எஸ். ராமகிருஷ்ணன்
எஸ். ராமகிருஷ்ணன்

இருண்ட காலத்தில் வாழ்கிறோமா…? - எஸ். ராமகிருஷ்ணன்

தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராக கருதப்படும் எஸ். ராமகிருஷ்ணனுடன் நடிகரும் எழுத்தாளருமான ஷாஜி நடத்திய நேர்காணலின் இரண்டாம் பகுதி:

“மனிதர்கள் மத்தியில் உள்ள வேற்றுமைகள் உருவாக்கப்பட்டவை தானே தவிர; இயற்கையானது அல்ல. அது எதனால் உருவாகிறது என்று பார்த்தால், ஒருவர் தனக்கான அதிகாரத்தையும் செல்வத்தையும் தேடுவதினால் உருவாகிறது.

உலகம் முழுக்க போர்கள் நடந்துள்ளது. எல்லா போருக்கும் காரணம் நிலம்தான். நிலத்தை யார் சொந்தமாக்கிக் கொள்வதில்தான் போர்கள் நடந்துள்ளன. கொஞ்சம் கொஞ்சமாக நிலம் சாராத போர் தொடங்கிய காலத்தில் நாம் வாழ ஆரம்பித்துவிட்டோம். இப்போது நிலம் இல்ல; வளம்தான் முக்கியம்.

இயற்கை வளங்கள் எங்கு இருந்தாலும், அதைக் கொள்ளையடிப்பதற்காகப் போர் நடக்கிறது. மனிதன் தனக்கான பணத்தையும் அதிகாரத்தையும் பெருக்கிக் கொள்வதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வான்.

இன்றுள்ள உலகம் யாரால் நிர்வகிக்கப்படுகிறது...? எந்த தனி நபராலும் அல்ல; வணிக குழுக்களால்தான் நிர்வகிக்கப்படுகிறது. இந்த வணிக குழுக்கள் வணிகம் செய்வதற்காக, மக்களைப் பிரித்து வைக்கிறது. அப்படிப் பிரிந்து இருந்தால்தான் வணிகம் செய்ய முடியும் என நினைக்கிறது. பிரித்து வைக்க வேண்டிய இடங்களில் பிரித்து வைக்கிறார்கள்.

வேறுபாடுகள் பல்வேறு காரணங்களுக்காக உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பெரிய குழுக்களால், அதிகாரத்தால் உருவாக்கப்படுகிறது. இதற்கு பாலியாகமாட்டேன், அடிபணியமாட்டேன் என்று ஒருவன் சொல்கிறான் இல்லையா…! அவன் எதனால் அப்படிச் சொல்கிறான். இலக்கியத்தால், சிந்தனையால், புதிய கருத்துகளால்தான்.

அவன் என்ன நினைக்கிறான் என்றால், இது எல்லாவற்றையும் நீ நடைமுறைப்படுத்தலாம். ஆனால், நான் அதற்குள் இல்லாத மனிதன் என்பான். அந்த மாற்று அவனுக்கு எங்கிருந்து வந்ததென்றால், அவனுடைய பண்பாடு கொடுத்த கொடை. இலக்கியங்கள் அவனை அறியாமலேயே அவன் மனதில் நல்லெண்ணத்தை விதைத்திருக்கிறது.

இந்த வேறுபாடுகள் இருக்குமா என்றால்… எல்லா இடங்களிலும் இருக்கும். இருண்ட காலத்தில் வாழ்கிறோமா…? ஆமாம்! ஆனால், இருண்ட காலத்திலும் இருண்ட காலத்திற்கான பாட்டு, இசை, இலக்கியம் இருக்கிறது. நாம் என்ன நினைக்கிறோம் என்றால், எல்லாவற்றையும் ஒரு தொழில்நுட்பம் மாற்றுவது போல் மாற்றிவிடலாம் என்று நம்புகிறோம்; ஆனால் இலக்கியம் அப்படி இல்லை.” என்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com