தி.ஜா.படைத்த பெண்ணுலகு

தி.ஜா.படைத்த பெண்ணுலகு

காட்சி : 1

‘நீ வாசிக்கலையா?'

‘இல்லை. அண்ணா ஒருத்தந்தான் வாசிக்கிறான். எங்களுக்கெல்லாம் சம்பளம் கொடுக்க முடியலை, அப்பாவுக்கு.'

‘அதுக்காக நீ வேலைக்கு போறயாக்கும்?'

‘ஆமாம் மத்தியான்னச் சாப்பாட்டுக்கே எல்லாருக்கும் காணமாட்டேங்கிறது.'

‘உனக்கு என்ன வேலை செய்யத் தெரியும்?'

‘பத்துப் பாத்திரம் தேய்ப்பேன். காபி, டீ போடுவேன். இட்லி தோசைக்கு அரைப்பேன். குழம்பு, ரசம் வைக்கத்தெரியும். குழந்தைகளைப் பாத்துப்பேன். கோலம் போடுவேன். அடுப்பு மெழுகுவேன். வேஷ்டி, புடவை தோய்ப்பேன்.'

‘புடவை தோப்பியா ! உனக்குப் புடவையைத் தூக்க முடியுமோ?'

‘நன்னாத் தோய்க்கத் தெரியும்.'

‘இதெல்லாம் எங்கே கத்துண்டே?'

‘ராமநாதையர்னு ஒரு ஜட்ஜி இருக்கார். அவாத்துலதான்

கத்துண்டேன்.'

‘ம்ஹும், ஸ்ர்வீஸ் ஆனவளா? அவாத்துல எத்தனை வருஷம் இருந்தே?'

‘மூணு வருஷமா இருக்கேன்.'

‘மூணு வருஷமா? உனக்கு என்ன வயசாகிறது?'

‘இந்த ஆவணிக்கு ஒம்பது முடிஞ்சு பத்தாவது நடக்கிறது.'

‘ஏழு வயசிலேயே உனக்கு வேலை கிடைச்சுட்டுது; தேவலை. என்ன சம்பளம் கொடுப்பா?'

‘சம்பளம்னு கிடையாது. ரெண்டு வேளை சாப்பாடு போடுவா. தீபாவளிக்குப் பாவாடை சட்டை ஒரு ஜோடி எடுத்துக் கொடுப்பா.'

இது தி.ஜா.வின் ‘சிலிர்ப்பு' சிறுகதையின் ஒரு பகுதி.

சிறுமியை தேவைக்கதிகமாக வேலை வாங்கி விட்டு அதற்கான

சன்மானத்தைக் கொடுக்காத உயர்நிலை குடிமக்களின் மனித

சுரண்டலை கண்முன்நிறுத்தும். தி.ஜா.வின் படைப்புகள் மனித மனங்களின் இண்டு இடுக்குகளை படம் பிடித்து காட்டுபவை.

காட்சி: 2

லோகம் ஆரமிச்ச நாளிலிருந்து சம்பாதிக்கிறவனுக்குத்தான் மதிப்பு. அதுவும் பொம்மனாட்டிகளுக்கு எல்லாம் இருந்தாத்தான் மதிப்பு வரும். நிறைய சம்பாதிக்கணும் அழகா இருக்கணும், முரடாகவும் இருக்கணும். புத்திசாலியாகவும் இருக்கணும். எல்லாமாகவும் இருக்கணும் ஒண்ணு இருந்தால் மட்டும் போராது.'

‘புத்திசாலியாயிருந்தா, பணக்காரனா இருக்கணும். பணக்காரனா இருந்தா புத்திசாலியா இருக்கணும். அதுவும் இருந்தா பலசாலியா இருக்கணும். அதுவும் இருந்தாலும் தன் மனசுப்படி நடக்கணும்...'

