யுவன் சந்திரசேகர்
யுவன் சந்திரசேகர்

என்ன செய்வா அந்தப் பொம்பளே?

நாவல் முன்னோட்டம்

தன் எட்டாவது நாவலை கடந்த மூன்றாண்டுகளாக தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கிறார் யுவன் சந்திரசேகர். இப்போது முடியும் தருவாயில் இருக்கும் அந்த நாவலில் இருந்து ஒரு சிறு பகுதியை அந்திமழை வாசகர்களுக்காக இங்கே பிரத்யேகமாக வெளியிடுகிறோம். 2002-ல் தன் முதல் நாவலை வெளியிட்ட யுவன், இந்த பதினாறு ஆண்டுகளில் தன் எட்டாவது நாவலை நோக்கிப் பயணித்திருக்கிறார். இடையில் ஆறு சிறுகதைத் தொகுப்புகள், 5 கவிதைத் தொகுப்புகள் என இவரது படைப்புலகம் பிரம்மாண்டமாக விரிந்துள்ளது.

"வடிவ சோதனை முயற்சிகளை எழுத்தில் செய்து பார்ப்பதில் எனக்கு ஆர்வம். அப்படியொரு முயற்சிதான் இன்னும் பெயரிடப்படாத இந்த நாவல். பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த மாந்தர்களையும் உள்ளடக்கி எழுதிக்- கொண்டிருக்கிறேன். இது எதைப்பற்றிய நாவல் என்று குறிப்பிட்டுக் கேட்டால் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். வாசகர்கள்தான் தீர்மானிக்கவேண்டும்” என்று புன்னகையுடன் சொல்கிறார் யுவன். மூன்று பகுதிகளை யுவன் நமக்காக அனுப்பி எந்த பகுதியை வேண்டுமானாலும் வெளியிடுங்கள் என்று கூறி இருந்தார். அவற்றில் ஒன்றை இங்கே பிரசுரம் செய்கிறோம் (மூன்று பகுதிகளுமே அட்டகாசம் யுவன் சார்!). இதற்கான தலைப்பு நாம் வைத்ததே.

கூட்டம் அதிகமாய் இருக்கும் நகர்ப்பேருந்துகளில் நான் ஏறுவதில்லை நெரிசல் பிடிக்காது என்பதால் அல்ல - பார்க்கப்போனால், இன்னும் இன்னும் இன்னும் என்று மனிதர்களைப் பார்ப்பதில், அவர்களது உடல்மொழி, பேச்சுகள், அவற்றின் கீழ் இருப்பதாகத் தென்படும் உள்மனச் சலனங்களை வேடிக்கை பார்ப்பதில் அலாதியான ஆனந்தம் கொள்பவன்.

‘மனித விளையாட்டுக்கள்' என்ற எரிக் பெர்னின் நூலைப் படித்ததில் தொற்றிய வியாதி இது. ‘சக மனித உறவுகள் அத்தனையும் ஒட்டுமொத்தமாக முப்பத்தாறே தினுசுகள்தாம்' என்கிறார் அவர். ‘வேறுபாடுகள்போலத் தெரிபவை, அவை எவ்வளவு பெரிதாகத்தான் இருக்கட்டுமே; மிகவும் மேலோட்டமானவைதாம்; அவற்றை ஏந்திச் சுழலும் திரி ஒன்றே.' என்று சங்கர் சார்  அடிக்கடி  சொல்வார்.

பொதுவாக, அவர் உதிர்க்கும் வாக்கியங்களில் பெரும்பாலானவை என்   தலைக்குமேல் ஓரடி உயரத்தில் மேகம்போலக் கடந்து செல்பவை. சிலவேளை, வறட்டுக் கோட்பாடுகளோ என்ற ஐயத்தை விளைவிப்பவை. தன்னிச்சையாக உதறி விடுவேன். ஆனாலும், அவருடைய நட்பைப் பெரிதும்  மதித்தேன். இஸ்மாயில் போன்ற சகவயதினர்  ரணங்களை ஆறுதல் போலத் தருகையில், முந்தைய தலைமுறைக்கார சங்கர் சார் நிஜமான ஆசுவாசம் தந்தவர். அவர்தான் Gary Zukav வின் Soul Stories   தந்தார். ‘ Dancing Masters அளவு சுவாரசியமாக இல்லை இந்தப் புத்தகம்' என்று நான் சொன்னபோது மிகுந்த சந்தோஷத்தோடு என் கைகளைப் பிடித்துக்கொண்டார்.

