கி.ரா.
கி.ரா.புதுவை இளவேனில்

அவருக்கு மொழி ஒரு சவாலாக இருக்கவே இல்லை!

கி.ரா.நினைவஞ்சலி

இன்னும் சில மாதங்களில் நூற்றாண்டு விழாவை தான் உயிரோடு இருக்கையிலேயே சந்திக்க இருந்தார், கி.ராஜநாராயணன். அதற்குள் இயற்கை அவரைக் கடத்திக் கொண்டது.

தொண்ணூற்று ஒன்பது வயதென்பது மனிதர்களுக்கான வரம்; சிலருக்கு சாபமும் கூட. கி.ரா. தன் கடைசிக் காலம் வரை படைப்பு முயற்சிகளில் ஒரு துவக்ககால படைப்பாளியைப் போல துள்ளிக் கொண்டிருந்தவர்.

நானறிந்து, இப்போதுதான் தமிழ்நாட்டின் ஓர் அரசு,  முதன்முறையாக ஒரு படைப்பாளியை கௌரவப்படுத்தியிருக்கிறது. அரசு மரியாதை, கோவில்பட்டியில் சிலை, அவர் படித்த பள்ளி பழமை மாறாமல் பாதுகாக்கப்படும், அவர் பெயரில் ஓர்அரங்கு என அது தன் விஸ்தரிப்புகளை பகல் முழுக்க அறிவித்துக் கொண்டேயிருந்தது,  என்னை நானே கிள்ளிப்பார்த்துக் கொண்டேன்!

 ஒரு வேளை, நான் கேரளாவில் இருக்கிறேனா என்ற கிள்ளல் அது. இல்லை, நான் தமிழகத்தில் தான் இருக்கிறேன். கேரளாவைப் போல்,ஓர் எழுத் தாளுமையை கௌரவப்படுத்த ஓர் அரசாங்கத்திற்கு இத்தனை கால அவகாசம் தேவைப்பட்டிருக்கிறது. ஒரு வகையில் அது, தமிழறிந்த உலகமெல்லாம் வியாபித்திருக்கின்ற மனிதர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.

இத்தனை தூரம் ஓர் அரசே முன்வந்து கௌரவப்படுத்துகிற அளவிற்கு கி.ரா. முக்கியமான படைப்பாளி இல்லை என சில எதிர்க்கருத்துகளும் முன் வைக்கப்பட்டன. அக்கருத்துகளை முன் வைத்த படைப்பாளிகளை நாம் வழக்கம் போல் அவர் பிறந்த ஜாதியைச் சொல்லி விமர்சித்தோம். அவர்களை நாலந்தர வார்த்தைகளால் அசிங்கப்படுத்தினோம்.

கேரளாவிலிருந்து ஓர் உன்னதத்தை ஓர் அரசு கற்றுக் கொண்டு மேன்மையுறும் போதே, அதே கேரளாவிலிருந்து விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என்ற உயரிய பண்பை நாம் கற்றுக் கொள்ளத் தவறியிருக்கிறோம். நாம் நம் உணர்வு நிலையிலிருந்து அறிவுத் தளத்திற்கு நகர்வதற்கே இன்னும் நெடுங்காலக் காத்திருப்பு தேவைப்படலாம்.

இரண்டு நாவல்கள், இரண்டு குறுநாவல்கள், நூற்றுக்கும் குறைவான சிறுகதைகள், பல கட்டுரைகள் இவை தான் கி.ரா. தன் வாழ்நாளில் படைத்தவை.

தன் சிறுவயது நோய்மையின் பொருட்டு, மிகத் தாமதமாகத்தான்  தன் முப்பதாவது வயதில் எழுத வந்த கரிசக்காட்டு சம்சாரி கி.ரா.  தன் சொந்த நிலத்தில் பயிரிட்டுக் கொண்டிருந்த எளிய சம்சாரியான ராஜநாராயணனுக்கு இரு விஷயங்கள் எழுதுவதற்கு உந்துதலாக இருந்திருக்கக் கூடும் என உத்தேசிக்க முடிகிறது.

