அந்தக் கதையில் கடைசி வரை
கிளி வரவே இல்லை!

அந்தக் கதையில் கடைசி வரை கிளி வரவே இல்லை!

என் முதல் இரண்டு நாவல்களான அறுபடும் விலங்கு, கருப்பு விதைகள் எழுதப்பட்டுப் பத்தாண்டுகால காத்திருப்புக்குப் பின் வெளியாகின. அறுபடும் விலங்கு நாவலை பதிப்பித்திருந்தவர் முரண்களறி படைப்பக பதிப்பாளர் கல்லூரி விரிவுரையாளர் யாழினி முனுசாமி.  தடாகம் இணையத்தார் அவரிடம் ஒரு தொடர் எழுதக் கேட்கிறார்கள்.

அவர் அப்போது முனைவர் பட்டத்துக்கான ஆய்வில் இருந்ததால் தனக்கு நேரமில்லை கரன் கார்க்கியிடம் பேசிப் பாருங்கள் என்று சொல்ல, தடாகம் இணைய இதழை நடத்தும் நண்பர் முகுந்தன் அவரது நண்பருடன் அண்ணா சாலையிலுள்ள ஒரு காபி கடையில் சந்தித்துப் பேச, எழுதி வைத்திருந்த நான்கு நாவலில் இரண்டு புத்தகமாகிவிட்டதால் கையெழுத்துப் பிரதியாக இருக்கும் மற்ற இரண்டில் ஒன்றை தரலாம் என்கிற எண்ணத்தில் ஒப்புக் கொண்டேன்...  அப்போதெல்லாம் நான் கையினால் எழுதுகிற பண்புள்ளவன். பெரிய லாங் சைஸ் நோட்டு புத்தகங்களில் எழுதி பிறகு இரண்டு முறையாவது திருத்தி எழுதிப் பார்த்து, முடிவாக ஒற்றைத் தாள்களில் எழுதி பதிப்பகங்களுக்கு தருவது வழக்கம். எனது ஆறு நாவல்களும் பேனாவால் எழுதப்பட்டவையே ஏழாவது நாவலான சட்டைக்காரியை மடி கணினியில் எழுத முயன்றேன். அது மிக சுலபமானதாக இருந்ததால் இப்போது எதையும் கணினியில் எழுதுவது வாடிக்கையாகிவிட்டது.

எழுதி வைத்திருந்த துறவிகளின் தோட்டம், வெந்து தணிந்தது காடு நாவல்களை அலமாரியில் தேடிய போது அந்த இரண்டு நாவல்களுமே பூச்சரித்து நாசமாக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி. அந்த பயங்கரம் ஒரு வாரம் என்னை மிக மோசமான மனநிலைக்கு தள்ளியது. ஆனால் அதிலிருந்து மீள வைத்தது புதிதாக எழுதத் தொடங்கிய கறுப்பர் நகரம் நாவல்தான்.. அந்த நாவலை எழுதுவதற்கான திட்டம், ஒரு கிளியின் மூலம் கருவாகி மனதிலே இருந்தது.

அது உருவானது இப்படிதான்.

2006 இல் வீட்டு மாடியில் காயம்பட்ட கிளியொன்று விழுந்து கிடந்தது அதை நானும் என் எட்டு வயது மகனும் எடுத்து மருந்திட்டு வளர்த்துக் கொண்டிருந்தோம். அந்த கிளி குரல் எழுப்பாததால் அது ஊமைக் கிளியென்பதால் அதன் அம்மா அப்பாவால் துரத்தப்பட்டு விட்டதென்று நான் ஒரு முட்டாள் தனமான கதையை அவனுக்கு சொல்லி வைத்திருக்க, சில வாரங்களில் அந்த கிளி வழக்கமான கிளிகளை போலவே கத்த ஆரம்பித்தது. உடல் நலம் தேறியதால் அது கொஞ்சம் சரியாகி விட்டிருந்தது போல தெரிகிறது. எனவே நான் அதற்கு மேலும் தீனிகள் தந்து பராமரிக்க, ஒரு நாள் அது கூண்டை விட்டு வெளியே வர முயன்றதால் கூண்டிலிருந்து வெளியே எடுத்து தரையில் வைத்த கணத்தில் அது

 சட்டென பறந்து போய்விட்டது. அப்படி நடக்குமென்று நாங்கள் எதிர்பார்க்காததால் எனக்கும் மகனுக்கும் மிகுந்த அதிர்ச்சியாகி ஏமாற்றத்துடன் பார்க்கிறோம் அது எங்கே போனதென்றே தெரியவில்லை. அதே கவலையோடு நான் வெளியேபோய்விட்டு பகலில் வீடு வந்துப் பார்க்கிறேன். அந்த கிளி மீண்டும் என் வீட்டில் இருக்கிறது.

