துணி(வே)யே துணை

துணி(வே)யே துணை

உலகம் உன்னுடையது : Moneyதர்கள் -

நம்பினால் நம்புங்கள். ஐம்பதுஆண்டுகளுக்கு முன்னால் ஸ்பெயினில் ஒரு துணிக்கடையில் சாதாரண வேலை செய்துகொண்டிருந்த ஒருவர் 2012 ல் உலகப் பணக்காரர்கள் வரிசையில் வாரன் பப்பெட்டை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தில் அமர்கிறார்! எப்படி?... அது ஒரு மிகப்பெரிய வெற்றிக்கதை!

ரோசலியா மேரா  என்ற பெண் ஸ்பெயினில் 1944ல் பிறந்தவர். பத்தாம் வகுப்போடு படிப்பை மூட்டை கட்டி வைத்துவிட்டு துணிக் கடையில் வேலை செய்து கொண்டிருந்தவர். தன்னுடைய 19 வது வயதில் தன்னைப் போலவே துணிக்கடையில் வேலை செய்து கொண்டிருக்கும் ஆர்டிகா என்ற இளைஞர் மீது காதல் கொள்கிறார்.  திருமணத்திற்குப் பிறகு தங்கள் வீட்டிலிருந்தே மேரா தயாரித்த பெண்களின் உள்ளாடைகள் நகரெங்கும் பிரபலமடைகின்றன. தங்களுடைய டிசைன் பெறும் வரவேற்பை பார்த்தவுடன் இருவரும் மள மள வென்று களத்தில் இறங்கி தங்களுக்கான பேக்டரி மற்றும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் என்று வியாபரத்தை முடுக்கிவிட்டு சொந்தமான கடையையும் ஆரம்பித்து விடுகிறார்கள். கடைக்கு என்ன பெயர் வைப்பது என்று அதிகம் யோசிக்காமல் இருவரும் சேர்ந்து பார்த்த ‘ஙூணிணூஞச் tடஞு எணூஞுஞுடு’ பட பாதிப்பில் ஸோர்பா பெயரையே வைத்தாகிவிட்டது. நம்மூரில் ‘கௌரவம்’ படம் பார்த்துவிட்டு பிள்ளைகளுக்கு ரஜினிகாந்த் பெயர் வைத்த மாதிரி. பெயர் வைத்த பிறகுதான் தெரிகிறது மூன்று தெரு தள்ளி உள்ள பார் ஒன்றிற்கும் அதே பெயர்.பெயருக்கான மோல்ட் எல்லாம் தயாராகி வந்துவிட்டது. அதை வீணாக்க வேண்டாம் என்று முடிவு செய்தவர்கள் எழுத்துகளை மாற்றிப் போட்டு உருவாக்கிய பெயர்தான் ஸாரா. இன்று உலகமெங்கும் ஏறக்குறைய 6000 விற்பனை மையங்களை வைத்திருக்கும் ஸாராவின் ஆரம்பம் இதுதான்.  

2013 ஆகஸ்டு 15ல் தன்னுடைய 69வது வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த மேராவை போர்ப்ஸ் பத்திரிகை ஸ்பெயினின் முதல் பணக்கார பெண்மணியாக குறிப்பிட்டுள்ளது. உலக பெண் பணக்காரர்கள் வரிசையில் 66 வது இடம். குடும்ப சொத்து ஏதுமில்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியில் பணக்காரரான பெண்மணி வரிசையில் முதலிடம்.

1990-ல் ஆர்டிகோவுடனான விவாகரத்திற்கு பிறகு நிறுவனத்தின் நடவடிக்கைகளில் மேரா பெரிதாகப் பங்கெடுத்ததில்லை. அதன் பிறகு அவருடைய நடவடிக்கை அனைத்தும் பொதுச்சேவையை நோக்கியதாகவே இருந்தது. பிரிவுக்குப் பிறகு நிறுவனத்தை தாங்கி முன்னோக்கிக் கொண்டு சென்றவர் ஆர்டிகா.

இது நாள்வரை ஆர்டிகா எந்த ஒரு பத்திரிகைக் கும்,தொலைக்காட்சிக்கும் பேட்டியே அளித்ததில்லை. ஏன் புகைப்படம் கூட மிக குறைவாகவே வெளிவந்திருக்கிறது. அதே மாதிரி விளம்பரமும் எதையும் செய்ததில்லை. வழக்கமாக இது போன்ற நிறுவனங்களில் விளம்பர செலவு 3 முதல் 4 சதவீதமாக இருப்பதுதான் வழக்கம் ஆனால் ஸாரா வித்தியாசமான கடை!

ஆனால் உலகில் எந்த மூலையில் உள்ள விற்பனை மையத்தில் என்ன மாதிரியான டிசைன்கள் விரும்பி வாங்கப்படுகின்றன என்று அன்றே தெரிந்து கொள்வார்கள். ஆறு மாதத்திற்கு ஒரு முறையே புதிய டிசைன் வரும் என்ற நியதியை மாற்றி இரண்டு வாரத்திற்கு ஒருமுறை புதிய புதிய டிசைன் வகைகளை அறிமுகப்படுத்தி நவீன ஆடை உலகில் புரட்சியை உருவாக்கியவர்கள். விளம்பரம், நிறுவனம் பற்றிய செய்திகள் ஆகியவற்றால் மட்டுமே ஒரு நிறுவனம் பெரிய அளவில் வளர்ந்துவிடாது,வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து அதற்கு சரியான பொருட்களை துரிதமாக வழங்குவதன் மூலமாகவே இலக்கை அடைய முடியும் என்று நிரூபித்து காட்டியுள்ளார்கள்.