ஒன்று, அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து சில காலம் போராட்டம், ஜெயில் என  அலைவுற்ற போது கிடைத்த தன்னலமற்ற தலைவர்களின்  அறிமுகங்களும், அவர்கள் மூலம் கிடைத்த ரஷ்ய இலக்கியப் புத்தகங்களும். ஏழாம் வகுப்போடு தன் முறையான பள்ளிப் படிப்பை நிறுத்திக் கொண்ட அவருக்கு வேறு மாதிரியானதொரு  கல்வி சமூகத்திலிருந்து கிடைக்கப் பெறுகிறது.

இன்னொன்று  தான் பிறந்த இடைச்செவலி லேயே இருந்து எழுதி, அதன் மூலம் பல வாசகர்களின் வருகையை தன் வீட்டிற்கு சாத்தியப்படுத்தியிருந்த கு.அழகிரிசாமியின் நட்பும், தோழமையும். தான் வாசித்தவற்றைப் பற்றிய பகிர்தலுக்கும் விவாதங்களுக்கும் கு.அழகிரிசாமி ஓர் உற்ற தோழனாக உள்ளூரிலேயே கிடைத்தது அவருக்குக் கிடைத்த பெரும் பேறு. பிரசுர

சாத்தியமற்ற அந்நாட்களில், தான் சார்ந்திருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெளிவந்த ‘தாமரை'யில் தான், கி.ரா. தன் பல கதைகளை எழுதிப் பிரசுரித்துள்ளார்.

அவரது புகழ் பெற்ற 'கதவு' சிறுகதையும் கூட தாமரையில் தான் பிரசுரமானது. ஒரு நேர்ப் பேச்சில், ‘‘நம்ம ஆளுங்க மாதிரி அறிவாளிங்க யார் இருக்காங்க பவா? என் கதவு கதையே சட்டம் தைத்த ஒற்றைத் கதவு பற்றிய கதை. அதில் தான் அக்குழந்தைகள் ஏறி குதிரை விளையாட்டு விளையாடும். ஆனால் தாமரையில் என் கதைக்கு ஓவியம் போட்ட அறிவாளி ஓவியர் ஒருவர், இரட்டைக் கதவு படம் போட்டார். கதை படித்த, படம் பார்த்த ஒருத்தருக்கும் அது ஒற்றைக் கதவாச்சே, இந்த ஆளு ரெட்டைக் கதவு படம் போட்டிருக்கானேன்னு தோணாம போச்சு!'' என்று அங்கலாய்த்தார் கிரா.

மெல்ல, மெல்ல தன் பூர்வீக கிராம விவசாய அவலங்களையும் சந்தோசங்களையும் எழுத்தில் கொண்டுவர முயன்றபோது , அவருக்கு மொழி ஒரு சவாலாக இருக்கவேயில்லை

நம் படிப்பாளிகளுக்கும், அறிவுஜீவிகளுக்கும், மொழி என்பது தெய்வீகமானது, அது மேன்மையானது. அதன் உயரம் அதிகம். ஏர்க்கலப்பையைப் பிடிக்கிற ஒரு சாதாரண விவசாயியால் அதை அடையவே முடியாதென அவர்களாகவே ஒரு கற்பிதத்தை உருவாக்கி வைத்திருந்தார்கள்.

கி.ரா, தன் கலப்பையால் மண் கட்டிகளை உடைத்து ஒதுக்குவதுபோல அக் கற்பிதத்தை, தன் எளிய மக்களின் மொழியால் உடைத்துக் கரைத்தார்.

நுட்பமான வாசகர்கள்கூட  எளிமை மாதிரி தோற்றமளித்த அவர் கதைகளின் ஆழங்களில் மூழ்கி மூச்சடைத்தார்கள்.

கி.ரா., தன் எழுதியதற்கும் அதிகமாகப் புகழப்படுவதாக ஒரு மெல்லிய விமர்சனம் முன் வைக்கப்படுவதையும் நாம் புறந்தள்ளிவிடக் கூடாதென நினைக்கிறேன்.

