்வேன் .
பின்னாளில் அவற்றிலிருந்து தேர்வு செய்து வாங்கிப் படிப்பேன் .
எப்பொழுதும் புத்தகக் கண்காட்சி என்றால் எழுத்தாளர்களை அடையாளம் காண்பது மிகவும் சிரமம் .அப்படியே கண்டால் கூட அருகில் சென்று பேசத் தயக்கமாக இருக்கும் .
இன்று வாசிக்கும் பழக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்று தெரியவில்லை.
இது போன்ற புத்தகக் காட்சிகள் வாசிப்புப் பழக்கத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கின்றன
என நினைக்கிறேன் .
இருப்பினும் எழுத்தாளர்கள் வாசகர்கள் சந்திப்பு, வாசகர்களுக்குப் புத்தகங்களின் அறிமுகம் கிடைப்பது என்று இது இன்று ஒரு பண்பாட்டுச் செயலாக மாறி வருகிறது.இது புத்தகக் கண்காட்சியால் ஏற்படும் நல்ல விளைவு என்று கூறலாம்.
இது ஒரு பண்பாட்டுத் திருவிழா!
-பேராசிரியர் கு.பத்மநாபன்
(பார்வை மாற்றுத்திறனாளி)
”சென்னை புத்தகக் கண்காட்சிசென்னையின் பண்பாட்டு அடையாளமாக இருக்கிறது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் எங்களுடைய கல்வி வளர்ச்சியில் அது ஒரு தவிர்க்க முடியாத ஒரு பங்காக மாறி இருக்கிறது.இந்தத் தருணத்தில் எத்தனையோ சுவையான நிகழ்ச்சிகள் மனதில் நினைவுகளாக நிழலாடிக் கொண்டிருக்கின்றன. 1996 இல் தான் நாங்கள் முதன் முதலில் சென்னை புத்தகக் கண்காட்சிக்குப் போக ஆரம்பித்தோம்.அப்போது நான் சென்னை சிறித்தவக் கல்லூரியில் பிஏ இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன்.
அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் சென்னை புத்தகக் கண்காட்சிக்குப் போவது என்னுடைய வழக்கம் . இது என்னுடைய இருபதாவது ஆண்டு.புத்தகக் கண்காட்சி தொடர்ந்து நடக்கக்கூடிய வெவ்வேறு நாட்களில் திரும்பத் திரும்பப் போவது எங்கள் வழக்கம். அப்போதெல்லாம் எதிர்பாராத ஒரு பழைய நண்பரைச் சந்திப்போம்.அவரை எப்போதோ எங்கோ ஒரு இலக்கிய நிகழ்ச்சியிலோ,ஒரு தேநீர்க் கடையிலோ கூட சந்தித்து பேசி இருப்போம் அப்படிப்பட்ட நண்பரை திடீரென்று சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
அந்தக் காலத்தில் மணிவாசகர் பதிப்பகத்தின் அங்காடியில் ஒரு சிறிய இரும்பு நாற்காலி போட்டு மெய்யப்பன் ஐயா அவர்கள் அமர்ந்திருப்பார்கள்.அது இன்றும் ஞாபகத்தில் உள்ளது.ஐயா அவர்கள் எங்களைப் பற்றி நலம் விசாரித்து எந்த ஊர் என்ன படிப்பு என்றெல்லாம் கேட்பார்கள்.
அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு நாள் பார்த்தபோது ஐயா திடீர் என்று ஒரு புத்தகத்தை எடுத்துக் கையில் கொடுத்து "இந்தப் புத்தகத்தை நீங்கள் வாங்கியே தீரணும் "என்றார்.இந்தப் புத்தகம் லாபத்துக்காக நான் வெளியிடவில்லை.இந்தப் புத்தகத்தை படித்தால் கல்லூரி மாணவர்களாகிய உங்களுடைய அறிவு, தமிழ் அறிவு மேம்படும் என்றார் .அந்தப் புத்தகத்தின் பெயர் 'தமிழர் பண்பாட்டு மானுடவியல்' அதனுடைய ஆசிரியர் பக்தவத்சல பாரதி.