பத்துப் பதினைந்து வீடு தள்ளி போய் அந்தக் கிளி காகங்களால் தாக்கப்பட்டு பறக்க முடியாமல் விழுந்திருக்கிறது. அங்கே இருந்த சிறுவர்கள் நான் வளர்க்கும் கிளி என்று தெரிந்ததால் திரும்பக் கொண்டு வந்து மகனிடம் தந்திருக்கிறார்கள். அது மீண்டும் பறந்து போய் காயப்படாமல் இருக்க அதன் இறகுகளை வெட்டி விட்டேன். பிறகுதான் தெரிந்தது அது போன்று எல்லாம் செய்யக்கூடாது என்று. அங்கிருந்த பூனைகள் அந்த கிளியை வேட்டையாட சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கும் . அதனால் நல்ல உறுதியான கூண்டில்வைத்தோம். பிறகு எங்கள் கிளியை தேடி இன்னொரு கிளி வரத் தொடங்கிய அதிசயம் நடக்கத் தொடங்கியது.

எங்கிருந்தோ வரும் அந்த கிளி முருங்கை மரத்தில் வந்தமர்ந்து குரல் கொடுக்க, எங்கள் கிளியும் பதிலுக்கு குரல் கொடுக்கும் என் மகன் நம் கிளியின் அம்மா மகன் கிளியை தேடி வந்துவிட்டதாக ஒரு கதை சொன்னான். மிக சரியாக ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு அந்த கிளி குரல் கொடுக்க, என் கிளி பதில் குரல் கொடுக்க, இது தினமும் நடக்க ஒருநாள் கிளியை கூண்டில் இருந்து எடுத்து வெளியே விட, அது கைப்பிடி சுவரில் நடந்து மாடிக்கு போய் தேடி வந்த கிளியுடன் கொஞ்சி விளையாடிக்கொண்டிருக்கும். அரை மணி நேர விளையாட்டுக்குபின் அந்த கிளி பறந்து போய்விடும். இப்படியாக இரண்டு மாதம் போய்க்கொண்டிருந்தது இந்த சூழலில் நாங்கள் கல்யாணத்துக்காக ஊருக்குப் போக வேண்டியிருந்தது, ஊருக்கு போனாலும் என் கவனம் முழுக்க கிளியிடமே இருந்தது. அதைத் தேடி வரும் கிளி,  கூண்டிலிருக்கும் என் கிளி குறித்த யோசனையில் நான் கல்யாணம் முடிவதற்கு முன்பே

சென்னைக்கு காலை ஆறு மணிக்கு வந்து விட்டேன். அதுதான் கிளி வருகிற நேரம், எதிர் பார்த்தபடியே கிளி முருங்கை மரத்திலமர்ந்து கத்திக் கொண்டிருந்தது. நான் கூண்டிலிருந்து என் கிளியை எடுத்து மாடி கைப்பிடி சுவரில் வைத்தேன். அது அவசரப்பட்டு படபடவென்று சிறகடித்தபடி முருங்கை மரத்தில் விழுந்து தரையில் விழ, அங்கிருந்த பூனையொன்று அந்த கிளியை பாய்ந்து பிடித்துவிட்டது.  எப்படியோ அந்த பூனையிடமிருந்து அந்த கிளையை மீட்டேன் என்றாலும் சில நிமிடங்களில் அந்த கிளி என் கையிலேயே உயிரை விட்டது. அதன் பிறகு தேடி வரும் கிளி வருவதேயில்லை. அந்த துயரத்தை என்னால் தாங்கவே முடியாமல் இருந்த சூழலில் எனக்கு தெரிந்த இரட்டை கொலை செய்த ஒரு கிழவனின் குடிசையொன்று ரயில் ரோட்டோரமாய் சிதைந்து கிடப்பதை எனக்கு யாரோ சொன்னார்கள். அந்த இரண்டு காதல் கிளிகளும் என்னை படாதபாடுபடுத்தின... கிளியின் மரணத்துக்கு என் முட்டாள் தனமும் ஒரு காரணம். அதன் பிறகு கிளிகளைப்பற்றி நிறைய படிக்க தொடங்கினேன். மனம் மட்டும் அல்லாடிக் கொண்டிருக்க அந்த இரட்டை ஆயுல் தண்டனை பெற்று விடுதலையான கிழவன் தன் குடிசைக்கு வந்து, அவன் வீட்டில் ஒரு கிளி தஞ்சம் புக, எனக்கு ஏற்பட்ட கிளிகளின் அனுபவம் கிழவனுக்கும் ஏற்பட அவன் காதலை மனித உறவுகளை அந்த கிளியின் வழியாக உணருவதாக கரு என் மனதில் உருவாக.... ஒரு ரயில் பயணத்தின் போது என் நண்பன் அன்பு சமரனிடம் அதை சொல்ல அவன் அருமையா இருக்கு என பாராட்ட.... அது மனதில் சுற்றி சுழன்றுக்கொண்டிருந்தது.