ஆனால், இப்படியொருவர் சக ஊழியராக இருப்பதையே இஸ்மாயிலிடமும் சுகவனத்திடமும்   தெரிவித்ததில்லை நான். அவர்களுக்குத் தெரியாத ஒரு ரகசியத்தை அடைகாக்கும் இன்பத்துக்காகவா, என்னுடைய யோசனைகள் அவர்களை மட்டுமே சார்ந்தவை அல்ல என்று எனக்கே நிரூபித்துக் கொள்வதற்காகவா என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. நாம் படுகிற பாடு போதாதா, நல்ல மனிதரை மாட்டிவிடுவானேன் என்ற நல்லெண்ணம் கூடக் காரணமாய் இருக்கலாம்.

எரிக் பெர்னின் புத்தகம் பற்றிப் பேசும்போது, சங்கர் சார் சொன்னதன்  பிரகாரம்,  கறுப்பின மங்கோலிய காகேஸிய இந்தோ- இரானிய கிறிஸ்தவ யூத இஸ்லாமிய பௌத்த... என்ற அடைமொழிகள் அனைத்தும் பொருட்படுத்தப் படாத  அகழி ஒன்று இருக்கிறது; அதனுள் புதையும் சந்தர்ப்பம் ஒன்று இருக்குமானால், அது மகோன்னமானதுதானே..

ஆமாம், சகல வேறுபாடுகளையும் நிராகரிக்கும் நகர்ப்பேருந்துகளிலும், ஓட்டல்களிலும், சினிமாத் தியேட்டர்களிலும், பொதுக் கழிவறைகளிலும்  அடியோட்ட மாக நிலவும் ஒருமையைப் பார்க்கக் கிடைக்கும் கணங்களில் அலாதியான கிளர்ச்சி நிரம்பிவிடும் எனக்குள். ஆனாலும், இரண்டுமுறை மணிப்பர்ஸும், ஒரு முறை செல்ஃபோனும் தொலைத்த  பிறகு, கூட்டம் பார்க்கும் ஆர்வத்தை நகர்ப் பேருந்து வரை நீட்டிக்க வேண்டாம் என்று தீர்மானித்திருந்தேன்.

அன்றைக்கு, நெரிசல் வேளை இன்னும் ஆரம்பிக்கவில்லை. நான் போகவிருந்தது, மின் ரயில் எட்டாத வட்டாரம். ஜன்னலோர இருக்கை தேர்ந்து உட்காருமளவு பேருந்து காலியாக இருந்தது. பழைய தீர்மானத்தை தற்காலிகமாய் ரத்து செய்தேன். 

ஆனால், தன்னிச்சையான தனிநபர்த் தீர்மானங்களின்  அபத்தத்தை, அவற்றை ரத்து செய்ய நேரும் அபூர்வக் கணங்களின் அசட்டுத்தனத்தை உணர வைக்க மாநகரம் தவறுவதில்லை. 

வண்டி கிளம்பியபோது, நிற்கும் பயணிகள் என யாருமே இல்லை. நிறுத்தத்தில் ஏறிய கூட்டம்  இரண்டு பேருந்துகளை நிரப்பிவிடக் கூடியது. ஆமாம், அடுத்த  நிறுத்தத்தில்  ஐம்பதுக்குக் குறையாத பயணிகள் காத்திருந்தார்கள். இன்னொரு பேருந்தை ஏறெடுத்தும் பார்க்காதவர்கள்.