‘அதுக்காகத்தான் நான் ஒரு வழிச் சொன்னேன் & கல்யாணமே பண்ணிக்காம இருந்துவிட்டா?.'

‘கையை வலிக்கிறதுன்னா வெட்டிவிடலாம்னு வைத்தியம்

சொல்றியேடா அப்பு......'

மணமாகி சிலவருடங்களில் மனைவியின் மீதான கணவன்களின் சலிப்பை கோடிட்டுக் காட்டும் தி.ஜா (அம்மா வந்தாள்) அடுத்த காட்சியில் சரியாக

சமைக்கத் தெரியாத மனைவியை கணவனின் கோணத்திலிருந்து பார்க்கிறார் (அத்துவின் முடிவு

சிறுகதை).

காட்சி: 3

‘சார், இவளை நான் ஒரு நாளைக்குச் சந்தியிலே நிறுத்தி வைக்காட்டா, என்பேர் அத்து இல்லை& அது எப்படி நிக்க வைக்கப் போறேனோ, எனக்குத் தெரியாது. ஆனால் கட்டாயமா ஒரு நாளைக்கு நிறுத்தத்தான் போறேன், அவ ரொம்பக் கஷ்டப்படப் போறா, பாரும்...'

‘ஓய், அப்படியெல்லாம் பேசாதீரையா! நீர் என்ன, தாலி கட்டின புருஷனாகவா பேசுகிறீர்? என்னய்யாது தத்துப் பித்துன்னு.'

‘தத்துப் பித்துன்னா? ஓய், இந்த உப்புமாவைத்தின்னு பாருங்காணும். அப்பாமங்கலம் அர்த்த நாரீச்வரையர், அப்பா செத்துப் போனபோது வச்சுட்டுப் போன ஆறு ஏக்கரைப் பத்து வருஷத்தில் அறுபத்தினாலு ஏக்கராவாகப் பெருக்கின அர்த்த நாரீச்வரையர், ஔரோரோ இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கு ஐம்பது லட்சம் ரூபாய் பாலிசி ஒரு வருஷத்தில் சேர்த்துக் கொடுத்த அர்த்த நாரீச்வரையர், அப்பாமங்கலம் பர்மனென்ட் பண்ட் டைரக்டர் அர்த்தநாரீச்வரையர் & இந்த உப்புமாவைத் திங்கணுமா? நீர் கொஞ்சம் இதைத் தின்னு பாருமே. பாருமேன்னா பார்க்கணும், ம், பாரும் சொல்றேன்' என்று ஒரு பிடி உப்புமாவை என் கையில் வைத்து அழுத்தினார் அத்து.

‘என்னையா, பேசாமல் கையில் வைச்சுண்டு உட்கார்ந்திருகிறீர். சாப்பிட்டுப் பார்த்துச்

சொல்லும். நான் உம்மை உபசாரம் பண்ணலை. நடப்பைத் தெரிஞ்சுக்கணும்னுதான் சொல்றேன். வாயில் போட்டுண்டு பாரும்' என்று மேலும் மேலும் தூண்டவே, உப்புமாவை என் வாயில் போட்டுக்கொண்டேன்.

அரிசி உப்புமா, களி களியாக நெஞ்சைப் போய் அடைத்தது. ஒரே ஜலபக்குவம். எண்ணெய்

வாசனை, ஜன்மாந்தர வாசனையாக மிகச்

சிரமப்பட்டுக் கண்டுபிடிக்க வேண்டிய அளவுக்கு வீசிற்று.

