தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் காவல்துறை நடத்திய 3 துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 6 பேரை சுட்டுப் பிடித்துள்ளனர்.
கடலுார் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில், திருடன் ஸ்டீபன் போலீசாரை கண்டதும் தப்பியோடினான். அவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இவன் சிதம்பரம் அருகே 10 சவரன் நகை, லேப்டாப், ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை திருடி உள்ளான். இவன் திருடப்பட்ட நகைகளை சித்தாலபாடி சாலை ஓரம் முட்புதரில் பதுக்கி வைத்துள்ளான்.
நகைகளை மீட்க சென்ற போலீசாரை மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கி விட்டு ஸ்டீபன் தப்பி ஓட முயற்சி செய்தான். அப்போது போலீசார் திருடனை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இதில் கால் முட்டியில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
ஸ்டீபன் மீது குமரி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், திருநெல்வேலியில் நிலப் பிரச்னை காரணமாக ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் ஜாகீா் உசேன் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முகமது தெளஃபிக் என்பவரை நெல்லை போலீசார் நேற்று பிற்பகல் சுட்டுப் பிடித்தனர்.
அதேபோல், சேலத்தைச் சேர்ந்த ரெளடி ஜானை, ஈரோட்டில் வெட்டிக் கொலை செய்த 4 பேர் தப்ப முயன்றபோது, அவர்களின் காலில் சுட்டுக் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.