கி.ரா.&வின் படைப்புலக வாழ்வை, காலத் தால் இரு பெரும் பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டியுள்ளது.  ஒன்று, தன் சொந்த நிலப்பரப்பிலிருந்து அவர் எழுதிய உயிர்ப்புள்ள கதைகள். கோமதி, ஜடாயு, நாற்காலி, கன்னிமை, தோழன் ரங்கசாமி, கதவு, பிஞ்சுகள் என பத்துக்கும் மேற்பட்ட, வேறு எவராலும் எழுத முடியாத கதைகளை அவர் எழுதியிருக்கிறார்.

இதனோடு கூட கோபல்லபுரத்து மக்களையும், கோபல்ல கிராமத்தையும் உள்ளடக்கிக்கொள்ளலாம்.

 அதே சமயம், தன் கிராமத்தைச் சுற்றியிருந்த சேரியைப் பற்றியும், அதன் மக்களைப் பற்றியும் பெரும்பாலும் கி.ரா.&வின் கதைகளில் எந்தப் பதிவுகளும் இல்லை. மாறாக, தோழன் ரங்கசாமி என்ற கதையில் மூலம் அப்பழியைத் துடைத்து, அதன் உச்சத்தைத் தொடுகிறார்.

‘ஒரு மூத்த எழுத்தாளராக,  எழுதிக்கொண்டிருக்கிற எழுத்தாளர்களைப் பற்றியும், அதிர்வுகளை ஏற்படுத்திய பல சமூக அநீதிகளைப் பற்றியும், எந்த அபிப்பிராயங்களையும் பதிவு செய்யாமல் அமைதி காத்தார்' என்ற குற்றச்சாட்டுகளும் ஒரு தகப்பன் மீது பிள்ளைகள் சொல்லும் உரிமையிலான விமர்சனங்களும் அவர் மீது எப்போதும் உண்டு.

ஆனால், தன் சொந்தப்  பேத்தியை ஒரு முஸ்லீம் மாப்பிள்ளைக்கு மனப்பூர்வமாகத் தந்து, என் சொந்த வாழ்விலேயே இவற்றைச் சுலபமாகக் கடக்கிறேன் எனவும் நிரூபித்துக் காட்டினார்.

ஒரு படைப்பாளியின் நிறைவின்போது, அவர் படைப்புகளோடு சேர்த்து அவர் வாழ்வும் வாசகர்களால் ஊடுருவப்படும் என்ற எச்சரிக்கை எப்போதுமே படைப்பாளர்களுக்கு இருந்தாக வேண்டியுள்ளது.

எழுத்தில், கரிசல் எழுத்து, கொங்கு எழுத்து, வடாற்காடு எழுத்து என்று எதுவுமில்லை.    எழுத்தென்பதே இம்மானுடத்திற்கும், இம்மண்ணின் மக்களுக்கும் பொதுவானதுதான். ஓர் எழுத்தாளன், ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிலிருந்து எழுதுவதாலேயே அவன் எழுத்து அந்நிலப்பரப்பிற்கும், அந்நிலப்பரப்பின் மக்களுக்கும் மட்டுமானது என சுருக்கிவிட முடியாது.

டால்ஸ்டாயும், தாஸ்தாவேஸ்கியும், மார்க்கோசும் இந்த உலகத்துக்கானவர்கள் தான். அவர்கள் எழுத்து எல்லா நிலப்பரப்புகளிலேயும்  வாழும் வாசகர்களால் இன்றளவும் வாசிக்கப்படுகிறது.

பிராந்தியம், நிலப்பரப்பு, மாவட்டம் என எழுத்தாளர்களின் விஸ்தீரணத்தை நாம் சுருக்கிவிட முடியாது.

கி.ரா.வுடைய தொண்ணூறாவது பிறந்த நாளை பாண்டிச்சேரி பல்கலைக்கழக அரங்கில் மிக விமரிசையாக நண்பர்கள் கொண்டாட்டத்திற்குக் கொண்டு வந்த அந்நிகழ்வில், நானும் உடன் இருந்தேன். அவரது இரு கரங்களைப் பற்றி அவரை முன்னிருக்கையில் அமர்த்தவும் அவர் எதிரில் நின்று அவர் கதைகளைச் சொல்லவும் ஒரு வாய்ப்பைப் பெற்றேன்.

