ஓவியம்
ஓவியம்ஆதிமூலம்

நித்தியப் புதுமையின் கலைஞன்!

என் ரசனையில், வாழ்வில், எழுத்தில் குறிப்பிடத் தகுந்த பாதிப்புகளை ஏற்படுத்திய ஆளுமை  தி.ஜானகிராமனின் நூற்றாண்டு இது. இலக்கியம், கலை பற்றிய அடிப்படையான தெளிவு உருவாகி வந்த பருவத்தில் வாசித்தும் பார்த்தும் அவர் மேல் ஏற்பட்ட ஆராதனை உணர்வு இன்றும் கலையாமலேயே இருக்கிறது. இத்தனை ஆண்டுகளில் ஒவ்வொரு முறை அவரது படைப்புகளை எதிர்கொள்ளும்போதும் அவர் மீதான மதிப்புக்கு மாற்றுக் கூடிக்கொண்டே போகிறது. ஆராதனை உணர்வும் அதிகரித்தவாறே இருக்கிறது.

எனக்கு வாய்த்த நல்லாசிரியர்களின் உபயத்தால் உயர்நிலைப் பள்ளிப் பருவத்திலேயே நவீன இலக்கியப் படைப்புகளுடன் உறவு ஏற்பட்டது. சோம சுந்தரம் என்ற சோமு சாரால் ஜெயகாந்தன் கதைகள் அறிமுகமாயின. என் இலக்கிய வாசிப்பின் குவிமையம் அதுதான். அதிலிருந்தே நவீன இலக்கியத்தின் முன்னோடிகளையும் அன்றைய சமகால ஆளுமைகளையும் கண்டடைந்தேன். அவர்களில் மிகவும் வசீகரித்தவர்களில் ஒருவராக இடம் பிடித்தார் தி.ஜானகிராமன்.

அன்று சுவாரசியமும் இன்பமும் அளிப்பவையாக வாசித்த படைப்புகள் வயது ஏறேற நுட்பங்கள் கொண்டவையாகவும் அனுபவம் திரளத்திரள வாழ்வின் தருணங்களைக் கற்பிப்பவையாகவும் மாறின. இன்று வாசிக்கும் போது இதுவரை புலனாகாத பலவற்றையும் அவை வெளிப்படுத்துகின்றன. புதிய கண்டுபிடிப்பு மனநிலைக்குக் கொண்டு செல்கின்றன. தி.ஜானகிராமன் சிறுகதைகள் மொத்தத் தொகுப்பை உருவாக்கியபோது மேற்கொண்ட வாசிப்பில் அவரது சிறுகதைகள் புதிய சிந்தனைக்கும் ரசனைக்கும் இடமளிப்பதை உணர்ந்தேன். அந்தத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் இதை எடுத்துக் காட்டியுமிருக்கிறேன். அந்த உரையின் சில பகுதிகளை இங்கே பகிர்கிறேன்.

தி. ஜானகிராமனின் சிறுகதை ஆளுமை செவ்வியல்தன்மை கொண்டது என்பது என் அனுமானம். அவரது ஆரம்பகாலக் கதைகளில் ஒன்றான ‘பசி ஆறிற்று' முதல் கடைசிக் கதை ‘சுளிப்பு' வரையிலும் இந்தத் தன்மைகளைக் காணலாம். வடமொழி இலக்கியங்களில் பெற்ற அறிமுகம், தமிழ் இலக்கியங்களிலிருந்து பயின்ற விரிவு, பிறமொழி இலக்கியங்களிலிருந்து அடைந்த செய்நேர்த்தி இவை கதைகளின் புற வடிவத்தையும் காலங்காலமாகப் போற்றப்பட்ட மானுட மதிப்பீடுகள்மீது கொண்ட நம்பிக்கை கதைகளின் ஆழத்தையும் நிர்ணயித்திருக்கிறது. இன்று வாசிக்கும் போதும் தி. ஜானகிராமனின் கதைகள் புதுமை குன்றாதவையாகவும், வாசகனை ஈர்க்கும் வசீகரத்தை இழந்து விடாததாகவும் இருப்பது இந்த குணத்தால்தான் என்று தோன்றுகிறது.

