தமிழ்க் கூட்டமைப்புக்கு அடுத்த தலைவர்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
Published on

இலங்கையில் மறைந்த தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் பதவிக்குப் பதிலாக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் முடிவெடுக்காமல் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் ஈழத்தமிழர் தாயகப் பகுதியான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பரவலான செல்வாக்கைக் கொண்ட கட்சிகளின் கூட்டணியான- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக மூத்த தலைவர் சம்பந்தன் இருந்துவந்தார். கடந்த வாரம் அவர் மறைந்ததை அடுத்து, அந்நாட்டுச் சட்டப்படி அவருடைய திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் அவருக்கு அடுத்தபடியாக வாக்குகளைப் பெற்ற கதிரவேலு சண்முகம் குகதாசன் நேற்றுமுன்தினம் செவ்வாயன்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக்கொண்டார். சபாநாயகர் மகிந்த யாப்ப அபேவர்த்தனே முன்னிலையில் அவர் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, சம்பந்தன் வகித்துவந்த கூட்டமைப்பின் தலைவர் பதவிக்கு யார் வருவது என்பதில் போட்டி ஏற்பட்டது. வயதுமூப்பால் சம்பந்தனின் பணிகளை அவருக்குப் பதிலாக மூத்த வழக்கறிஞராகவும் உள்ள எம்.பி. சுமந்திரன் கவனித்துவந்தார். சம்பந்தனின் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த அவரையே கூட்டமைப்புத் தலைவராக ஆக்கலாம் என அந்தக் கட்சியினர் விரும்புகின்றனர். நேற்று இதுகுறித்து ஆலோசிக்க நடத்தப்பட்ட தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் முடிவெடுக்க முடியாமல் கிடப்பில் போடப்பட்டது.

பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமைப்பில், டெலோ, பிளாட் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் 4 பேர் உள்ளனர். டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனைக் கூட்டமைப்பின் தலைவராக ஆக்கவேண்டும் என அவ்விரு கட்சிகளும் விரும்புகின்றன. ஆனால், அதற்கு தமிழரசுக் கட்சியில் ஒருமித்த ஆதரவு இல்லை. மாறிமாறி ஆலோசனைகளாக நடந்தபடி இருக்கின்றன.

இது நீண்டுகொண்டே போனால், டெலோவும், பிளாட்டும் கூட்டமைப்பிலிருந்து விலகி தனிக் குழுவாக இயங்கும் நிலை ஏற்படக்கூடும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com