வரும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் விஜய் தனித்து போட்டியிடுவார் என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்தாண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை மையமாக கொண்டு கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை நியமித்துள்ளார். விஜய்க்கு தேர்தல் ஆலோசனைகளை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் வழங்கி வருகிறார்.
சில தினங்களுக்கு முன் சென்னையில் நடிகர் விஜயை பிரசாந்த் கிஷோர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். த.வெ.க.கட்சி 2ஆம் ஆண்டு விழாவிலும் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றார்.
இந்நிலையில், தனியார் செய்தி சேனலுக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விஜய் நினைக்கிறார். அதற்கு என்னால் முடிந்த உதவிகளை நான் செய்வேன்.
தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க. விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி இல்லை.
தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் தனித்து போட்டியிட உள்ளது. தனித்து தேர்தலை சந்திப்பதற்காக கட்சியின் தலைவர் விஜய் வியூகம் வகுத்து வருகிறார். தேர்தலில் விஜய் தனித்து போட்டியிட்டு ஆட்சியைப் பிடிப்பார்.” என்றார்.