சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று காலையில் உயிரிழந்தது.
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் - அஜிஸா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தைக்கு, சென்னை இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அப்போது, குழந்தையின் கையில் டிரிப் ஊசி போடப்பட்ட இடத்தில், கருப்பாக மாறியது. படிப்படியாக கை முழுவதும் கருப்பாகி அழுகிப்போனது.
பிரச்னை பெரிதாகி, ஊடகங்களில் பரபரப்புச் செய்தியானதும் அரசியல் கட்சிகள் சுகாதாரத் துறை மீது குற்றம்சாட்டின. மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரடியாகத் தலையிட்டார். குழந்தை மேல்சிகிச்சைக்காக எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான்.
அங்கு கடந்த மாதம் 2ஆம் தேதி குழந்தையின் வலது கையை அறுவைசிகிச்சை மூலம் முழுவதுமாக அகற்றினர். தொடர்ந்து அங்கு மருத்துவக் கண்காணிப்பில் இருந்த குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. சிகிச்சை பலனின்றி அந்தக் குழந்தை இன்று அதிகாலையில் உயிரிழந்தது.
முன்னதாக, இராஜீவ்காந்தி மருத்துவமனை சிகிச்சை குறித்து சுகாதாரத் துறை மூவர் குழு ஒன்றை அமைத்தது. மருந்தினாலோ சிகிச்சையாலோ பாதிப்பு ஏற்படவில்லை என அந்தக் குழு அறிக்கை அளித்தது.
இந்த நிலையில் குழந்தையின் உயிரிழப்பை அடுத்து, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வைட்டமின் டி, ஹைப்போதைராய்டிசம் உட்பட பல காரணங்களால், சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் உயிரிழப்பு நேரிட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இராமநாதபுரத்தைச் சேர்ந்த இக்குழந்தை, ஒன்றரை கிலோ எடையுடன் 32 வாரங்களிலேயே பிறந்தது. ஹைட்ரோகேபாலஸ் எனும் மூளையிலிருந்து நீர்க்கசிவு நோயால் பாதிக்கப்பட்டது. அதை சரிசெய்வதற்காக, அதன் பெற்றோர் சென்னைக்கு அழைத்துவந்ததில் இப்படியொரு துயர முடிவு நிகழ்ந்துள்ளது.