கசகசவென்ற பேச்சொலிகள், சுமை தாளாத என்ஜினின் உறுமல், அக்கம் பக்க வாகனங்களின் வீறல் என ஓசைப்பிரளயத்தில் மூழ்கி விட்டதாக உணர்ந்தேன்.

ஆனால், உரிய இடங்களில் நின்று கிளம்புவது, எங்குமே தேங்காத போக்குவரத்து, சீராகச் செலுத்தும் ஓட்டுநரின் ஆளுமை என்று புலப்படாத ஒழுங்கின் புலத்தினுள் வண்டி நுழைந்தது. அண்ணா மேம்பாலத்தில் ஏறியபோது, நகரத்தைவிட்டு வெளியேறி ஆகாயத்தில் தொடர்கிற மாதிரி, பெயரற்ற அமைதிக்குள் மாநகரம் அமிழ்ந்து பின்தங்கிவிட்ட மாதிரி உணர்வு தட்டியது. வெகு இயல்பாகக் கண்ணை அமட்டியது.

இனம் புரியாத ஆழத்தில் மெய்மறந்து கிறங்கிக் கிடந்தவன், திடீரென்று ஒரு குரல் உரத்துக் கேட்டதில், பதறி விழித்தேன்.  கடைசி இருக்கையில் இருந்த கிராமத் துக்காரி. வண்டியை நிறுத்தச்சொல்லிக் கூவினாள். அனிச்சையாக வெளியில் பார்த்தேன். வண்டி ஹால்டா ஜங்ஷனைக் கடக்கிறது. 

கைக்குழந்தையுடன் எழுந்து நின்றாள் அவள். வண்டியின் பின்புறச் சுவரையொட்டி நீளமாயிருக்கிற, பெண்களுக்கான கடைசி இருக்கை அது. இருபுறமும் இருந் தவர்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நடத்துனர் அருகில் வந்தார். மொட்டைத் தலையும், முழுக்க மழித்த மீசையும், கனத்த குரலுமாய் அம்ரிஷ் புரி சாயலில் இருந்தார். தளபதி படத்தில் வரும் சாயலில். அதே மாதிரிக் கண்ணாடிகூட அணிந்திருந்தார். குரலும் அதே. கண்டபடி திட்டப் போகிறார் என்று  எதிர்பார்த்தேன். அவரானால், தகப்பனின் கனிவுடன் ‘என்னம்மா பிரச்சினை?' என்று விசாரித்தார். அவள் கணவனைக் காணோமாம்.

 எங்கூடத்தாங்க ஏறுனாரு. அவன் முகம் ஞாபகமிருந்தது. நான் ஏறி அமர்ந்த பிறகு அவர்கள் குடும்பம் வந்தது. அந்த ஆள் முரட்டு மீசை வைத்திருந்தான். நகரத்துக்கு வருவதற்கு முன்னால் நாவிதரிடம் சென்று வந்திருப்பான் போல. சீராகக் கத்தரித்த மீசை, தலைமுடி. கண்கள் கடுமையாகச் சிவந்திருந்தன. கோடு போட்ட டிரவுசர் தெரியும் விதமாக உயர்த்தி, மடித்துக் கட்டிய வேட்டி. மனைவியிடம் கடைசி இருக்கையில் அமரும்படி சைகையால் ஆணையிட்டுவிட்டு, ஓட்டுநருக்குப் பின்னால் இருந்த காலி இருக்கை நோக்கிப் போனான்.