தனது எழுத்துகளைப் பற்றி தி. ஜானகிராமன் வெளிப்படையாகப் பேசிய சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு. அவரது வாழ்நாளிலேயே முக்கியமான சிறுகதைகள் கொண்ட ஏழு தொகுப்புகளும் வெளிவந்திருந்தன. அவற்றில் ‘அக்பர் சாஸ்திரி', ‘யாதும் ஊரே', ‘பிடி கருணை' ஆகிய மூன்று தொகுப்புகளுக்கு மட்டுமே முன்னுரைக் குறிப்புகளை எழுதியிருக்கிறார். அதுவும் தவிர்க்க முடியாமல். இந்த மூன்று குறிப்புகளிலும் அவர் வலியுறுத்திச் சொல்லும் வாசகம் ‘இவையெல்லாம் இலக்கண சுத்தமான சிறுகதைகள் அல்ல' என்பது. தனது வாழ்க்கையில் தி. ஜானகிராமன் சொன்ன மாபெரும் பொய் இதுவாக இருக்க வேண்டும் என்று கதைகளை வாசிக்கும் எளிய வாசகனும் புரிந்துகொள்வான். ‘சிறுகதை எழுதுவது எப்படி?' என்ற கட்டுரையில் ‘தனித் தன்மையும் உணர்ச்சி நிறைவும் தெறிப்பும்' இருப்பதுதான்  சிறுகதை என்று வரையறுக்கிறார். அவரது எந்தக் கதையும் இந்த வரையறையை மீறுவதில்லை.

தி. ஜானகிராமன் படைப்புகள் குறித்த சிந்தனையில் கூறியது கூறலாக மனதுக்குள் வரும் வாசகம் ‘அவர் நவீனத்துவர் அல்ல' என்பது. சிறுகதைகளைப் பற்றி யோசிக்கும்போது கூடுதலான அழுத்தத்துடன் இந்த வாசகம் நினைவில் மிளிர்கிறது. அவரது மனப் பாங்கும் படைப்புமுறையும் மரபு சார்ந்தவை. ஆனால் மரபை மீற வேண்டிய தருணங்களில் தன்னிச்சையாகவே அவை விடுதலை பெற்றுவிடுகின்றன. மனித சுதந்திரத்துக்கு முட்டுக்கட்டையாக இல்லாதவரை மரபை ஏற்றுக்கொள்கிறார். அது தடையாக முன் நிற்கையில் மிக இயல்பாக மீறுகிறார்.

ஜானகிராமனின் வாழ்க்கை சார்ந்தும் படைப்பு சார்ந்தும் இதை விளக்க முடியும். ஜானகிராமன் நினைவுகூரலாக எழுதிய கட்டுரையில் கரிச்சான் குஞ்சு தனி வாழ்க்கைச் சம்பவங்கள் சிலவற்றைச் சொல்லுகிறார். அதில் ஒன்று ஜானகிராமன் சகோதரியின் மறுமணம். ‘அவனுடைய இளைய சகோதரி மூத்த ஸகோதரியின் புருஷரையே மணக்க வேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்தபோது அவர்கள் குடும்பத்தில் அது பெரிய குழப்பத்தை, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிடந்து பொறுமினான் இவன். தந்தையாரிடம் இருந்த மரியாதையால் அடங்கினான். ஆனால் பிற்பாடு அந்த ஸகோதரிகள் இருவருடைய கணவனாய் இருந்தவர் இறந்த பத்தாவது நாள் கழுத்தில் புடவை போடுவது வேண்டாமென்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து துடிதுடித் தான். புரோஹிதர் வயதானவர் ஒருவரைத் திட்டியும் விட்டான். அப்போது சமாதானம் செய்யப்போன என்னையும் அடித்துவிட்டான்'. இந்த தார்மீகக் கோபத்தை அவரது முதன்மையான சில கதைகளில் பார்க்கலாம். குறிப்பாக ‘சண்பகப் பூ' சிறுகதையில். கணவனை இழந்த பதினெட்டு வயது மனைவி. ஆனால் அந்த இழப்பை அவள் பொருட்படுத்துவதில்லை. சுற்றி இருப்பவர்கள் சுட்டிக் காட்டியும் தன்னை அலங்கரித்துக்கொண்டு நடமாடுகிறாள். உச்சக்கட்டமாகக் கணவனின் தமையனுடன் ‘நாணம் பூக்க' வண்டியேறுகிறாள். மரபை மீறிய ஒரு வாழ்க்கைக் கணத்தை விரித்துச் சொல்லுகிறது கதை.

