நெல்லை (முக்) கண்ணன்

நெல்லை (முக்) கண்ணன்

1967 தேர்தலில் நெல்லையில் தெருவுக்குத் தெரு, முக்கிற்கு முக்கு அரசியல் கூட்டங்களில் உள்ளூர் வெளியூர் அரசியல் பிரமுகர்கள் முழங்கிக் கொண்டிருந்தனர். ரயில்வே ஃபீடர் ரோட்டில் அண்ணா, நாவலர், கலைஞர் என்று பெரிய தலைவர்களைத் தேடி பெருங்கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது. காங்கிரஸ் சார்பில் கூட்டங்கள் நடந்தாலும் நல்ல

பேச்சாளர்கள் இல்லை. கூட்டமும் இல்லை. எனக்குத் தெரிந்து காங்கிரஸ்  சார்பில் பெரிய பேச்சாளராக வைத்து நடந்தது, கண்ணதாசன் கூட்டம்தான்.  சந்திப்பிள்ளையார் முக்கு காந்தி  சதுக்கத்தில் நடந்தது. அவரும் கடைசி நிமிஷம் வரை வருவாரா என்பது சந்தேகமாக இருந்தது.அப்புறம் ஏன் வந்தார் என்கிற ரீதியில் பேசிப் போனார்.

காங்கிரஸில் நல்ல பேச்சாளர்களே இல்லை. இவ்வளவுக்கும் சத்திய மூர்த்தி போன்றோர் பேசிப்பேசியே வளர்த்த கட்சி. சொல்லின் செல்வர் ஈவிகே சம்பத் எல்லாம் கூட அங்குதான் 1967இல் இருந்தார். மாநில அளவில் நிலைமை இப்படி என்றால் நெல்லையைப் பொறுத்து மேடைப்பேச்சின் குறைந்த பட்ச அலங்காரம் கூட இல்லாமல் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுபவர்களே அதிகம். அப்போதெல்லாம் நெல்லை கண்ணன் போன்றவர்களுக்கு இருபது வயது இருக்கும். அவர் வீட்டுக்கு அண்மையில் உள்ள தெருக்களில் அவர் நன்றாகப் பேசுவதாக நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன், ஆனால் அவரெல்லாம் மற்ற பெரிய மேடைகளிலேறி நான் பார்த்ததில்லை. காங்கிரஸ் செய்த தவறுகளில் அது ஒன்று.

நெல்லையப்பர் ஹை ரோட்டில் இருக்கும் ரத்னா பார்வதி சென்ட்ரல் தியேட்டர்களில்தான் அதிகமான புதுப் படங்கள் அப்போதெல்லாம் வரும்.படம் பார்க்கப் போவதென்றாலும் சரி, வசூல் நிலவரம் அறியப் போனாலும் சரி கிட்டு வீட்டின் முன்பாகத்தான் செல்வோம். (நெல்லை கண்ணனின் செல்லப் பெயர் அதுதான்). அப்போதெல்லாம் அவரைப் பார்த்தாலும் பேசிக் கொள்வதில்லை. யாருடனாவது கூட்டமாக நின்று  பேசிக் கொண்டிருப்பார். அனேகமாக சிவாஜி ரசிகர்களாகத்தான் இருக்கும்.

ஒரு நாள் அவரே அழைத்து, ‘வே மாப்ளை வாரும், அவாள் வண்ணதாசன் அண்ணாச்சி கதை ஒண்ணு தினமணி கதிர்ல பரிசு வாங்கியிருக்கு போலயே' என்று பேசினார். அப்போதுதான் ஒஹோ இவரு வித்தியாசமான விஷயங்களையும் படிக்கிறவரு போல என்று தெரிந்து கொண்டேன். அப்புறம் அவரைப் பற்றி அவரது அண்டை வீட்டு

சுடலைமுத்து சொன்னான், அவன் எம்.ஜி.ஆர் ரசிகன், ‘கம்பராமாயணத்தையும் பாரதியாரையும் தலை கீழா ஒப்பிப்பாருப்பா..' என்று அவனே நேரடியாக முழுதாக அறிமுகப்படுத்தவும் செய்தான். அன்றைக்கு பேராசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘சிறியன சிந்தியாதான்' பற்றிப் பேச்சு வந்தது. அவரின் இலக்கிய வாசிப்பு குறித்து அன்றைக்குண்டான வியப்பு அப்புறம் எனக்குத் தீரவேயில்லை.

