இலங்கையை சலசலக்கவைத்த 2 போராட்டங்கள்!

இலங்கை பள்ளி ஆசிரியர் போராட்டம்
இலங்கை பள்ளி ஆசிரியர் போராட்டம்
Published on

இலங்கைத் தீவில் நடைபெற்ற இரண்டு பெரும் போராட்டங்களால் அந்த நாடே சலசலத்துப் போனது. 

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீண்டுவிட்டதாக அந்நாட்டு அதிபர் ரணிலும் அமைச்சர்களும் கூறிவருகின்றனர். இதனிடையே காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்பக் கோரி அரசு ஊழியர்களும் வேலை வழங்கவேண்டும் எனக் கோரி பட்டதாரிகளும் அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். 

அதன் தொடர்ச்சியாக, நிலுவை சம்பளத்தை வழங்கவேண்டும் என்பது உடப்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் பள்ளி ஆசிரியர்கள், அதிபர்கள் சங்கம் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒட்டுமொத்தமாக மருத்துவ விடுப்பு எடுத்து அவர்கள் வேலைக்கு வராததால், பள்ளிக்கு வந்த மாணவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். குறிப்பாக, மற்றவர்களின் வண்டிகளில் பள்ளிக்கு வந்தவர்கள் வகுப்புகள் இல்லாததால் வீடுதிரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். 

ரயில்நிலைய அதிகாரிகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் அஞ்சல் தொடர்வண்டிச் சேவை பெரும்பாலும் ரத்துசெய்யப்பட்டது. 

இலங்கை மலைத்தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கை மலைத்தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கடந்த மே மாதம் அரசாங்கம் கூறியபடி, இலங்கை தேயிலை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அன்றாடம் அந்நாட்டுப் பணம் 1,700 ரூபாய் வழங்கவேண்டும் எனக் கூறி, பல பகுதிகளில் எஸ்டேட் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பலாங்கொடை பெருந்தோட்ட நிறுவனத் தொழிலாளர்கள் முருங்கவத்த பகுதியில் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிசில்டன் தோட்டத் தொழிலாளர்களும் அவர்களின் பணிப் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வட்டகொடை, தெற்கு மடக்கும்புர ஆகிய தோட்டங்களின் பணியாளர்களும் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைநகர் கொழும்பில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இதே கோரிக்கைக்காக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com