உலகின் அனைத்து பெரு நிறுவனங்களும் பெரும்பாலான ஆடைகளை மூன்றாம் உலக நாடுகளிலிருந்தே தைத்து வாங்குகின்றன.ஆனால் ஸாராவின் ஆடை வடிவமைப்பு, உற்பத்தி அனைத்தும் ஸ்பெயின் மற்றும் அருகிலுள்ள போர்ச்சுகலில் நடக்கிறது. அதிகம்  செலவு பிடிக்குமே என்ற கேள்விக்கு இவர்களின் பதில்தான் ஸாராவின் வெற்றி ரகசியம். ஸாராவுக்கு வரும் வாடிக்கையாளர்கள் இது நன்றாக இருக்கிறது, அடுத்த வாரம் வாங்கிக்கொள்ளலாம் என்றெல்லாம்  நினைக்க முடியாது.ஏனெனில் அடுத்த வாரம் முற்றிலும் புதியதாக வேறு டிசைன்கள் இருக்கும். வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை என்று உடைகளை வாங்கும் பழக்கத்தை ஆறு அல்லது ஏழு முறையாக மாற்றியதில்தான் ஸாராவின் வெற்றி இருக்கிறது.

இன்று ஏறக்குறைய 90 நாடுகளில் வியாபித்திருக்கும் ஸாராவின் வெற்றி நமக்கு உணர்த்துவது: வியாபார வெற்றிக்கு பெரும் பண பலமோ, அதிகார பலமோ முக்கியமில்லை,வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து உடனடியாக செயலாற்றுவதுதான்.

விற்கும் அறிவு

தென்னிந்தியாவில் புத்தகம் வாசிக்கும் பழக்கமுள்ள அனைவருக்கும் அறிமுகமான பெயர் ஹிக்கின்பாத்தம்ஸ். சென்னைவாசிகளுக்கு அது பழமையை ஞாபகப்படுத்தும் புரதான சின்னம். இந்தியாவின் மிகப் பழமையான புத்தகக்கடை. 1844 ல் ஏஜே மற்றும் சிஎச் ஹிக்கின்போத்தம் தொடங்கியது இந்த புத்தக நிலையம். பிறகு 1945 ல் சென்னையைச் சேர்ந்த அமால்கமேஷன்ஸ்  குழுமம் கையிலெடுத்து இன்றுவரை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். மற்ற பெரிய நிறுவனங்கள் புத்தகத்தை சார்ந்து விளையாட்டு பொருட்கள், அழகு சாதனங்கள் மற்றும் பல பொருட்களை விற்க தொடங்கியிருந்தாலும் ஹிக்கின்பாத்தம்ஸ்க்கு அதில் நம்பிக்கையில்லை. அறிவுபூர்வமான விஷயங்கள் எந்த வடிவத்திலிருந்தாலும் நாங்கள் அதை விற்பனை செய்ய தயாராக இருக்கிறோம் என்று ஹிக்கின்பாத்தம்ஸ் டைரக்டர் எஸ்.சந்திரசேகர் புத்தகங்களுடன் சிடி டிவிடி மட்டும் விற்பதைப் பற்றி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். தென்னிந்தியாவில் 22 சொந்த விற்பனை மையங்களை வைத்திருக்கும் ஹிக்கின்பாதம்ஸ் வளர்ந்து வரும் தொழிற்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொழிற்கல்வி புத்தகங்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறார்கள். வளர்ந்த நாடுகளில் புத்தக விற்பனை தேக்க நிலையை அடைந்து வருடத்திற்கு 1 முதல் 2 சதவீதம் வரையே வளர்ச்சியை எதிர்பார்க்கும் நிலையில் இங்கு 15 முதல் 20 சதவீதம் வரை வளர்ச்சியை எதிர்பார்க்கலாம் என்பது நம்பிக்கையூட்டும் செய்தி. பல முக்கியமான பிரபங்கள் கடந்த நூறாண்டுகளில் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருந்திருக்கிறார்கள்.ஆன்லைன் விற்பனை சூடுபிடித்திருக்கும் இன்றைய கால கட்டத்தில் 167 வருடமான புத்தக நிலையம் பிரமாண்டமான புரதான கட்டடத்தில் சென்னைக்கு பெருமை சேர்க்கும் விதமாக காலத்தை வென்று நின்று கொண்டிருப்பது நமக்கும் பெருமைதான்.

***

பணமொழி:

நேரம் பணத்தைவிட மதிப்பு வாய்ந்தது. பணத்தை அதிகமாக சம்பாதிக்க முடியும்; நேரத்தை அதிகமாக்க முடியாது.

-ஜிம் ரோன்.

செப்டம்பர், 2013

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com