விடுதலைப் புலிகளிடம் பயிற்சி பெற்ற நக்சல் தலைவர் உட்பட 27 பேர் சுட்டுக்கொலை!

விடுதலைப் புலிகளிடம் பயிற்சி பெற்ற நக்சல் தலைவர் உட்பட 27 பேர் சுட்டுக்கொலை!
Published on

சத்தீஸ்கர் மாநிலம் நரயன்பூரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் நக்சல் தலைவர் பசவராஜ் உட்பட 27 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கரில் நக்சல்களை முற்றிலும் ஒழிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் உள்ள கரேகுட்டாலு மலையில் ஆபரேஷன் பிளாக்பாரஸ்ட் என்ற பெயரில் 21 நாட்கள் மிகப் பெரிய தேடுதல் வேட்டை நடைபெற்றது. இதில் 31 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், மற்றும் உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதனை தொடர்ந்து சத்தீஸ்கர் நரயண்பூரில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக உளவுத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் நக்சல் ஒழிப்பு படை சிறப்பு போலீஸார் கடந்த 3 நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் இரு தரப்பினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் 27 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் நக்சல் அமைப்பின் தலைவர் கேசவராஜ் என்ற பசவராஜ் என்பவரும் ஒருவர்.

பாதுகாப்பு படையினரால் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் கமாண்டர்கள் பலர் உயிரிழந்தவர்களில் இருக்கலாம் என பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த மாவோயிஸ்ட்களை அடையாளம் காணும் பணி தற்போது நடைபெற்றுவருகிறது. பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளனர்.

புலிகள் அமைப்பிடம் பயிற்சி

மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜ்(68) நக்சல் அமைப்பில் பொதுச் செயலாளராகவும், பொலிட்பீரோ உறுப்பினராகவும் இருந்தார். இவர் தெலங்கானா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். வாரங்கலில் உள்ள பொறியியல் கல்லூரியில் (ஆர்.ஈ.சி) படித்துள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பினரிடம் வனப் போர் உத்திகளில் பயிற்சி பெற்றவர் என போலீசார் கூறுகின்றனர். இவரைப் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ.1கோடி பரிசு வழங்கப்படும் என என்ஐஏ மற்றும் பல மாநில அரசுகள் அறிவித்திருந்தன.

இந்நிலையில் இவர் தற்போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜ், பிரகாஷ், கிருஷ்ணா, விஜய், பசவராஜ் , உமேஷ், ராஜு, கம்லு என 8 பெயர்களில் அழைக்கப்பட்டார். மாவோயிஸ்ட் தலைவராக இருந்த கணபதி என்பவர் வயது முதிர்வு மற்றும் உடல்நல பாதிப்பு காரணமாக மாவோயிஸட் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அதன்பின் பசவராஜ் பொறுப்பேற்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com