ஒரு வாய்ப்பு கிடைத்ததும் மளமளவென எழுத தொடங்கி ஏழு அத்தியாயங்கள் தடாகம் இணைய இதழில் தொடராகவும் வந்தது.

ஆனால் அந்த கிழவனை நான் எழுத தொடங்கியதும் அந்தக் கதையில் கடைசி வரை கிளி வரவே இல்லை. காரணம் கிழவன் தனக்கான சொந்த வாழ்க்கையை அவன் வழியிலே வாழ்ந்து செத்துப் போகிறான் என்பதாக அந்த நாவல் என் மனம் நிறைவுறும் வகையில் அமைந்து விட்டது. இணையத்தில் அவர்கள் இலக்கிய மதிப்பளித்து முறைப்படுத்தி வெளியிடாததால் ஏழு அத்தியாயங்களுக்கு பிறகு நான் அவர்களுக்கு தொடரை தருவதை நிறுத்திவிட்டேன் என்றாலும் ஆராயி செங்கேணி எனக்குள் முழு ஓட்டத்தை தொடங்கியிருந்தார்கள். அந்த கிழவன் லாங்ஸ் கார்டன் பூங்காவில் மரணித்துப்போகும் வரை அந்த ஓட்டம் நிற்கவில்லை. அப்படி உருவானதுதான் கறுப்பர் நகரம் நாவல். அதை எழுதத் தொடங்கியதும் நான் சிறுவயதில் என் குடிசைப் பகுதியில் சந்தித்த சித்திரங்கள் ஒவ்வொன்றும் என் நினைவுக்கு வர தொடங்கின. நான் எதையும் வரிசைப்படுத்தவோ, திட்டமிடவோ இல்லை ஆனால் எல்லாமும் என் பதிமூன்று வயதுக்கு முன் கண்ட அறிந்த அனுபவத்துக் குட்பட்டது. பேசின் பிரிட்ஜில் இருந்து புதுப்பேட்டை லாங்க்ஸ் கார்டன் குடிசை பகுதி வரையிலுமான அந்த வாழ்க்கை 116 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மை லேடிஸ் பார்க், மூர் மார்க்கெட், சால்ட் கொடார்ஸ் என்கிற சால்த்கொட்டா மற்றும் உயிர்க்காலேஜி, அல்லிக்குளம், நேரு ஸ்டேடியம், ஜெனரல் ஹாஸ்பிட்டல், சைட் ஆம்ஸ் ரோடு, வால்டாக்ஸ் ரோடு, கே.பி பார்க், சுந்தரபுரம், சிவராஜபுரம், நாய்களை கொல்லும் கிடங்கு, புது ஜெகநாதபுரம், நடராஜ் தியேட்டர், பட்டாளம், பென்னி மில், என நான் என் இளம் வயதில் பராக்கு பார்த்த அத்தனை அரசியலும், மனிதர்களும், நிலமுமான காட்சிகளும், ரிக்சா தொழிலாளிகள், காய்கறி வியாபாரிகள், மாட்டிறைச்சி கடை முதலாளி, குறிப்பாக அரசியல் பேசும் பாளையம் மாமா, அவர் எனது தாய் வழி உறவினர், அவரது நண்பர்கள் எல்லோரும் உண்மையான கதாபாத்திரங்கள். அவர்கள் எப்போதும் அரசியல் பேசிக் கொண்டிருப்பார்கள், குழந்தைகளுக்கு இரவு பாடசாலை நடத்துவார்கள். அந்நாட்களில் அவர்கள் எல்லோருமே அரசு ஊழியர்களாக போய்விட்டார்கள். ஆனால் பாளையம் மாமா மட்டும் பெரிய பதவிகளுக்கு போன பிறகும் அந்த குடிசை பகுதியில் இருந்து கே.பி பார்க்கில் கட்டப்பட்ட வாரிய குடியிருப்பில் தான் வாழ்ந்து 2018 இல் மரணித்து போனார்...

