ஸ்டைல் மன்னன்

ஸ்டைல் மன்னன்

உலகம் உன்னுடையது

நம்மூரில் யாராவது மிக ஸ்டைலாக உடை அணிந்து வந்தால் ‘யார்றாது ஹீரோ மாதிரி வந்திருக்கான்’ என்று கேட்போமில்லையா, ஆனால் அமெரிக்கர்கள் அப்படி கேட்க மாட்டார்கள்.‘யார்றாது ரால்ப் லாரன் மாதிரி வந்திருக்கான்’ என்பார்கள். ஆமாம், அமெரிக்க பேஷன் உலகில் ஸ்டைலை உருவாக்கிய ஹீரோ ரால்ப் லாரன். இவருடைய பெயர் ஒருவேளை உங்களுக்கு புதிதாக இருக்கலாம். ஆனால் இவருடைய பிராண்டை உபயோகித்திருப்பீர்கள், அல்லது குறைந்தபட்சம் நிறைய இடங்களில் பார்த்தாவது இருப்பீர்கள். போலோ டி சர்ட் உங்களுக்கு தெரிந்ததுதானே? அதை உருவாக்கியது இவர்தான். அமெரிக்காவில் இவர் தொழிலதிபர் மட்டுமல்ல, அமெரிக்கர்களின் வாழ்வியலில் ஒன்றாக கலந்துவிட்டவர். அமெரிக்கர்கள் அணியும் ஷூக்களிலிருந்து அவர்களின் வரவேற்பறை, அணிகலன்கள் என்று அனைத்திலும் சினிமா  அல்லது நாவல்களில் தோன்றும் உயர்தர வகை கனவை நனவாக்கியவர். போர்ப்ஸ் பத்திரிகையின் உலக பணக்காரர்கள் வரிசையில் 162 வது இடத்தில் இருக்கும் போலோ பிசினஸ் சாம்ராஜ்யத்தின் இன்றைய மதிப்பு சுமார் ஐம்பதாயிரம் கோடி.

ரால்ப் இன்று உருவாக்கியிருக்கும் உலகத்திற்கும் அவருடைய சிறு வயத்திற்கும் கொஞ்சமும் தொடர்பில்லை. நியூயார்க்கில் நான்கு குழந்தைகள் கொண்ட நடுத்தர வர்க்க குடும்பத்தில் கடைக்குட்டி. சின்ன வயசு கனவு பேஸ்கட்பால் பிளேயர் ஆவது அல்லது அப்பாவைப் போன்றே ஓவியராவது. அப்பா நல்ல ஓவியரென்றாலும் பிழைப்புக்காக வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை. அப்போதே ரால்ப்பிற்கு மிக ஸ்டைலாக உடை அணியவும், அலங்கார பொருட்களின் மீதான விருப்பமும் அதிகமிருந்தது.ஆனால் தன் பெற்றோர்களால் அதைத் தர முடியாது, தனக்கான வாழ்க்கையை தானே அமைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார்.

