அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர் அந்த நாட்டில் அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் அமெரிக்காவுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தியது முக்கியமானது.
சீனா, இந்தியா முதலிய ஆசிய நாடுகளுக்கு மட்டுமல்லாமல், பக்கத்தில் உள்ள கனடா நாட்டுக்கும் கடுமையான வரி விதிப்பை அறிவித்தார், டிரம்ப்.
டிரம்பின் வரி உயர்வுக்குப் பதிலடியாக, கனடாவும் அமெரிக்கப் பொருட்கள் மீதான வரியை 25 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று வெளியிட்ட அறிவிப்பில், இன்று செவ்வாய்க்கிழமை முதல் 3000 கோடி கனடிய டாலர் மதிப்புள்ள அமெரிக்க இறக்குமதிக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த 21 நாள்களுக்கு அமெரிக்காவிலிருந்து வரக்கூடிய 12,500 கோடி கனடிய டாலர் மதிப்புள்ள பொருட்களுக்கும் இதே அளவுக்கு வரி விதிக்கப்படும் என்று ட்ரூடோ அறிவித்துள்ளார்.