ஐம்பதுக்குப் பின்னும் அசத்தியவர்

ஐம்பதுக்குப் பின்னும் அசத்தியவர்
Published on

சிரஞ்சீவி, கமலஹாசன் ரஜினி என்று அரசியலுக்கு எந்த பெரிய நட்சத்திரம் வருவதாக இருந்தாலும் முதன் முதலில் ‘வேண்டாம்பா' இது நமக்கு சரியா வராது என்ற முக்கியமான அறிவுரை இந்திய சூப்பர் ஸ்டார் பிக் பி அமிதாப் பச்சனிடமிருந்துதான் வருகிறது. இவர்கள் எல்லோருக்கும் முன்பாக அரசியலின் வாசத்தை நுகர்ந்த அனுபவஸ்தரின் வார்த்தைகள் அவை.

ஜான்ஜீர் (1973) படத்தின் மூலமாக இந்தி திரையுலகத்தின் முக்கியமான நடிகராக தன்னுடைய 31 வது வயதில் இடம் பிடிக்கிறார் அமிதாப். அதன்பிறகு வெளியான தீவார்(1975) (தமிழில் ரஜினி நடிப்பில் ‘தீ' படமாக வந்தது), ஷோலே(1975) ஆகிய படங்கள் இந்தி திரையுலகில் அவருக்கு அசைக்க முடியாத இடத்தை அளித்தன. அமிதாப்பின் பெரும்பாலான வெற்றிப்படங்களின் தமிழ் ரீமேக்குகளில் ரஜினி நடித்து வெற்றி கண்டிருக்கிறார்.

அக்காலகட்டத்தை பிரதிபலித்த கோபக்கார இளைஞனாக அமிதாப் பொருந்திப் போனார். சுதந்திர இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று நம்பிக் கொண்டிருந்த இந்திய மக்களுக்கு தங்களுடைய வாழ்க்கைத்தரத்தில் எந்த மாற்றமுமின்றி அப்படியே தொடர்வதாக கோபம் இருந்தது. அரசியல்வாதிகள், ஊழல் புரையோடிப்போன அமைப்புகளின் மேல் இருந்த அவ நம்பிக்கையை அன்றைய திரைப்படங்கள் பிரதிபலித்தன. அமைப்புகளை கேள்வி கேட்கும், நியாயத்தை நிலை நாட்டும் இளைஞனாக, தாங்கள் செய்ய விரும்பும் செயல்களை செய்யும் சாகச நாயகனாக ரசிகர்களுக்கு அமிதாப் அப்போது பொருந்திப்போனதில் வியப்பேதுமில்லை.

இந்தியாவின் 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்துடன் வரிசையாக வெற்றிப் படங்களையே கொடுத்து வந்தவருக்கு 1982 ல் கூலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது உயிர் பிழைப்பாரா என்ற அளவிற்கு பலமான விபத்து. படம் வெற்றிதான் என்றாலும் சினிமாவிலிருந்து விலகிவிடலாம் என்று தன்னுடைய 40 வயதில் முடிவெடுக்கிறார்.

பச்சனின் அப்பா காலத்திலிருந்தே அவர்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள். சினிமாவிற்கு வருவதற்கு முன்பே ராஜிவ் காந்தி அமிதாப்பின் நண்பர். 1984 நாடாளுமன்ற தேர்தலில் அலகாபாத்தில் அன்றைய உத்திரபிரதேச முதல்வர் பகுகுணாவை எதிர்த்து நின்று இமாலய வெற்றி பெறுகிறார் அமிதாப். ஆனால் அவரால் அரசியலில் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. மூன்றே ஆண்டுகளில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்கிறார். அன்றைய ஃபோபர்ஸ் பிரச்னையில் அமிதாப்பின் பெயரும் அடிபட்டதால் இந்த முடிவு. அதன்பிறகு குடும்ப நண்பரான அமர் சிங்குக்கு ஆதரவளித்தாலும் நேரடியாக அரசியலில் அமிதாப் இறங்கவில்லை. அரசியலில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாகவே முதல் பத்தியில் சொன்னது போன்று உச்ச நட்சத்திரங்கள் அரசியலுக்கு வரும்போது முதல் ஆளாக, வேண்டாம் என்று அறிவுரை சொல்கிறார்.