ராணுவத்தில் சில காலம் பணிபுரிந்துவிட்டு நெக்வேர் என்ற டை கம்பெனியில் 26 வயதில் விற்பனையாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது வழக்கமான அமெரிக்க டை அமைப்பிலிருந்து மாறுபட்ட ஐரோப்பிய வகையிலான அகலமான டையை உருவாக்கினார். நெக்வேர் கம்பெனியில் அவருடைய புதிய டிசைனை காட்டி, நியூயார்க்கில் இது போன்ற புதிய டையை விற்க்கலாம் என்ற யோசனை உடனடியாக நிராகரிக்கப்பட்டது. ‘உலகம் உனக்காக காத்திருக்கவில்லை,போய் உன்னுடைய வேலையைப் பார்’ என்றார்கள். ரால்ப் அதிகம் யோசிக்கவில்லை.வேலையை உதறி விட்டு சொந்தமாக டை தயாரிக்கும் வேலையில் இறங்கினார். நியூயார்க் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் அருகில் சின்ன கடை. தயாரித்த டையை அவரே கடை கடையாக தேடி விற்றார். நல்ல வரவேற்பு. ஒரு நாள் ரால்ப் கடையைத்தேடி ஒருவர் வந்தார்.‘இந்த டை நன்றாக இருக்கிறது. இதை எங்களுடைய கொள்முதல் நிலையத்திற்கு அனுப்ப முடியுமா?’ என்றார்.அப்போது ரால்ப் நடத்தி வந்தது சின்ன கடை. விமான பயணமெல்லாம் செய்தது கிடையாது. ஆனால் நேரடியாக தன்னுடைய டையை கொண்டுபோய் விளக்காமல் அதை ஒருவர் புரிந்து கொள்ள முடியாது என்பதை திடமாக நம்பினார்.உடனடியாக அடுத்த விமானத்தைப் பிடித்து மைய அலுவலகத்தின் கொள்முதல் அதிகாரிகளை சந்தித்தார்.கிடைத்த ஆர்டர் 100 டஜன் டைகள்.வெற்றி நெருங்கி விட்டதை உணர்ந்தார் ரால்ப்.

ஆனால் அத்துடன் முடிந்துவிடவில்லை. நியூயார்க்கின் புளூமிங்டேல் பகுதி புதிய டிசைன் களின் மையம். அங்கேயும் தன்னுடைய டை விற்கப்பட வேண்டும் என்று விரும்பினார். நீண்ட முயற்சிக்குப் பிறகு அங்கு விற்பதற்கான வாய்ப்பு கிடைத்தபோது இரண்டு நிபந்தனைகள் விதித்தார்கள். முதலாவது டையின் அகலத்தை கால் இன்ச் குறைக்க வேண்டும்.இரண்டாவது போலோ பிராண்டிற்கு பதில் அவர்களுடைய பிராண்டை போட வேண்டும்.இரண்டிற்குமே ரால்ப் ஒப்புக்கொள்ளவில்லை.பையை தூக்கிக்கொண்டு கிளம்பி விட்டார்.  ‘டையில் கால் இன்ச் குறைச்சாத்தான் என்ன?ஏன் அடம் பிடிக்கற’என்றார்கள் நண்பர்கள். ஆனால் ரால்ப்,‘என்னுடைய பிராண்ட் எனக்கு பிடித்த மாதிரிதான் இருக்கும்,யாருக்காகவும் அதை மாற்றப்போவதில்லை’ என்று கூறிவிட்டார். சில மாதங்களுக்குப் பிறகு அவர்களிடமிருந்து ரால்ப்பிற்கு அழைப்பு வந்தது.டையை சப்ளை செய்யுங்கள் முழு ரேக் முழுக்க அடுக்கப் போகிறோம் என்றார்கள். ரால்ப்பின் இந்த உறுதிதான் இன்று தெருவெங்கும் போலோ டி சர்ட்டைக் காண காரணம்!  

---

உலக விளையாட்டு வீரர்களில் பெரும் பணக்காரர்கள்

முதலிடம்: டைகர் உட்ஸ்.

கோல்ப் வீரர்.

வருமானம்:

468 கோடி.

வயது: 37

16 வது இடம்: எம்.எஸ்.டோனி

இந்திய கிரிக்கெட் வீரர்.

வருமானம்: 189 கோடி

வயது: 32

51 வது இடம்: சச்சின் டெண்டுல்கர்.

இந்திய கிரிக்கெட் வீரர்.

சொத்து மதிப்பு: 132 கோடி

வயது: 40

89 வது இடம்:

செபஸ்டின் வெட்டல்.

ஜெர்மன் பார்முலா ரேஸ் வீரர்.

வருமானம்: 108 கோடி

வயது: 26

நவம்பர், 2013

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com