‘ஓய், கைலாசம், உம்ம மனசாட்சிக்கு விரோதமில்லாமல் சொல்லும். அதுலெ ஏதாவது கடுகு, கருவேப்பிலை இதுகளுடைய நிழல் விழுந்திருக்கான்னு & ஏனய்யா, எனக்கு இருக்கிற சொத்துக்கு இந்த உப்புமாவை ரெண்டு மூட்டை நெய்யை ஊத்திப் பண்ணினாத்தான் என்ன? பாங்கிலெ இருக்கிற பணச் சுவரு திடுதிடுன்னு இடிஞ்சா விழுந்திடும்...? சம்பாதிச்சாப் போறாது ஐயா ! சாப்பிடக் கொடுத்து வைக்கணும்' என்று

சொல்லிக்கொண்டு வந்த அத்துவின் நெஞ்சு அடைத்துத் தழுதழுத்தது. கண்களில் இரண்டு

சொட்டுக் கண்ணீர் மல்கி நிறைந்தது.

சட்டென்று அவர், மேல் வேஷ்டியால் கண்ணைத் துடைத்துக்கொண்டார். ‘இத்தனை பலஹீனமான நெஞ்சா!' என்று எனக்கே ஆச்சரியமாயிருந்தது. சமாதானப்படுத்த முயன்றேன்.

‘போனால் போகிறது ஐயா, இதுக்காக ஒருத்தர் மனசைப் போட்டு அலக்கழிச்சுப்பாளா?

வீட்டிலேபண்ணிக் கொடுக்காட்ட, ‘சீ, நாயே போ, நீ பண்ணிப் போட கொடுத்து வைக்கலை'ன்னு நெனச்சுண்டு ஹோட்டல்லேருந்து வரவழைத்துச் சாப்பிட்டுப் போவீரா? இதுக்காகக் கண்ணாலெ ஜலம் விடறீரே, பச்சைக் குழந்தை மாதிரி. மனுஷ்ய வாழ்க்கைன்னா எல்லாம் பொருந்தியிருக்குமா? ஒண்ணு  இருந்தா ஒண்ணு இராது, ஒண்ணு பாதியாயிருக்கும். எல்லாம் சகஜந்தானே. இப்ப என்ன நடந்துடுத்து. பிரமாதமா நெனச்சு உருகி, இளகிக் கஷ்டப்படறதுக்கு! ஏனய்யா!'

‘இல்லையா, சொல்றேன் உமக்கு & இவ்வளவு இருந்தும் வீட்டிலேருந்து சாப்பிடக் கொடுத்து வைக்கல பாரும் என்கிறதுக்காகச் சொல்லவந்தேன். நீர் சொல்றாப்போல, ‘சீ நாயே, எனக்குப் பண்ணிப் போடக் கொடுத்து வைக்கல ‘நீ'ன்னு சொல்லிப்பிட்டு ஹோட்டல்லேவாங்கிச் சாப்பிடத்தான் போறேன். இருந்தாலும் ஒரு பேச்சுக்குச் சொல்ல வந்தேன். மனுஷ்யனுக்குச் சுகங்கிறது பணத்திலா இருக்கு? நீரும் இருக்கீர். மளிகைக்கடை குமாஸ்தாதான். அறுபது ரூபாய்தான் சம்பளம் இருந்தாலும் புடலங்காயை இளசாப் பொறுக்கி வாங்கி நெய்யிலேன்னாயா பொறிச்சுப் போடறாள். உம்ம சம்சாரம்... அன்னிக்கேக் கொடுத்தீரே, என்னமா இருந்தது தெரியுமோ! ஓய், உம்ம சம்சாரம் தங்கக் கம்பியய்யா! ரொம்ப அடங்கின சரக்கு, நான் அன்னிக்கு அந்த பொறியலை எடுத்துண்டு உள்ளே போய்க் காமிச்சேன்.அந்தப் பிசாசு என்ன சொல்லித்துத் தெரியுமோ?' சம்பாதிக்கிறது அம்பி அரணாக்கயிறுக்கு போறாட்டாலும் இந்த திமிருக்குக் குறைச்சல் இல்லை'ன்னு சொன்னாய்யா அவ! எனக்கு அப்படியே மென்னியைத் திருகிப் போட்டுடலாமான்னு வந்துடுத்து. பாரும், தனக்குப் பண்ணிப்போடத் துப்பில்லைன்னாலும், பிறத்தி யாருக்கு நொட்டை சொல்றதை...ம். பணமா சொத்து? பக்கத்திலே இருக்கிற மனுஷாள்னா சொத்து' என்று முடித்தார். அத்து.