இதன்பிறகு திரும்பவும் நடிப்பிற்கு திரும்பும் அமிதாபிற்கு இரட்டை வேடத்தில் நடித்த ஷாஹென்ஷா(1988) வெற்றிப்படமாக அமைகிறது. ஆனால் இதற்கு பிறகு நடித்த பல படங்கள் தோல்வியைத் தழுவின. இந்தி திரையுலகில் ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் என்ற மூன்று கான்களின் ஆதிக்கம் வலுப்பெறத் தொடங்கியது. அமிதாப்பின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து கேள்விக்குறியானது. 1992 ல் தன்னுடைய 50 வது வயதில் இது தான் தான் நடிக்கும் கடைசி திரைப்படம் என்று குதா கவா படத்தை அறிவித்தார். அதன்பிறகு ஐந்தாண்டுகளில் அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

ABCL என்ற நிறுவனத்தின் மூலமாக படங்களை தயாரிக்கலாம் என்பது அமிதாப்பின் திட்டம். ஆனால் அது தொட்ட அனைத்து திரைப்படங்களும் தோல்வி. தமிழின் உல்லாசம் படம் உட்பட. அதுவுமல்லாமல் 1996 ஆம் வருடத்திற்கான உலக அழகிப் போட்டியை நடத்தி கையை சுட்டுக் கொண்டார்.  பிரச்னைக்கு மேல் பிரச்னை. தன்னுடையே வீடே  கடனில் மூழ்கும் நிலை. அமிதாப் என்ற சூப்பர் ஸ்டாரின் முக்கியமான திரை வாழ்க்கை இங்குதான் தொடங்குகிறது.

2000& ல் மொகபத்தேன் திரைப்படத்தில் அவருடைய வயதுக்கேற்ற தோற்றத்தில் நடித்தார். கண்டிப்பான குருகுலத்தின் தலைமையாசிரியராக நடித்திருப்பார். ஷாருக்கானுடன் அமிதாப் இணைந்த முதல் படம் இது. படமும் வெற்றி பெற்றது. அதே ஆண்டில் கோன் பனேகா குரோர்பதி என்ற தொலைக்காட்சி நிகழ்சியிலும் பங்கேற்று சாதனை படைத்தார். அதுவரை திரை உச்ச நட்சத்திரங்கள் சின்ன திரையில் தோன்றுவதென்பது கௌரவக் குறைச்சலாகப் பார்க்கப்பட்டது. அமிதாப் அந்த நிலையை உடைத்தெறிந்தார்.

மற்ற இந்திய உச்ச நட்சத்திரங்களிலிருந்து அமிதாப் வேறுபடும் இடம் இதுதான். தன்னுடைய மகள் வயது கதாநாயகிகளுடன் ஆடிப்பாடி இளம் நாயகனாக இனி நடிக்க வேண்டாமென்று அவர் முடிவெடுத்துவிட்டார். இந்த முடிவின் காரணமாக இந்திய திரை உலகிற்கு சில அற்புதமான திரைப்படங்கள் கிடைத்தன. அல்சீமர்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட வயதான ஆசிரியராக ராணி முகர்ஜியுடன் நடித்த பிளாக் (2005), காட் பாதர் பட சாயலில் ராம் கோபால் வர்மா இயக்கிய சர்கார்(2005) படத்தில் ஏறக்குறைய அன்றைய பால் தாக்ரேவை நினைவு படுத்தும் பாத்திரம், 65 வயது சமையல் கலைஞராக பால்கியின் சீனி கம்(2007) திரைப்படம், வயதான நாடக நடிகர் சினிமாவில் நுழைவதாக வரும் தி லாஸ்ட் லியர்(2007), மரபணு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனாக பால்கியின் பா (2009) திரைப்படம், மகளின் திருமணத்திற்கு தடையாக நிற்கும் பிடிவாதக்கார வயதான வங்காளியாக பிக்கு (2015), பாதிக்கப்பட்ட மூன்று பெண்களுக்காக குரல் கொடுக்கும் வழக்குரைஞராக பிங்க் (2016),  (தமிழில் நேர் கொண்ட பார்வையாக அஜித் நடிப்பில் வெளியானது. பிங்க் படத்தில் அமிதாப்பிற்கு சண்டை காட்சிகளெல்லாம் இல்லை), 76 வயது ரிஷி கபூருக்கு 102 வயது அப்பாவாக நடித்த  102 நாட் அவுட் (2018) என்று என்றும் மறக்கவியலாத அற்புதமான படங்களை தந்து கொண்டிருக்கிறார். இந்த படங்களையெல்லாம் சிறந்த படங்களாக சொல்லமுடியுமென்றால் அது அமிதாப்பின் நடிப்பினால் நிகழ்ந்ததுதான்.

தற்போது 76 வயதில் திரையில் வயதான கம்பீர ஆளுமையாக வலம் வரும் அமிதாப் 50 வயதுக்குப் பிறகு எம்மாதிரியான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்று மற்ற உச்ச நட்சத்திரங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

மார்ச், 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com