2ஆம் விமானத்தில் அமெரிக்காவிலிருந்து 116 இந்தியர் வெளியேற்றம்!

2ஆம் விமானத்தில் அமெரிக்காவிலிருந்து 116 இந்தியர் வெளியேற்றம்!
Published on

சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்தவர்களில் 116 இந்தியரை அந்நாட்டிலிருந்து விமானம் மூலம் வெளியேற்றியுள்ளனர். அவர்கள் அமிர்தசரஸ் பன்னாட்டு விமானநிலையத்தில் நேற்று வந்திறங்கினர். 

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவிக்கு வந்ததும் பல அதிரடி மாற்றங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சட்டவிரோதமாக அந்நாட்டில் தங்கியிருக்கும் குடியேறிகளை மீண்டும் அவரவர் நாட்டுக்கே திருப்பியனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்படி, கடந்த 5ஆம் தேதி 104 இந்தியர்களை அந்நாட்டு விமானப் படை விமானத்தின் மூலம் கைகால்களில் விலங்கிட்டு இதே அமிர்தசரஸ் விமானநிலையத்தில் கொண்டுவந்து இறக்கினர்.

அவர்களைத் தொடர்ந்து நேற்று திருப்பியனுப்பப்பட்ட 116 பேரில் 65 பேர் பஞ்சாப், 33 பேர் அரியானா, எட்டு பேர் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். உ.பி., கோவா, மகாராஷ்டிரம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலா 2 பேர், இமாச்சலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றிலிருந்து தலா ஒருவர் ஆகியோரும் இவர்களில் அடக்கம்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் 18 வயது முதல் 30 வயதுவரை உள்ளோர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்ததாக இன்றும் ஒரு தொகுதியினர் வந்துசேர்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், புனித நகரான அமிர்தசரசை சட்டவிரோதக் குடியேறிகளைக் கொண்டுவந்து இறக்குவதற்கான இடமாக மாற்றுவதாக மத்திய அரசை பஞ்சாப் முதலமைச்சர் பகவத்சிங் மான் கண்டித்துள்ளார். பதிலுக்கு பா.ஜ.க.வும் ஆம் ஆத்மி முதலமைச்சர் இதில் அரசியல் செய்வதாகக் குறைகூறியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com