ராஜினாமா செய்தால் 20 லட்சம்… அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
Published on

அரசு பணியில் இருந்து தாமாகவே முன்வந்து விலகும் ஊழியர்களுக்கு 8 மாதம் சம்பளம் வழங்கப்படும் என டொனால்ட் டிரம்ப்நிர்வாகம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில், பாதுகாப்புத்துறை, தபால் துறை தவிர்த்த பிற அரசு பணிகளில் 23 லட்சம் பேர் உள்ளனர். இத்தனை அரசு ஊழியர்கள் தேவையில்லை என்பது அதிபர் டிரம்ப் கருத்தாக உள்ளது. அரசு துறைகளில் திறன் மேம்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள தொழிலதிபர் எலான் மஸ்க்கும் இதே கருத்தை தான் கூறி வருகிறார். மீண்டும் பொறுப்பேற்றது முதல் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வரும் டிரம்ப் நிர்வாகம், அரசு ஊழியர்களுக்கு இமெயில் மூலம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளது.

இது, அரசு ஊழியர்கள் தானாக முன்வந்து பணியை ராஜினாமா செய்வதற்கான திட்டம் ஆகும். இந்த இமெயில், 20 லட்சம் அரசு ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பதவியிலிருந்து தாமாகவே முன்வந்து விலகும் ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதம் வரை சம்பளம் வழங்கப்படும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முடிவெடுக்க பிப்ரவரி 6ஆம் தேதி வரை அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் பணி திறமையை ஆய்வு செய்து, அவர்களை தொடர்ந்து வைத்துக்கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த இமெயில் அறிவிப்பு, எதிர்க்கட்சியினர் மத்தியிலும், தொழிற்சங்கத்தினர் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் ஊழியர்கள் யாரும் ராஜினாமா செய்ய வேண்டாம் என்று ஒன்றரை லட்சம் பேரை உறுப்பினராகக் கொண்ட அமெரிக்க கருவூலத்துறை ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. செப்டம்பர் மாதம் வரை 8 மாதங்கள், வேலையே செய்யாமல் யாருக்கும் சம்பளம் தருவதற்கு, அதிபராக இருந்தாலும் டிரம்புக்கு அதிகாரம் கிடையாது என்று எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com