அன்று விதவை மறுமணத்துக்கு வாதிட்ட கதையை ஒரு பெண் தன் வாழ்க்கையைத் தானே தேர்ந்துகொள்ளும் உரிமை சார்ந்த ஒன்றாகப் பார்க்கும்போது சம காலத்தியதாகப் பொருள் படுகிறது. இது அவரது மனப்பான்மையை எடுத்துக் காட்டும்.

சிறுகதைகளின் வடிவத்திலும் கூறுமுறையிலும் ஜானகிராமன் நவீனத்துவத்தின் இயல்புகளைக் கையாள மறுத்தவர். எளிமையும் நேரடித்தன்மையும் கொண்டவை அவரது கதைகள். கச்சிதமானவையாக இருக்கும் அதேநேரத்தில் உள் விரிவுகள் கொண்டவை. அவரைச் செவ்வியல் கதைஞர் என்று வகைப்படுத்த இதுவே காரணம். ஏறத்தாழ ஒரே மாதிரியான வடிவத்திலேயே கதைகளை எழுதியிருக்கிறார்.

நூற்றுச் சொச்சம் வரும் கதைகளில் வித்தியாசமான கூறுமுறைகளில் எழுதப்பட்டவை பத்துக்கும் குறைவே. தன்மைக் கூற்றிலும் படர்க்கைக் கூற்றிலுமான நேரடியான கதையாடல் கொண்டவை, துணைப் பாத்திரங்கள் மூலம் முன்வைக்கப்படுபவை, உரையாடல் மூலம் நிகழ்த்தப் படுபவை, கடிதங்கள் மூலமாக விரிபவை என்ற நான்கு முறைகளிலேயே பெரும்பான்மையான கதைகள் அமைந்திருக்கின்றன.

 ‘ஆரம்பம், இடை, முடிவு ஆகியவை தெளிவாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை' என்பது அவரது கருத்து. அதை ஏறத்தாழ எல்லாக் கதைகளிலும் பின்பற்றியிருக்கிறார். இடைப் பகுதியில் ஆரம்பித்து முன்னும் பின்னுமாகச் செல்லும் கதையாடலையே அதிகமாகக் காணலாம். ஒருவேளை இது அவரது இசை ரசனையின் தூண்டுதலாக இருக்கலாம். அனுபல்லவியிலிருந்தோ சரணத்திலிருந்தோ தொடங்குவதன் மூலம் கேட்பவனுடன் சட்டென்று ஒன்றிவிடும் இசைக் கலைஞனின் அநாயாசத் திறனுடன் இதை ஒப்பிட முடியும்.

தி. ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய ஒரு விமர்சனம், அவர் பிராமணக் கதைமாந்தர்களையே அதிகம் படைத்திருக்கிறார் என்பது. ‘எனக்கு அம்மாமிகளைப் பற்றிதான் அதிகம் தெரியும். ஆத்தாள்களைப் பற்றித் தெரியாது. தெரிந்ததைத் தானே எழுத முடியும்' என்பதாக அந்தத் தூற்றுதலுக்கு ஜானகிராமன் மெனக்கெட்டு பதிலும் அளித்திருக்கிறார். மொத்தமாகக் கதைகளைப் பரிசீலிக்கும்போது அவருடைய ஒப்புதல் வாக்குமூலம் பொருத்தமற்றதாகத் தெரிகிறது. அம்மாஞ்சிகளையும் அம்மாமிகளையும் பாத்திரங்களாக வைத்து எழுதியதை விடவும் அய்யாக்களையும் ஆத்தாள்களையும் கதை மாந்தராக்கி எழுதியவையே அதிகம்.

