பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து!

பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து!
Published on

பருத்தி மீதான 11 சதவிகித இறக்குமதி வரியை தற்காலிகமாக ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 25 சதவிகிதம் பரஸ்பர வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ரஷ்யாவுடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தை காரணம் காட்டி, கூடுதலாக 25 சதவிகிதம் என இந்திய பொருள்களுக்கு மொத்தம் 50 சதவிகிதம் இறக்குமதி வரி விதித்தார் டிரம்ப்.

இந்த வரி விதிப்பால் இந்தியாவின் ஜவுளித்துறை ஏற்றுமதி கடுமையாக பாதிப்பை சந்தித்து வருகின்றது. இதனை ஈடு செய்யும் விதமாக இந்தியாவில் இறக்குமதி செய்யும் பருத்தி மீதான 11 சதவிகித வரியை ரத்து செய்யக் கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 30 வரை இந்தியாவில் இறக்குமதி செய்யும் பருத்தி மீதான வரியை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ரஷியா - உக்ரைன் போரில் அமெரிக்காவின் அமைதிப் பேச்சுவார்த்தை முன்னேற்றம் அடைந்துள்ளது. இதனால், ரஷ்யாவை காரணம் காட்டி இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 25 சதவிகிதம் கூடுதல் வரியை அமெரிக்கா விலக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com