பணக்காரராக பட்ஜெட் போடுங்கள்

பணக்காரராக பட்ஜெட் போடுங்கள்

உலகம் உன்னுடையது

நம்பிக்கை மட்டுமே மாற்றத்தை கொண்டு வந்துவிடாது. செயல் தான் மாற்றத்தைக் கொண்டுவரும். உங்களுடைய எதிர்காக திட்டத்திற்கான பணத்தேவைக்கு திட்டமிடல் மிக அவசியம். கீழ் வரும் ஏழு சுலபமான வழிகள் உங்களை வருங்காலத்தில் பணக்காரராக்கும்.முயற்சித்துத்தான் பாருங்களேன்.

1.         செலவிடும் ஒவ்வொரு ரூபாயையும் கணக்கு வையுங்கள்.

இந்த சிறு முயற்சி நீங்கள் செலவிடும் தன்மையை உங்களுக்கு காட்டிக்கொடுத்துவிடும். எப்படி கணக்கு வைக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. கணக்கு வைக்க வேண்டும் அவ்வளவு தான்.

2.         பட்ஜெட் போடுங்கள்

செலவைக் கணக்கிட ஆரம்பித்து சில வாரங்களோ, மாதங்களோ கழித்து பட்ஜெட் போட துவங்குங்கள். அபோதுதான் பணம் என்னென்ன வழிகளில் செலவாகிறது என்ற தெளிவு கிடைக்கும். உலகில் பெரும் பணக்காரர்கள் எல்லோருமே பட்ஜெட் போடுகிறார்கள் என்பதை நினைவில் வையுங்கள்.

3.         இரண்டாவது வருமானம்

என்னதான் செலவுகளை கணக்கிட்டு செலவு செய்தாலும் இருக்கிற பணத்தில்தான் செலவு செய்ய முடியும்.ஓய்வு நேரத்தில் செய்யக்கூடிய மாதிரியான பார்ட் டைம் வேலையை தேடிக்கொள்ளலாம். உங்களுக்கு பிடித்த ஹாபியிலிருந்து கூட பணம் சம்பாதிக்க முடியும். யோசியுங்கள்.

4.         அவசரகால பணம்

பணத்தைக் கணக்கிட்டு வருமானத்திற்கும் செலவுக்கும் இடைவெளியில்லாமல் பட்ஜெட் போடும்போது எதிர்பாராத மருத்துவ செலவு போன்ற செலவினங்கள் வரும்போது மாட்டிக்கொள்வோம். அதனால் எதிர்பாராத தேவைக்காக பணத்தை கண்டிப்பாக சேமித்து வையுங்கள்.

5.         கடனிலிருந்து வெளி வாருங்கள்

அதிக கடனிலிருந்தால் உடனடியாக அதிலிருந்து வெளிவாருங்கள்.முதலில் முடிக்க வேண்டியது அதிக வட்டி கொண்ட கடன்கள்.அதே போல பெரிய கடன்களிலிருந்து தொடங்காமல் சிறிய தொகையை முதலில் செட்டில் செய்யுங்கள்.

6.         பணம் கையாளுதலை கற்றுக்கொள்ளுங்கள்

பணத்தை கையாளுவதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் பொருளாதார மேதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பணம் சம்பந்தமான தகவல்களை படித்து தெரிந்து கொள்ளும்போது தேவையான விஷயங்களை எடுத்துக்கொண்டு மற்றதை விட்டுவிடலாம். எவ்வளவு மோசமான புத்தகமாக இருந்தாலும் கண்டிப்பாக நாம் கற்றுக்கொள்ள ஒன்றிரண்டு தகவலாவது அதில் இருக்கும்.

7.         வருமானத்திற்குள் செலவு

நம் முன்னோர்கள் ஏற்கெனவே சொல்லிவிட்டு போன விஷயம்தான். வரவு எட்டணா,செலவு பத்தணா என்றால் கடைசியில் தந்தனா..தம் தான்.அதனால் வரவிற்கேற்ற செலவு இருக்க வேண்டும். இதுதான் அடிப்படை. செலவினத்தை கணக்கிட்டு பட்ஜெட் போடும்போது சுலபமாக இருக்கும்.

இவை உலகெங்கும் உள்ள அடிப்படை விதிகள்.உங்களுக்கு சவுகரியமான வழிகளை நீங்களே தேர்ந்தெடுக்கவும் செய்யலாம்.

பணமொழி

பணத்தின் அருமை பற்றி உங்கள் குழந்தைகளுக்கு புரிய வைப்பதற்கு எளிமையான வழி பணம் இல்லாமலிருப்பதே.

- கேத்தரின் வொயிட்ஹார்ன்

நவம்பர், 2013

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com