காங்கிரஸ் கட்சியில் திராவிட இயக்கப் பாணியில் நன்றாகப் பேசுபவர்கள் சம்பத்திற்குப் பிறகு இல்லை என்பதாலேயே எம். பி. சுப்ரமணியம் போன்றவர்களை காங்கிரஸ் கமிட்டியின் தலைமைப் பொறுப்பிற்கு நியமித்தார்கள்.

(சம்பத் இருந்த போது அவருக்குத் தலைமைப் பொறுப்பு   அளிக்கவில்லை என்பது இன்னொரு சாதி அரசியல், பின்னால் இந்திரா காலத்தில் செயலாளராக இருந்த நினைவு. அது அவரது அந்திம காலம்) அப்போது கூட கண்ணன் போன்றவர்களைப் பற்றிய யோசனை அந்தக் கட்சியில் எழாதது ஆச்சரியமே. ஆச்சரியமில்லை அரசியல்.

ஆனால் வாழப்பாடி ராமமூர்த்தி காலத்தில் நெல்லை கண்ணன் ஐ.என்.டி.யு.சி தலைவர்களில் ஒருவராகப் பணியாற்றி நெல்லைப் பகுதியில் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்காப் போராடியிருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் அவரது அரசியல் வாய்ப்புகள்  சற்றே பிரகாசமாக இருந்தது. அவரது அரசியல் அறிவும் ஞாபகத் திறனும் வியப்புக்குரியது. அரசியல் கூட்டங்களில் ஒன்று தொட்டு ஒன்று என்று பழைய அரசியல் நிகழ்வுகளை கட்சி எல்லை தாண்டிப் பேசுவது ஆச்சரியமாயிருக்கும். அவருக்கு ஜீவா, ராமமூர்த்தி, நல்லகண்ணு போன்றவர்களின் மீது மிகுந்த நல்ல அபிப்ராயம் உண்டு.பல அரசியல் தலைவர்களுடனும் நேரடிப் பழக்கமும் உண்டு. அது நெருக்கமானதா என்று எனக்குத் தெரியாது. அவரது வெளிப்படையான பேச்சு போன்ற சில குணாதிசயங்களால் அதற்கு  சாத்தியம் குறைவு என்பதும் அதைப் பற்றி அவருக்குக் கவலையில்லை என்பதும்  என் போன்று அவர் மீது நட்புக் கொண்டவர்களுக்கு ஆச்சரியமில்லாதது.

எல்லாவற்றையும் விட எப்போதும் சைவமும் தமிழும் தனது இரண்டு கண்கள் என்று வாழ்ந்தவர் என்பேன்.அதைக் காப்பாற்றுவதற்காகவே அவரது மேடைப்பேச்செனும் மூன்றாவது கண் எப்போதும் விழிப்புடனிருக்கும். சிவன் கோயில்களில் நிர்வாகமும் பூசைமுறையும் பார்த்தது ஆதியில் பிள்ளைமார் இனத்தைச் சேர்ந்த  சிவாச்சாரியர்களே, காலவெள்ளத்தில் அதை வைதிகம் கைப்பற்றிக் கொண்டது என்று தனிப்பட்ட முறையிலும்  கூட்டங்களிலும் துணிந்து கடைசி வரை வெளிப்படுத்தி வந்தார். அதனாலேயே சமீபத்தில் பல எதிர்ப்புகளைச் சந்திக்க நேர்ந்தது. வாழ்க்கை பூராவும் எதிர்ப்பைச் சந்தித்தவர்தான் அவர். இந்தக் காலகட்டத்தில் அவரது இல்லாமை பெரிய இழப்புதான்.

செப்டம்பர், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com