அத்துவுக்கு,‘பணமா சொத்து' என்று சொல்கிற அளவுக்கு ஞானோதயம் ஆகிவிட்டதா என்று வியப்பாகத் தான் இருந்தது எனக்கு உடனே கேட்டேன்.‘அப்படியானால் இந்த பர்மனண்ட் பண்ட் மானேஜிங் டைரக்டர் வேலையக் கொடுத்துடும். இந்த இன்ஷூரன்ஸ் ஏஜெண்ட் உத்தியோகத்தையும் விட்டுடும்' என்று.

காட்சி: 4

‘இதப் பாரு! நான் பொய் சொல்லமாட்டேன். இப்பக் கூட நான் குறைபட்டுப் போயிட்டாப்ப நினைச்சுக்கலெ. கல்யாணம் பண்ணிண்டாத்தானே, குறைபட்டுப் போயிட்டான்னு

சொல்லணும். எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலெ. எல்லாருமா சேர்ந்து யாரையோ கொண்டு வந்து என் கையைப் பிடிச்சுக்கச்

சொன்னா. கழுத்திலே ஒரு சரடைக் கட்டச் சொன்னா. என்னைப் போன்னு தள்ளிவிட்டா. இந்த உடம்பு போச்சு. நாலு வருஷம் கழிச்சு அங்கே போய் இருந்தது. மூணு வருஷம் இருந்தது. பொண்டாட்டி பொண்டாட்டின்ன்னு எல்லாரும் சொன்னா. அது மாதிரியே இருக்கச் சொன்னா. இருந்தது. என் உடம்பை மாத்திரம் கட்டி ஆண்டா, நான் பொண்டாட்டியா ஆயிட முடியுமா? ஆயிடுவேனா? நான் ஆகலே. எனக்கு கல்யாணமே ஆகலே; உடம்புக்குத்தான் ஆச்சு. இன்னும் இரண்டு  வருஷம் உசிரோடு இருந்து, நானும் அங்கேயே இருந்திருந்தா சம்சாரியாக்கூட ஆயிருப்பேன். ஆனா, அப்பவும் கல்யாணம் ஆயிருக்காது. நான் இப்பவும் சுமங்கலிதான்ன்னு சொல்லவந்தேன். இல்லை.. எனக்குக் கல்யாணம் ஆனாத்தானே சுமங்கலி. அதுவே ஆகல்லியே எனக்கு. ஆனா, எனக்கு கல்யாணம் ஆச்சா, ஆகலியான்ன்னு கூடத் தெரியலே. சிலசமயம் ஆனாப்போல இருக்கும். ஏன்னா, உன்னோட இருக்காப்பலதானே நினைச்சுண்டிருந்தேன். ஆனா நடு நடுவிலே, நீ இல்லே அதுன்ன்னு தெரியறபோது தான் கல்யாணம் இன்னும் ஆகலேன்னு புரியும். அப்புறம், ஒரு நாளைக்கு எல்லாம் வந்து என்னைச் சுத்தி உட்கார்ந்துண்டு புலம்பித்துகள். என் தலை மயிரைப் பிடிச்சுச் சுரீர்சுரீர்னு இழுத்துதுகள். என்னை வாசல்லெ கொண்டு தள்ளித்துக்கள். என் உடம்பு போய் விழுந்தது. பெருந்துறையிலே இருக்கிற போது கூட, நீ கிடக்கிறாப் போல எனக்கு ஒரு பிரமை. அந்த பிரமை இல்லாட்டா, நான் அப்படிக் கஞ்சியும் காடியுமாக வடிச்சுக்கொண்டு கொடுத்துண்டே இருந்திருக்க மாட்டேன். எல்லாம் ஒரு தினுசா முடிஞ்சு போனப்புறம், எனக்கு அங்கே இருப்பா இருக்கலே. முன்னேயாவது ஒரு மூர்த்தி இருந்தது. உன்னை அதிலே ஆவாஹனம் பண்ணி, நாளை ஓட்டினேன். அதுவும் போனப்புறம், எனக்கு இருக்க முடியலே. வந்துட்டேன். அஞ்சு வருஷமா, உங்கிட்ட இதை அப்படியே சொல்லி, ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலேன்னு சொல்லணும்னு துடிச்சுண்டிருந்தேன். நான் யாருகிட்ட இதைப்போய்ச் சொல்லப்போறேன்? அத்தைகிட்டச் சொல்றதா? இல்லை, வாத்தியார்கிட்டச் சொல்றதா? இன்னைக்கி தெய்வமாப் பார்த்து, ஒரு இடம் கொடுத்தது & எல்லாத்தியும் சொல்லிவிடணும்னு. சொல்றேன். இதோ (அம்மா வந்தாள்).