தமிழ்ச் சிறுகதைகளில் மிகமிக அதிகக் கதாபாத்திரங்கள் வரும் கதைகள் தி. ஜானகிராமனுடையது என்று படுகிறது. இதைச் சொல்லும் போதே ஒற்றைப் பாத்திரத்தை வைத்து புதுமைப்பித்தன் எழுதியிருக்கும் ‘தெரு விளக்கு' நினைவுக்கு வருகிறது. அப்படியான செய்கையை ஜானகிராமனிடம் பார்ப்பது அசாத்தியம். முதன்மையான இரண்டோ மூன்றோ பாத்திரங்கள் கொண்ட கதையில்கூட துணைப்பாத்திரங்களின் எண்ணிக்கை அதிகம். பெரும்பாலும் துணைப்பாத்திரங்களே கதையை விரிக்க உதவுபவையாக அமைகின்றன.

பெரும்பான்மையான கதைகள் அவரது சொந்த நிலமான தஞ்சாவூரைக் களமாகக் கொண்டவை. பெரிதும் அந்த மண்ணின் மொழியைப் பேசுபவை. அந்த நிலத்தின் இயற்கையையும் கிராமங்களையும் நகரங்களையும் சித்திரிப்பவை. அதைப் புவியியல் சித்திரிப்பாக அல்லாமல் மானுட வயப்படுத்தப் பட்ட நிலக் காட்சியாகவே ஜானகிராமன் காட்டு கிறார். அந்த மண்ணின் பிரத்தியேக குணத்தைச்

சொல்லும்போதே அதைக் கடந்த இன்னொரு இடத்துக்கும் பொருந்தும் வகையில் உருவாக்குகிறார். காமமும் ஏமாற்றும் பரிவும் காதலும் மண்ணின் குணம் என்பதுபோலவே மானுடத்தின் குணம் என்பது அவரது எண்ணம். மனிதர்கள் மீது காட்டும் வாஞ்சையே அவரது கலையின் மையம். அந்த அளவில் இலட்சியவாத எழுத்தின் பிரதிநிதி. எனினும் எதார்த்தத்தை விட்டு விலகாதது அந்த இலட்சியவாதம்.

தி. ஜானகிராமன் கதைகளின் தனித்துவம் அதில் வரும் உரையாடல்கள். பாத்திரங்களின் கூற்றாக நிகழும் உரையாடலின் மூலமே அவர்களின் குணங்களையும் கதையின் உருவத்தையும் கொண்டு வந்துவிடுகிறார். அவரது ஆகச் சிறந்த கதையான ‘சிலிர்ப்'பில் வரும் உரையாடல் மொத்தக் கதாபாத்திரங்களின் குணாம்சத்தையும் வெளிப்படுத்துகிறது.

ஆண் பெண் உறவில் எழும் பிரச்சனைகளையும் காமத்தையும் அதிக அளவில் ஜானகிராமன் எழுதியதாக ஒரு கருத்து நிலவுகிறது. மொத்தக் கதைகளை வைத்துப் பார்த்தால் இது போன்ற கதைகள் பத்து விழுக்காடுகூட இல்லை. ‘சண்பகப் பூ', ‘பசி ஆறிற்று', ‘வேறு வழியில்லை', ‘மணம்', ‘அதிர்வு', ‘தூரப் பிரயாணம்‘, ‘குளிர் ஜுரம்', ‘பாஷாங்க ராகம்', ‘மனநாக்கு', ‘தவம்', ‘யதுநாத்தின் குரு பக்தி', ‘ராவணன் காதல்' ஆகிய கதைகளில் மட்டுமே பாலுறவுச் சிக்கல்களும் காமத் தத்தளிப்பும் சித்திரிக்கப்படுகின்றன. இதே கதைகளிலும் இன்னொரு உப பிரதியை வாசிக்க முடியும்.

