குடிசையிலிருந்து அரண்மனைக்கு...

குடிசையிலிருந்து அரண்மனைக்கு...

ரஷ்யாவின் முதல் பெண் அரசியான முதலாம் கேத்தரின் கதை குழந்தைகளின் மிகவும் விருப்பமான சின்ட்ரெல்லா கதைக்கு ஒப்பானது.1684 ல் சாதாரண லிதுவேனிய விவசாய குடும்பத்தில் பிறந்த கேத்தரின் மூன்று வயதில் பெற்றோரை பிளேக் நோய்க்கு பறிகொடுத்து அனாதையானவர். மதகுரு ஒருவரின் வீட்டில் வீட்டு வேலை செய்பவராக வளர்க்கப்பட்டார்.

1702 ல் ரஷ்யா அப்பகுதியைக் கைப்பற்றியபோது,பிணைக் கைதியாக மாஸ்கோவிற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அரசு அதிகாரியின் வீட்டில் திரும்பவும் பணிப்பெண் வேலை. அங்குதான் அவரது வாழ்க்கை தலைகீழானது. அப்போதைய ரஷ்ய மாமன்னன் மகா பீட்டரின் கண்ணில் பட்டார். மாமன்னரின் கண்களுக்கு கேத்தரின் கல்வி அறிவில்லாத ஏழையாக தெரியவில்லை.பேரழகு மட்டுமே தெரிந்தது. அப்புறமென்ன... 1712 ல் முறைப்படி அரசரை திருமணம் செய்துகொண்டு ரஷ்யாவின் ராணியாகிவிட்டார்.ஆனால் இந்த ஒரே காரணத்திற்காக மட்டுமே அவர் சரித்திரத்தில் இடம் பெற்றுவிடவில்லை. பீட்டர் மன்னரின் அத்தனை அரசியல் சமூக முன்னேற்ற நடவடிக்கைகளிலும் உறுதுணயான இருந்தவர்.

1725 ல் மன்னரின் மறைவுக்குப் பிறகு ரஷ்யாவின் முதல் பெண் அரசியாக பொறுப்பேற்றுக் கொண்டவர் செய்த முக்கியமான மாற்றம் ராணுவத்திற்கான செலவை கணிசமாக குறைத்தது.அன்றைக்கு மக்களின் வரிப்பணம் 65% ராணுவத்திற்கே செலவானது.அதனை பெரும்பகுதி குறைத்து மக்களின் வரிச்சுமையை குறைத் ததுடன், ஏழை எளிய மக்களுக்கு ஏராளமான உதவிகள் செய்து அவர்களின் மனதில் உண்மையான ராணியாக வாழ்ந்தவர். ஒரு ஏழையின் வலி இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும் என்பதாலோ?

---

குடிசையிலிருந்து கோபுரத்திற்கு....

அடிமை வாழ்விலிருந்து அமெரிக்காவின் முதல் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் என்ற நிலைக்கு உயர்ந்த பிட்டி மாசனின் வாழ்க்கை, உழைப்பைப் போற்றுபவர்களுக்கு முன்னுதாரணம்.

அமெரிக்க கறுப்பின மக்கள் அடிமைகளாக வாழ்ந்த காலகட்டத்தில் மிசிசிபி மகாணத்தில் 1818-ல் பிறந்த மாசன் இளவயதில் அடிமையாக இருந்தது ஆச்சரியப்படக்கூடிய விஷயமில்லைதான்.1851-ல் கலிபோர்னியாவிற்கு மாசனின் முதலாளி குடும்பம் குடிபெயர்ந்தது.கலிபோர்னியாவில் அடிமை முறை ஒழிக்கப்பட்ட காலம்.

1856 -ல் நண்பர்களின் உதவியினால் அடிமை முறைக்கு எதிராக போராடி அடிமை வாழ்விலிருந்து வெளியேறினார். பிறகு லாஸ் ஏஞ்சல்ஸில் மருத்துவ தாதியாக கடுமையாக உழைத்து பதினைந்தாயிரம் ரூபாய் மதிப்பிற்கு இடம் ஒன்றை வாங்கினார்.அந்நகரில் முதன்முதலில் நிலம் வாங்கிய கறுப்பினத்தவர் இவர்தான். சிறிது காலம் கழித்து வாங்கிய நிலத்தில் ஒரு பகுதியை விற்று அந்நகரின் முக்கியமான வியாபார பகுதியைத் தேர்ந்தெடுத்து சொந்த கட்டடங்களைக் கட்டத் தொடங்கினார். திறமையான ரியல் எஸ்டேட் முதலீடு மூலமாக ஒரு கட்டத்தில் அவரிடம் ஏறக்குறைய ஒண்ணேமுக்கால் கோடி பணம் அந்த காலத்திலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது.ஒருபுறம் திறமையான பண நிர்வாகம் இருந்தாலும் ஏழைகளுக்கு தாராளமாக உதவுபராகவும்,தொண்டு நிறுவனங்களுக்கு அள்ளித் தருபவராகவும் இருந்திருக்கிறார் மாசன். லாஸ் ஏஞ்சல்ஸில் கறுப்பின மக்களுக்கான முதல் சர்ச் அமைத்தவரும் இவரே.

---

காஸ்ட்லியான வெட்டு

ஹாலிவுட் படங்களில் தயவு தாட்சண்யம் பார்க்காமல் தேவையில்லாத காட்சிகளை வெட்டிவிடுவது வழக்கம்.இதுவரை இந்தமாதிரி வெட்டுப்பட்ட காட்சிகளிலேயே காஸ்ட்லியான வெட்டு 1986 ல் வெளியான ‘லிட்டில் ஷாப் ஆப் ஹாரர்ஸ்’ என்ற படத்தின் கடைசி 20 நிமிட காட்சிதான். சுமார் முப்பது கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட கிளைமேக்ஸ் காட்சி திருப்தி அளிக்காததால் அதை தூக்கி எறிந்து விட்டு புதிதாக கிளைமேக்ஸ் காட்சியை எடுத்துள்ளார்கள். நம்மூரில் இந்த பணத்தில் பத்து படங்கள் எடுத்து விடுவார்கள்...

---

பணமொழி

பணக்காரர்கள் சின்ன டி.வி யையும், பெரிய நூலகத்-தையும் வைத்திருப்பார்கள். ஏழைகள் சிறிய நூலகத்தையும் பெரிய டி.வி யையும் வைத்திருப்பார்கள்.

-    ஜிக் ஜிக்லர்

டிசம்பர், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com