ஏறக்குறைய ஆராயி, செங்கேணி என்கிற நாவலின் முக்கிய கதாபாத்திரங்கள் அத்தனையும் என் இளம் வயதில் பார்த்த கதாபாத்திரங்களே. ஆராயி காய்கறி விற்கும் பாட்டி ஒருவரின் மகள், பேய்க்காளி ஒரு நிலக்கரித் திருடன். பேசின் பிரிட்ஜ் அனல் மின் நிலையத்துக்கு வரும் நிலக்கரி அங்கு மலைமலையாக குவித்து வைக்கப்பட்டிருக்கும். அதை திருடுவதற்க்கு இளம் சிறார்கள், பெண்கள், துணிச்சல் உள்ள இளைஞர்கள் வேலி கடந்து அங்கு போய் கரி திருடிக் கொண்டு வந்து தேவைப்படும் சிறு தொழிற்சாலைகளுக்கு விற்பார்கள், பேய்க்காளி கரி திருடும் போது ஒரு முறை காவலர் துப்பாக்கியால் சுட்டு காலில் குண்டடிபட்டு சிகிச்சைக்கு பின் காப்பாற்றப்பட்டவன், அவன் சாராயம் குடிக்கிறவனே தவிர சாராயம் விற்பவன் அல்ல... சாராயம் விற்கிற வேறு ஒரு கேரக்டரை அவன் மீது திணித்து உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் அது..... நான் அறிந்த வரையில் அந்த கதாபாத்திரத்தின் மீதுதான் கொஞ்சம் புனைவை உண்டாக்கினேன் ஆனால் கோவிந்தம்மாள், செல்வம், அன்பு என்கிற இன்னொரு சாராயம் விற்கிறவர்கள் இப்படி பல எதார்த்தமான நான் கண்டுணர்ந்த பாத்திரங்களுடன் கொஞ்சம் புனைவை சேர்த்து உருவாக்கப்பட்ட வரலாற்றின் மீதான புனைவு தான் கருப்பர் நகரம்.

செங்கேணி யாரை தன் வாழ்வாக நினைத்து உயிருக்கு உயிராக நேசிக்கிறானோ அதே ஆராயியை அவன் கொல்கிறான்... ஆனால் அதற்காக இரட்டை ஆயுள் தண்டனை முடிந்து வந்த பிறகும் ஆரயி தன்னால் கொல்லப்பட்டாள் என்பதையே அவன் உணர்ந்திருக்கவில்லை என்பதுதான் எழுத சவாலாக இருந்தது. இரண்டு மாதங்கள் என்னால் அதை எழுத முடியாமல் கண்ணீர் வடித்தபடியே இருந்தேன் என்றாலும் அப்படித்தான் முடித்தாக வேண்டி இருக்கிறது என்கிற துயரத்தில் ஒரு மார்கழி மாத நள்ளிரவில் கடைசி பகுதி முழுவதுமே மிகுந்த கண்ணீரோடு எழுதி முடித்தேன், பிறகும் கூட என் மனம் அமைதி அடையவே இல்லை.

 ஆராயியை நானே கொன்று விட்ட துயரம் என்னுள்ளே நிரந்தரமாக தங்கி விட்டது.

முதல் நாவலை இரண்டு ஆண்டுகளாக எழுதி பத்தாண்டுகள் காத்திருந்தவனுக்கு கருப்பர் நகரம் எழுதி ஐந்து மாதங்களுக்குள் வெளி வந்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அந்த நாவல் என் இலக்கிய வாழ்வின் அடையாளமாகவே மாறும் என்று எனக்கு அப்போது தெரியாது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com