20,000 பேருக்கு வேலை... சென்னை அருகே தைவானியத் தொழில் பூங்கா!
தமிழ்நாட்டில் அந்நிய நேரடி முதலீட்டில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்ட தைவான் நாட்டு நிறுவனங்களுக்கென, சென்னைக்கு அருகில் சர்வதேச தரத்தில் ஒரு பிரத்யேக தைவானியத் தொழில் பூங்கா அமைக்கப்படவுள்ளது.
உதிரி பாகங்கள் தயாரிக்கும் உற்பத்தியாளர்களுக்கென இந்தத் தொழில் பூங்கா ரூ.10,000 கோடி முதலீடு ஈர்ப்பதுடன் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் என அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
”தமிழ்நாட்டில் ஈர்க்கப்படும் அந்நிய நேரடி முதலீட்டில், குறிப்பாக மின்னணு மற்றும் காலணி போன்ற துறைகளில், தைவானிய முதலீடுகள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. மாநிலத்தில் உள்ள முக்கிய தைவான் நாட்டு நிறுவனங்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் உற்பத்தியாளர்களுக்கு பிரத்தியேகமான உற்பத்தி இடம் தேவை என்பதை உணர்ந்து, சென்னைக்கு அருகில் சர்வதேச தரத்தில் ஒரு பிரத்யேக தைவானிய தொழில் பூங்கா அமைக்கப்படும். மின்னணு உதிரி பாகங்கள், தொழில்நுட்ப ஜவுளி மற்றும் காலணி உதிரி பாகங்கள் போன்ற தொழில்களில் தைவானிய நிறுவனங்களிடமிருந்து ரூ.10,000 கோடி முதலீடுகளை ஈர்ப்பதை இந்த பூங்கா இலக்காகக் கொண்டிருக்கும். இதனால் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.” என்று சட்டப்பேரவையில் நேற்று வெளியிடப்பட்டதொழில்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள, முதலீட்டிற்கு சாதகமான சூழலை, அமெரிக்கா, ஜெர்மனி, தென் கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் உள்ள முதலீட்டாளர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக வழிகாட்டி நிறுவனத்தின் அமர்வுகள் (Guidance Desks) மேற்கண்ட நாடுகளில் அமைக்கப்படும். இதன் மூலம், முதலீட்டாளர்களுக்கு நேரடி ஆதரவுச் சேவைகள் வழங்கப்படுவது மட்டுமின்றி, புதிய முதலீட்டு வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு, உலக பொருளாதார நிலையில், தமிழ்நாட்டின் நிலை மேலும் வலுப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.