கீழடி படிக எடைக் கல்
கீழடி படிக எடைக் கல்தமிழ்நாடு தொல்லியல் துறை

கீழடியில் அடுத்தடுத்து ஆச்சர்யங்கள்... படிக எடைக்கல், சுடுமண் பாம்பு!

சிவகங்கை மாவட்டம் கீழடி தொல்லியல் களத்தில் முதல் முறையாக படிக எடைக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கீழடி வட்டாரத்தில் ஏற்கெனவே பல வகை எடைக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்போது படிகக்கல் கிடைத்திருப்பதை தமிழ்நாட்டு அரசின் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

கீழடியில் மைய, மாநில அரசுகளின் தொல்லியல் துறையினரால் இதுவரை எட்டு கட்டங்களாக அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றில் கிடைத்த தொல்லியல் பொருட்கள் கீழடி அருங்காட்சியகத்திலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அன்றாடம் ஏராளமானவர்கள் கீழடி அருங்காட்சியகத்துக்கு வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.

கீழடி சுடுமண் பாம்பு
கீழடி சுடுமண் பாம்புதமிழ்நாடு தொல்லியல் துறை

இந்த நிலையில், ஒன்பதாவது கட்டமாக தற்போது அந்தப் பகுதியில் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் முற்றிலும் படிகத்தால் ஆன எடைக்கல் ஒன்று கிடைத்திருப்பது, ஆராய்ச்சிக் குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒன்பதாம் கட்ட அகழாய்வில் ஒன்பது குழிகள் தோண்டப்பட்டுள்ளன. ஒன்பதாவது குழியில் ஆறாவடி அடி ஆழத்தில் இந்தப் படிக எடைக்கல் கண்டறியப்பட்டது.

இந்த எடைக்கல் கோள வடிவத்தை ஒத்தும், மேலேயும் கீழேயும் தட்டையாகவும் காணப்படுகிறது. ஒளி புகும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

இரண்டு செ.மீ. விட்டம், 1.5 செ.மீ. தடிமன் கொண்ட இந்தக் கல்லின் எடை 8 கிராம் ஆகும்.

கீழடி சுடுமண் பாம்பு
கீழடி சுடுமண் பாம்புதமிழ்நாடு தொல்லியல் துறை

தங்கம் போன்ற விலை உயர்ந்த அணிகலன்களை எடைபோடுவதற்கு அந்தக் காலத்தில், இந்த எடைக்கல்லைப் பயன்படுத்தி இருக்கக்கூடும் என்று தொல்லியலாளர்கள் கருதுகின்றனர்.

படிக எடைக்கல்லின் எடை சரியாக 8 கிராம் இருப்பதால், இப்படி இருக்க வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இதைத் தவிர, சுடு மண்ணால் செய்யப்பட்ட வட்டச் சில்லுகள், ஆணி, கருப்பு-சிவப்பு பானை ஓடுகள் ஆகியவையும் இதே பகுதியில் கிடைத்துள்ளன என்று மாநில அரசின் தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள சமூக ஊடகக் குறிப்பில், “ கீழடி ஒன்பதாம் கட்ட அகழாய்வில் XM19/3 என்ற அகழாய்வுக் குழியில் 190 செ.மீ ஆழத்திலிருந்து வெளிக்கொணரப்பட்ட பானை ஓடுகளை வகைப்படுத்தும் பொழுது, உடைந்த நிலையில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலைப் பகுதி ஒன்று கண்டறியப்பட்டது.” என்று தெரிவித்துள்ளார்.

கீழடி சுடுமண் பாம்பு
கீழடி சுடுமண் பாம்புதமிழ்நாடு தொல்லியல் துறை

”கைகளால் செய்யப்பட்ட இச்சுடுமண் உருவத்தில், பாம்பின் கண்களும் வாய் பகுதியும் மிக நேர்த்தியாக வனையப்பட்டுள்ளது. மேலும் இச்சுடுமண் உருவமானது சொரசொரப்பான மேற்பரப்புடன் சிவப்பு பூச்சு பெற்று காணப்படுகிறது. மேலும் இச்சுடுமண் உருவம் 6.5 செ.மீ நீளம் 5.4 செ.மீ அகலம் 1.5 செ.மீ தடிமன் கொண்டுள்ளது. இந்த சுடுமண் உருவத்துடன் சுடுமண்ணால் செய்யப்பட்ட பந்து, வட்டச்சில்லுகள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணி மற்றும் கருப்பு-சிவப்பு நிறப் பானை ஓடுகள், சிவப்புப் பூச்சு பெற்ற பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.” என்றும் அமைச்சர் தென்னரசு விவரித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com