சென்னையில் நடைபெற்று முடிந்த மூன்று நாள்கள் பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவில், மொழியாக்கம் தொடர்பாக 1,125 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதில் தமிழிலிருந்து அயலக மொழிகளுக்கு 1005 ஒப்பந்தங்களும் அயல் மொழிகளிலிருந்து தமிழ் மொழிக்கு 120 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன. குறிப்பாக அரபி மொழி 33 ஒப்பந்தங்களும், பிரெஞ்சு மொழி 32 ஒப்பந்தங்களும், மலாய் மொழி 28 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.
சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் கடந்த 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதிவரை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா - 2025 நடைபெற்றது.
இன்று காலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் தமிழ்நாடு பாடநூல் - கல்வியியல் பணிகள் கழகம் பதிப்பித்த 75 நூல்களையும் மொழிபெயர்ப்பு மானியம் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். முன்னாள் மைய அமைச்சர் சசிதரூர் பெற்றுக்கொண்டார்.
உலகைத் தமிழுக்கும்; தமிழை உலகுக்கும் (Bringing the World to Tamil; Taking Tamil to the World) என்ற உயரிய நோக்கத்தோடு கொண்டாடப்படும் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவில், 2023ஆம் ஆண்டு 24 நாடுகள் பங்குபெற்று 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், 2024ஆம் ஆண்டு 40 நாடுகள் பங்குபெற்று 752 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆண்டு 60-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பதிப்புலக ஆளுமைகள் இப்புத்தகத் திருவிழாவில் கலந்துகொண்டனர்.
முதல் முறையாக, ஆஸ்திரேலியா, பெனின், புரூனே, பல்கேரியா, சிலி, சைப்ரஸ், எஸ்தோனியா, எத்தியோப்பியா, கானா, ஐவரி கோஸ்ட், ஜப்பான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், லக்ஸம்பர்க், மடகாஸ்கர், மொரிசியஸ், மெக்சிகோ, மங்கோலியா, மொராக்கோ, மொசாம்பிக், நேபாளம், நைஜீரியா, நார்வே, ROC (தைவான்), ருமேனியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, இலங்கை, டோகோ, உக்ரைன், அமெரிக்க ஐக்கிய நாடுகள் (USA), உஸ்பெகிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய 34 நாடுகள் பங்கேற்றுள்ளன.
இந்த ஆண்டு நடைபெற்ற சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் 1,125 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதில் தமிழ்மொழியிலிருந்து அயலக மொழிகளுக்கு 1005 ஒப்பந்தங்களும் அயலகமொழிகளிலிருந்து தமிழ் மொழிக்கு 120 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. குறிப்பாக, அரபிக் மொழிக்கு 33 ஒப்பந்தங்களும், பிரெஞ்சு மொழிக்கு 32 ஒப்பந்தங்களும், மலாய் மொழிக்கு 28 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.
மேலும், சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா தூதர் விருதை PWB Global Ambassador, ASEAN Publishing Association, African Publishers Network (APNET), Francophone Ambassador ஆகிய பதிப்பகம் - அமைப்பிற்கும்,
உலகளாவிய தொலைநோக்கு டிஜிட்டல் புத்தக கண்காட்சி சிறப்பு விருதை ரியாத் புத்தக கண்காட்சிக்கும்,
பண்டைய தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருதினை தாமஸ் ஹிடோஷி புருக்ஷிமா (Thomas Hitoshi Pruiksma) - பேராசிரியர் டாக்டர் அருள்சிவன் ராஜு ஆகியோருக்கும்,
நவீன தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருதை கிறிஸ்டியன் வியிஸ் (Christian Weiss) - கே.எஸ். வெங்கடாசலம் ஆகியோருக்கும்,
கூட்டு வெளியீட்டுக் கூட்டாண்மை விருதை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்பகத்திற்கும்,
பன்னாட்டு மானியக் குழுவின் சிறப்பு விருதை துருக்கி நாட்டின் TEDA-வுக்கும்,
புத்தக ஊக்குவிப்பு விருதை மங்கோலியா மேஜிக் பாக்ஸ் - இத்தாலி நாட்டின் கியூண்டி ஓடியன் புத்தக விற்பனை நிலையத்திற்கும் (Guinti Odeon Bookshop),
உலகளாவிய இலக்கிய ஆதரவிற்கான விருதை பொலானா குழந்தைகள் புத்தகக் கண்காட்சிக்கும் (Bologna Children’s Book Fair) முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
ஆண்டுதோறும் இந்த விழாவுக்காக, மொழிபெயர்ப்பு மானியமாக 3 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. இதன்மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளில் 166 தமிழ் நூல்கள் 32 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படுவதற்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற பன்னாட்டுப் பதிப்பகங்களான ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரஸ், பென்குயின் ரேண்டம் ஹவுஸ், ஹார்ப்பர் ஹாலின்ஸ், ஹெஷட் (Hachette), ரௌட்லட்ஜ் (Routledge), ப்ளூம்ஸ்பெர்ரி (Bloomsbury) போன்றவற்றுடன் இணைந்து பல்வேறு கூட்டு வெளியீடுகளை (Co-publications) குறிப்பாக தமிழ் இலக்கியங்களை - தமிழ்நாட்டு வரலாற்றை - தமிழர் பண்பாட்டை ஆங்கில மொழி மொழிபெயர்ப்புகள் வாயிலாக உலகெங்கும் கொண்டுசேர்க்கும் பணியை தமிழ்நாடு அரசு செய்துவருகிறது.