சின்னகோடு; பெரியகோடு: பார்கோடு!

சின்னகோடு; பெரியகோடு: பார்கோடு!
Published on

சிலரது கண்டுபிடிப்புகள் இல்லாது சுமூகமாக இயங்கமுடியாத உலகம் , அதை கண்டுபிடித்தவர்களை பெரிதாக கண்டுகொள்வதில்லை. சமீபத்தில் காலமான ஜோசப் வுட் லேண்ட் இந்த வரிசையில் வருபவர். இவரது கண்டுபிடிப்பான பார்கோட் (Barcode) இல்லாமல் உலகமெங்கும் பெரிய சூப்பர்மார்க்கெட்டுகள் முதல் நடுத்தர கடைகள் வரை இயங்குவது சிரமமான ஒன்று.

பொருட்களை ஒன்றொன்றாக எண்ணி கணக்கெடுப்பது சிரமமானதாக இருப்பதோடு தவறுகள் அதிகம் வருகிறது.பொருட்கள் பற்றிய தகவல்களைச்  சின்னஞ்சிறிய குறிப்பால் விவரிக்க ஏதாவது உங்கள் கல்லூரி செய்து தரமுடியுமா? என்றூ அமெரிக்காவின் டிரேக்ஸஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி டீனிடம் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து விண்ணப்பம்.

டீன் முடியாது என்று மறுத்து விட்ட சம்பவத்தை அந்த தொழில் நுட்பக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த வுட்லேண்டிடம் அவரது நண்பர் பெர்ணார்ட் கூறினார். இதை நாமே கண்டு பிடித்தால்  என்ன என்று வுட்லேண்ட் கேட்க பெர்ணார்ட் தலையாட்டினார். ஆராய்ச்சி தீவிரமானதால் வுட்லேண்டால் கல்லூரிப் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. கல்லூரியை விட்டு வெளியேறிய வுட்லேண்ட் தனது தாத்தாவின் வீட்டிலிருந்த படியே ஆய்வை தொடர்ந்தார். ஒரு நாள் கடற்கரை மணலில் அமர்ந்தபடி தகவல்களை மின்னணுத் தகவலாக மாற்றும் மார்ஸ் கோட் (Morse Code) எழுதிப் பார்த்தார்.புள்ளிகள் மற்றும் கோடுகளான  மார்ஸ் கோடை சின்ன லைன் பெரிய லைன் என்று மாற்றிப்பார்த்தால் என்ன என்று மாற்றி யோசித்ததில் உருவானது தான் பார்கோட் .  1952ல்  வுட்லேண்ட் பெர்னார்டின் கண்டுபிடிப்பான பார்கோடிற்கு யுஎஸ் காப்புரிமை  கிடைத்தாலும் அதை செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் இருந்தது. 1974 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓகியோவிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் தான் பார்கோட் முதலில் பயன்படுத்தப்பட்டது. இதைப் பயன்படுத்தி முதலில் ஸ்கேன் செய்யப்பட்ட பொருள் எது தெரியுமா?  சூயிங்கம்.

பாகப் பிரிவினை:  இந்திய தொழில் உலகில் பிரசித்தி பெற்ற தமிழ்ப் பெயர் வேணு ஸ்ரீனிவாசன் . டிவிஎஸ் நிறுவனத்தின் நிறுவனரான டி.வி சுந்தரத்தின் பேரன். 1979 ஆம் ஆண்டு முதல் சுந்தரம் கிளைட்டனின் (Sundaram clayton ltd) மேலாண்மை இயக்குநராக இருந்து வருகிறார். நம் ஊரு வண்டியான டிவிஎஸ் 50 மற்றும் டிவிஎஸ்ஸின் 100 cc  வண்டிகளின் வெற்றிக்கு  காரணமாக வேணுவையே குறிப்பிடலாம். இப்போது அவரது வெற்றியல்ல செய்தி . வேணு  சீனிவாசனும், அவரது சகோதரர் கோபால் சீனிவாசனும் தங்களுக்கு பிடித்தமான நிறுவனங்களைப் பிரித்துக் கொண்டதே செய்தி.

இனி டி.வி.எஸ் மோட்டார்ஸ் மற்றும் சுந்தரம் கிளைட்டன்  நிறுவனங்களை வேணுவும் , டிவிஎஸ் கேப்பிட்டல், டிவிஎஸ் எலக்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்களை கோபாலும் பார்ப்பார்கள். ஆயிரக்கணக்கான கோடிகள் புரளும் பாகப்பிரிவினை சத்தமின்றி நடந்துள்ளது.  அம்பானி சகோதரர்கள் போல் சண்டையில்லாமல் போனதால் தீனி கிடைக்காத ஏமாற்றமிருந்தாலும் , நிறுவனத்தையும் வேணுகோபால் சகோதரர்களையும் பற்றி பெருமையாகப் பேசுகிறார்கள் மும்பை பத்திரிகையாளர்கள்.

ஜனவரி, 2013.

logo
Andhimazhai
www.andhimazhai.com