மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்த தி.மு.க. அரசு, அமைச்சர் மூர்த்தி ஊர்வலத்திற்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கியது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழகம் முழுவதும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் தி.மு.க.வினரை, சட்ட நடவடிக்கைகளிலிருந்து காப்பாற்றி வருவது போல, அமைச்சர் மூர்த்தியையும், சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டுச் செயல்பட அனுமதிக்கிறதா தி.மு.க. அரசு?
தி.மு.க. வினர் கூட்டங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கி, பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டங்களுக்கு அனுமதி வழங்காமல் பாரபட்சமாகச் செயல்படும் தி.மு.க.வை உயர்நீதிமன்றமே கண்டித்திருக்கிறது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலையின் புனிதத்தைக் காக்க, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் ஜனநாயக ரீதியான போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், பொதுமக்கள் எழுச்சியைத் தடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு தடை விதித்த தி.மு.க. அரசு, தமிழகம் முழுவதும் குற்றங்களின் ஊற்றுக் கண்ணாக இருக்கும் தி.மு.க.வினர் ஊர்வலத்தை அனுமதித்திருப்பது ஜனநாயகத்தையே கேலிக்குரியதாக்கியிருக்கிறது.
நாட்டின் சட்டங்களைக் காற்றில் பறக்கவிட்டு, வரம்பு மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசு, இதற்கான விலையை நிச்சயம் கொடுக்க வேண்டியிருக்கும்.” இவ்வாறு அவர் கூறி உள்ளார்.