 பெண்களின் மனதை முழுவதுமாக புரிந்து கொள்வது முடியாத காரியம். ஆனால் தி.ஜாவின் எழுத்துக்கள் அவர்களை ஓரளவு புரிந்து கொள்ள உதவும்.

‘மனிதனின் வீழ்ச்சியையும் பிறழ்வையும், தத்தளிப்பையும் அனுதாபத்துடன் பார்த்தவர். ஒழுக்கம், தர்மத்தின் விதிகள் இவற்றைத் தாண்டி உணர்வு நிலைகளே மனித வாழ்வைத் தீர்மானிக்கின்றன என்பதில் தி.ஜா. நம்பிக்கை கொண்டிருந்ததாக' சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார்.

மனிதர்கள் உணர்வுகளை புறந்தள்ளி விட்டு போலி ஒழுக்கங்களை தூக்கி பிடிப்பதால் நிகழும்  சிக்கல்களையும், உறவுகளுக்குள் ஏழும் அதிகார போட்டியும், அதிகாரத்திலிருந்து புறப்படும் ஆணவம் ஒழுங்கை, ஒழுக்கத்தை நிலைநாட்டுகிறேன் என்ற போர்வைக்குள் வன்முறையாக மாறுவதும் தொடர்கதையாகும் இன்றைய சூழலில் மனித உணர்வுகளின் அழகையும் அந்த அழகின் பல்வேறு வேஷங்களையும் காட்சிப்படுத்துகிறார் தி.ஜா. 1937 டிசம்பரில் தி.ஜா.வின் முதல் சிறுகதை

பிரசுரமாகியது. 1980 வரை எழுதிய தி.ஜாவிற்கு 1979 ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ‘‘ஒரு சிறுவன்போல் நான் அன்றாட உலகத்தைப் பார்த்து வியக்கிறேன். சிரிக்கிறேன். பொருமுகிறேன், நெகிழ்கிறேன், முஷ்டியை உயர்த்துகிறேன், பிணங்குகிறேன், ஒதுங்குகிறேன், சில சமயம் கூச்சல் போடுகிறேன்'' இந்தச் சேஷ்டைகள்தாம் தனது கதைகள் என்கிறார் ஜானகிராமன்     

‘தி.ஜானகிராமன் கதைகள் வாசிக்க கிடைத்த

வாசகர்கள் பாக்கியசாலிகள்' என்கிறார் க.நா.சு. இதை அந்திமழை வழிமொழிகிறது.தி.ஜாவின் படைப்புகளைத் திரும்பத் திரும்ப பேசுவதன் மூலம் அவரது எழுத்தை புதிதாக பலர் வாசிக்கக் கூடும்.

அவரது நூற்றாண்டில் தி.ஜாவை கொண்டாடுவோம்!

அக்டோபர், 2020.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com