உதாரணமாக, ‘சண்பகப் பூ' கதையில் பெண்ணின் சுதந்திரத்தையும் சமூகத்தின் பொருமலையும். மணத்தில் பெண்ணின் உடல்மீது நிகழும் தந்திரமான சுரண்டலையும் அவளது அருவருப்பையும் தவம் கதையில் காமத்தின் வியர்த்தத்தையும் ஆணின் முட்டாள்தனத்தையும் தூரப் பிரயாணத்தில் ஆணின் அத்துமீறலையும் அவளது சுய தேர்வையும் வாசிக்கலாம்.

‘ஜானகிராமனின் மகோன்னத பாத்திரங்கள் பெண்கள்தாம்' என்று அசோகமித்திரன் குறிப்பிடுகிறார். அது துல்லியமான கணிப்பு. குழந்தை முதல் கிழவிவரையான எல்லாப் பருவங்களிலுமாக அவரது பெண் பாத்திரங்கள் இருக்கிறார்கள். அவர்களை வியந்து பாராட்டுவதில் அவருக்கு அலுப்பே ஏற்படுவதில்லை. பல சமயங்களில் அவர்கள் மானுடப் பிறவிகள்தானா என்று பரவசப்பட்டுக் கேட்கிறார். அப்படிப் பரவசம் மேலிடும்போது அவரது வர்ணனைகள் கவிதையின் சாயலை அடைகின்றன. நெருப்பின் வெவ்வெறு நிலைகளுடன் சுடர், ஜுவாலை, குத்து விளக்கு என்றுதான் வர்ணிக்கப்படுகிறார்கள். சிருஷ்டியின் வெம்மை அவர்களிடமே இருக்கிறது என்பதனாலாக இருக்கலாம் இந்த வியப்பு. சிருஷ்டியின் குளிர்ச்சியை அவரது குழந்தைப் பாத்திரங்கள் பரப்புகின்றன. அதன் மகத்தான உதாரணம் ‘சிலிர்ப்பு'. பெண்கள் மீதான அவருடைய வியப்பு கவித்துவமானது என்றால் பிற பாத்திரங்களுடனான அணுகுமுறை எதார்த்தம் சார்ந்தது.

மனிதர்களின் களிப்பையும் துயரத்தையும் வெற்றியையும் வீழ்ச்சியையும் தடுமாற்றத்தையும் திடத்தையும் மதிப்பீடுகளையும் பிறழ்வுகளையும் ஏறத்தாழ சமமாகவே பார்க்கும் பார்வையில் வெளிப்பட்டவை ஜானகிராமன் கதைகள்.

இன்றைய தேதிக்கு தி. ஜானகிராமன் சிறுகதைகள் காலப் பழக்கம் கொண்டவை. அவற்றில் கையாளப்படும் விஷயங்கள் இன்று காலக்கெடு தீர்ந்தவை. இடம்பெறும் நிலக் காட்சிகள் மாறியிருக்கின்றன. பின்புலங்கள் மாறியிருக்கின்றன. மனிதர்களின் தோற்றங்களும் பழக்கங்களும் மதிப்பீடுகளும் மாறியிருக்கின்றன. கதைகளில் செயல்பட்ட உத்திகளும் கூறுமுறைகளும் மாறியிருக்கின்றன. ஆனால் இந்தக் கதைகள் இன்றைய வாசிப்பிலும் பழையனவாக மாறிவிடவில்லை. ஏனெனில் அவை மனிதப் படைப்பின் ஆதார குணங்களின் மீது உருவாக்கப்பட்டவை. என்றென்றைக்குமான நித்தியப் புதுமையைக் கொண்டிருப்பவை.

அக்டோபர், 2020.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com