அப்போது ஒரு மெல்லிய கை குலுக்கலோடு  என் தலைமீது கைவைத்து தன் பிரியத்தைக் கடத்தவும் செய்தார். இப்படியான தருணங்களில்  மனிதர்களுக்கு வார்த்தைகள் உதிர்ந்து விடுகின்றன.

அதற்கு அடுத்த வருடம் மகன் வம்சி ‘அஸ்வகோஷ்' ஆவணப்படத்திற்காக அவரைச் சந்தித்த போது,  ‘‘எனக்கு அவரைத் தெரியாது. அவர் கதைகளை வாசித்ததில்லை . அதை விடு, உன் அப்பன் கதை சொன்னால், தமிழ்நாட்டில் சிசேரியன் பிரசவமே நடக்காது வம்சி'' என ஒரு அப்பாவைப் பற்றி  மகனிடம் தன் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டது, என் வாழ்வின் பெருமிதமான தருணங்களில் ஒன்றென நினைக்கிறேன்

கி.ரா.
கி.ரா.புதுவை இளவேனில்

அஸ்வகோஷ் என்கிற ராஜேந்திர சோழனின் எழுத்துகளை நான் அறிந்ததில்லை என அவர் சொன்னது கூட, அவரே தன்னைக் கரிசல் நிலப்பரப்பின் எழுத்தாளன் தான் எனச் சுருக்கிக் கொண்டார் என்பதைத்தான் காட்டுகிறது.

இலக்கியத்தால்  வறண்ட வடாற்காடு மாவட்ட நிலப்பரப்பில் நின்று உலகத்திற்கு எழுதிக் கொண்டிருக்கிற ராஜேந்திர சோழன், இமையம், சு. தமிழ்ச்செல்வி, அழகியபெரியவன், ஜி.முருகன் என யாரையும் அவர் இறுதி வரை அறிந்திருக்கவில்லை.

திரும்பத் திரும்ப கரிசல் பூமியிலிருந்து எழுதிக் கொண்டிருந்த எழுத்தாளர்களைப் பற்றியே அவர் குறைவாக எழுதியும் ,நிறையப் பேசியும் வந்துள் ளார். காலத்தின் விமர்சனம் இவற்றையெல்லாம் தன் மனதிலிருந்து அழித்துவிடாமல்  மனிதனின் மரணம் வரை நினைவில் கொள்ளும்.

பாண்டிச்சேரி வாழ்வு, அங்கிருந்த மனிதர்கள், நண்பர்கள் பிரெஞ்சு கலாசாரத்தின் மிச்சம் என அவருக்குப் பிடித்தமான ஒன்றாக மாறி அவரை அங்கேயே  முப்பதாண்டுகள் தங்க வைத்தன.

ஆனால் அவரது சொந்த கிராமம், இழந்த தன்  மக்கள் என அவரின் ஞாபகங்களிலிருந்தே மிச்ச கதைகளையும் இங்கிருந்து எழுதினார்.

பாண்டிச்சேரி மனிதர்கள் ஒருவரும் அவர் கதைகளில் எங்கு தேடியும் அகப்படவில்லை.

கி.ரா. உணவைப் பற்றியும், இசையைப் பற்றியும் நிறைய எழுதி இருக்கிறார். ஓர் இசைக் கலைஞனாக வரவேண்டும் என்ற  தன் நிறைவேறாத கனவுதான், அவர் எழுத்தில் கவிதை  மாதிரி ஒத்திசைந்து சுருதி கூட்டியது.

