ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாக, பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் “ஆசாதி” உட்பட 25 புத்தகங்களுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீர் உள்ள புத்தகக் கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், அருந்ததி ராய், ஏஜி நூரணி போன்ற பிரபல முன்னணி எழுத்தாளர்களின் படைப்புகள், பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அருந்ததி ராயின் “ஆசாதி”, மறைந்த ஏஜி நூரனியின் ”தி காஷ்மீர் டிஸ்பியூட் 1947-2012”, சுமந்த்ரா போஸின் ”காஷ்மீர் அட் தி கிராஸ் ரோட்ஸ்” மற்றும் அனுராதா பாசினின் ”தி அண்டோல்ட் ஸ்டோரி ஆஃப் காஷ்மீர் ஆஃப்டர் ஆர்டிகல் 370” உட்பட 25 புத்தகங்கள் தடை விதிக்கப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்து, அம்மாநில உள்துறை கூறுகையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் புலனாய்வு தகவல்களின் அடிப்படையில், அந்தப் புத்தகங்கள் அனைத்தும் தவறான தகவல்களைப் பரப்பியதுடன், இளைஞர்களை வழிக்கெடுப்பது, பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது, அரசுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவது ஆகிய சட்டவிரோத செயல்களுக்கான காரணங்களில் முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சுமார் 25 புத்தகங்கள், அடையாளம் காணப்பட்டு, அவற்றை எழுதியவர்கள், அச்சிட்டவர்கள் ஆகியோர் பட்டியலிடப்பட்டு, அந்தப் புத்தகங்கள் அனைத்தும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 சட்டப்பிரிவு 98 கீழ் பறிமுதல் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஜம்மு – காஷ்மீர் மாநிலம் முழுவதும் உள்ள புத்தகக் கடைகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கைக்கு எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.