மானுடவியல் என்கிற ஒரு புதிய துறையை தமிழில் விரிவாக எளிமையாக அறிமுகப்படுத்தக்கூடிய ஒரு நூலாக அந்த நூல் இருந்தது. அதன் மதிப்புரை சிறப்பாக இருந்தது. அதில் ஒரு வரி வரும் தமிழால் தமிழில் முடியும் என்பதற்காகவே இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது .அதாவது புதிய கருத்துகளை அரிய கருத்துக்களை தமிழில் சொல்ல முடியும் என்பதற்காகவே அது எழுதப்பட்டிருக்கிறது என்ற பொருள்படும்படி இருக்கும்.அது மறக்க முடியாத அனுபவம்.
அங்கே நிறைய எழுத்தாளர்களை சந்திப்போம். கவிஞர் மனுஷ்ய புத்திரனைப் பாப்போம். காலச்சுவடு பதிப்பாளர் கண்ணன் அவர்களைப் பார்ப்போம்.எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களை அடிக்கடி பார்ப்போம். இது மாதிரி பல இனிய நினைவுகள்.
ஒவ்வொரு முறை புத்தகங்கள் வாங்கும் போதும் அதில் புத்தக எண்ணையும் வாங்கிய தேதியையும் குறிப்பிடுவோம்.இப்படி வாங்கிய
புத்தகக் கண்காட்சி நூல்களினுடைய ஒட்டுமொத்த பெயர்ப் பட்டியலை வைத்து அந்தக் காலகட்டத்தில் எங்களது மனநிலை எப்படி இருந்தது என்பதை அறிய முடியும்.
அப்படிக் கல்லூரி காலகட்டத்தில் நான் வாங்கியவை பெரும்பாலும் இடதுசாரி நூல்கள். பிறகு சில ஆண்டுகள் கழித்து நான் வாங்கிய நூல்கள் எல்லாம் கொஞ்சம் இடதுசாரி நூல்களில் இருந்து விலகி ஆன்மிகத் தேடல் மிக்க நூல்களாக மாறிவிட்டன.அப்போதெல்லாம் நாங்கள் கல்லூரி மாணவ நண்பர்கள் இணைந்து கொண்டு புத்தகக் கண்காட்சிக்குச் செல்வோம்.வீட்டிலிருந்து புளிசாதம் , தயிர் சாதம் கட்டிக்கொண்டு மதியம் ஒரு மணிக்கு கண்காட்சிக்குள் சென்றால் திரும்புவதற்கு இரவு 9 மணி தாண்டி விடும்.வாங்க மறந்து போன நூல்களைக் கடைசியில் அவசரம் அவசரமாகத் தேடி வாங்குவது ஓர் இனிய அனுபவம்.
என் வாசிப்பு ஆர்வத்தை புத்தகங்கள் மீதான ஆர்வத்தை தோன்றியதில் என் அம்மாவுக்கு முக்கிய பங்கு உண்டு. என்னால் படிக்க முடியாத நிலையிலும் அம்மா புதிய புத்தகங்களை வாங்கி என் பெயரை அதில் எழுதி இருப்பார்.நான் அதை தொட்டுப் தடவிப் பார்த்து பரவசம் அடைவேன். நான் வீட்டுக்கு யார் வந்தாலும் ஏதாவது ஒரு பக்கத்தைப் புரட்டி அதைப் படிக்க வைத்துக் கேட்பேன். இப்படி அம்மா குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு சிறந்த வாசிப்பாளராக இருந்தார். நல்ல நல்ல விஷயங்களை வாசித்துக் காட்டுவார். இப்படி எனக்குள் வாசிப்பு ரசனையை வளர்த்ததில் அம்மாவின் பங்கு பெரியது.
புத்தக கண்காட்சியில் புத்தகங்கள் வாங்குவதற்காக என் அப்பா ஆர் டி போட்டு பணம் சேமிப்பார்.அந்த வைப்புத் தொகைப் பணத்தை வைத்து தான் புதிய புத்தகத்தை வாங்குவோம் . இப்படிப் புத்தக கண்காட்சி என்று நினைக்கிற போது இனிய நினைவுகள் வந்து கொண்டே இருக்கின்றன.புத்தகங்களால்தான் நாங்கள் வளர்ந்தோம்; மலர்ந்தோம்.இந்தப் பண்பாட்டுத் திருவிழா இன்னும் நூறு ஆண்டுகள் தொடர்ந்து சென்னையில் அடையாளமாக நிகழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.”
-