உணவின் ருசியை அவர் ரசித்தார் என்பதில்லை, லயித்தார் என்பதே சரியான மதிப்பீடு. இந்த அதீத ரசனை , உணவே கிடைக்காத பல கோடி மக்களின் வாழ்நிலைபற்றி  அவரை எதனாலோ எழுத விடாமலோ அல்லது குறைவாக எழுதவோ செய்தது கி.ரா.-வின் இரண்டாம் வாழ்வு, புதுச்சேரியில் ஆரம்பித்தது எனலாம். தனக்கு ஆட்டோ ஓட்டிய பாபு என்ற இளைஞனின் உள்ளிருந்த ஒரு புகைப்படக் கலைஞனை அவர் கண்டடைகிறார். தான் மானசீக மகனாக அவனைத் தத்தெடுத்து தன் இறுதி மூச்சு வரை அவனுடனேயே பயணித்தார்.தன் வாழ்வின் சுகதுக்கங்களை தன் சொந்த மகன்களை விட அவனிடம்தான் அதிகம் பகிர்ந்து கொள்கிறார். தன் சொந்த பணத்தில் அவனுக்கு ஒரு கேமரா வாங்கித் தருகிறார். கி.ரா.-வின் உந்துதலில் பாபு பின்னாளில், புதுவை இளவேனிலாக உருவெடுக்கிறார். இப்போது அந்த பாபுவிற்கு புதுவையில்இரண்டு ஸ்டுடியோக்கள் சொந்தமாக இருக்கின்றன. இதெல்லாம் ஒரு படைப்பாளியின் வாழ்வின் அபூர்வங்கள். இப்படிப் பல ஈடுபடல்களைத் தன் வாழ்வில் சாத்தியமாக்கியுள்ளார், கி.ரா.

முப்பதாண்டுகளுக்கு முன் என்  ‘எஸ்தரும்  எஸ்தர் டீச்சரும்' என்ற கவிதைத் தொகுப்பை வாசித்துவிட்டு, எனக்கு ஒரு கடிதம் எழுதிப்போட்டார், கி.ரா. அக்கடிதத்தில் அவர், கவிதையை விடவும், கவிதை மாதிரி வாழ்வது பெரும் பேறு பவா!  என எழுதி இருந்தார். ஒரு வகையில் அவரே அப்படித்தான் வாழ்ந்திருந்தார்.

கணவன் மனைவியாக வாழ்வதில் என்ன பெரிய பெருமிதம் இருக்கிறது! நண்பர்களாக வாழவேண்டும் என, எப்போதும் ஜெயகாந்தன் சொல்வார். கி.ரா.-வும் கணவதி அம்மாவும் அப்படித் தான் இறுதி வரை வாழ்ந்தார்கள்.

திருவண்ணாமலையில் நாங்கள் நடத்திய முற்றத்திற்கு வருகை தந்து இரவு உணவிற்கு வீட்டுக்கு வந்திருந்தார். அன்று இரவு முழுக்க சொல்லியும், சொல்லி முடிக்காத பல கதைகள் அவரிடம் மிச்சம் இருந்தன.

கி.ரா.வை விமர்சகர்கள் எழுத்தாளன் என்கிற வகைமைக்குள் கொண்டுவராமல், நம் காலத்தின் மகத்தான கதை சொல்லி என மதிப்பிடுகிறார்கள். ஒட்டு மொத்தமாக கி.ரா.&வின் வாழ்வையும், படைப்பையும் தன் மனதால் மிக நெருங்கும் ஒரு வாசகனை அவர் சுலபமாகப் பற்றிக்கொள்வது மிக எளிதான ஒன்றுதான்.

கதை சொல்லி,எழுத்து, நினைவுக் குறிப்புகள், கதைகள், பாலியல் கதைத் தொகுப்புகள் என, தன் படைப்பு மனதை விசாலமாக்கிக் கொண்டேபோனவர், கி.ரா. இனி அது நிகழ சாத்தியமே இல்லை என்ற செய்தி, அவர் நிறைதலின் போது தமிழ் வாசகர்களின் நெஞ்சில் மோதிய போது தான் அதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் மூப்பையும் மீறி துக்கப்பட்டார்கள். உலகத் தமிழர்களே ஒரு நிமிடம் உறைந்தும் போனார்கள்.

ஜூன், 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com