இவள் பராக்குப் பார்த்தபடி  அமர்ந்தாள்.  குழந்தைக்கு இரண்டு வயது இருக்கலாம் - அதைவிட அதிகமும் இருக்கலாம். முற்றிய மங்கோலியச் சாயலுடன் இருந்தது. முழுப் பனங்காய் பருமன் கொண்ட மண்டை. பீழை கோத்த கண்கள். புடைத்து முன் வந்த நெற்றி. எச்சில் ஒழுகும் கடைவாய். மடியில் அமர்ந்து, தாயின் முகத்தை மட்டு மே பார்த்துக்கொண்டிருந்தது. அடிக்கொரு தடவை அவள் கழுத்தைப் பிடித்து இழுத்தது. அவள் தலைகுனிவாள். அழுத்தி முத்தமிடும். உடனடியாக சேலைத்தலைப்பை இழுக்கும். முலைப்பிளவு வெளிப்படாது காத்துக்கொள்ள அவள் பெரும் பிரயாசைப்பட்டாள். ஆனாலும், முகத்தில் துளிகூட மாறுபாடு இல்லாதிருந்தது...

நடத்துனர் ஓட்டுநரிடம் போய்ப் பேசிவிட்டுத் திரும்பினார். நெரிசலைச் சமாளித்து மெல்ல மெல்ல ஓரம் ஒதுங்கிய வண்டி நடைபாதையை ஒட்டி நின்றது. அவள், குழந்தையை இடுப்பிலும், பார்வைக்கே அநியாய கனம் தெரியும் ஒயர்ப்பையை மறுகையிலும் எடுத்துக்கொண்டு எழுந்தாள். குழந்தை தலைப்பை விலக்கியது.

நடத்துனர், பையக் குடும்மா. நாங் கீளே கொண்ணாந்து தர்றேன், என்று வாங்கிக்கொண்டார். குழந்தை இப்போது அவள் கழுத்தில் முத்தம் கொடுத்தது. அவள் பேரழகி என்பதும், அபாரமான உடலமைப்பு கொண்டவள் என்பதும் பளீரென்று  அறைந்தன. ஏற்கனவே மனத்தில்  நிரம்பிவிட்ட இனம் புரியாத துயரம் மேலும் பெருகியது. கடலில் சொட்டிய நீர்த்துளிபோல அவளை விட்டுவிட்டு, பேருந்து கிண்டியை நோக்கிக் கிளம்பியது & கடமை தவறாத ஒலியுடன்.

என்ன செய்வா அந்தப் பொம்பளே?

பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது. மத்திய வயதுக் குரல். இளம் குரல்  பதிலளித்தது.

பெரிசா என்னத்தெச் செஞ்சுருவா? நாட்டுக் கட்டெ. அவ பார்வையெப் பாத்தீங்கள்ளே? மொதோத் தடவையா மெட்ராசுக்கு வந்திருக்கா போல. ப்ராட்வேயிலே ஏறினவன், நடுவிலே எங்கே இறங்கினானோ. இவள்ட்டெ என்னா செல்ஃபோனா இருக்கு? இருந்தாலும் அவன் அணச்சு வச்சிற மாட்டான்?

என்னாங்க சொல்றீங்க? அவ புருசங்க அவன்..? அதுக்காக? கையிலெ இருந்த பிள்ளெயெப் பாத்தீங்கள்ளே? எங்கெயாச்சும் விட்டுட்டுப் போயிறணும்னே கூட்டியாந்திருப்பான். தாய்க்காரில்லே. மாட்டேன்னிருப்பா. இவளையும் சேத்து விட்டுட்டுப் போயிட்டான்...

இவ என்னங்க செய்வா.

இப்பிடி நிர்க்கதியானா, பொம்பளைக்கிச் செய்றதுக்கு வேற என்ன இருக்கு?

முதுகுரல் விசிக்க ஆரம்பித்தது. திரும்பிப் பார்த்தேன். அலுவலகம் விட்டுத் திரும்புகிற, தலைமுடிக்குச் சாயம் பூசிய பேரிளம்பெண். யாரென்றே தெரியாத ஒருத்திக்காக அழுபவள், பேராச்சரியமாய்த் தென்பட்டாள். மறுகணம், மற்றவள் சொன்னது அவளுக்கு மட்டுமே நிஜமாய் இருக்கும் கதையாகப் போகட்டுமே என்று இஷ்ட தெய்வங்களை நோக்கிக் கூம்பியது என் மனம்.

ஜூலை, 2018.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com