டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாட்டா பவர் TATA Power Ltd., காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைத் தணிப்பதற்கு அவசியமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் துறையில் முதலீடு மேற்கொள்வதற்காக 2022-ஆம் ஆண்டு ஜுலை மாதம், முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது கூடுதலாக முதலீடு மேற்கொள்வதாக இரண்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொண்டது.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 3,800 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இத்திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, உற்பத்தியையும் தொடங்கி வைத்தார்.
பின்னர், தொழிற்சாலையைப் பார்வையிட்டு, அங்கு பணிபுரியும் பெண் பணியாளர்களிடம் உரையாடி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
மேலும், தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த சோலார் பேனலில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “வாழ்த்துகள்” என்று எழுதி கையொப்பமிட்டார்.
பெண்களுக்கு 80 சதவிகித வேலைவாய்ப்பு என்பது மட்டுமின்றி, பெண்களுக்கு தங்கும் விடுதி வசதிகளும் அளிக்கப்படவுள்ளது இத்திட்டத்தின் சிறப்பம்சம்.
டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகரன் காணொலிக் காட்சி வாயிலாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
விக்ரம் சோலார் லிமிடெட் தொழிற்சாலை அடிக்கல் நாட்டு விழா
அதிக திறன் கொண்ட சோலார் PV உற்பத்தியில் நிபுணத்துவம் பெற்ற விக்ரம் சோலார் லிமிடெட், இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனமாகும். தமிழ்நாட்டில் ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் அமைக்கப்பட்ட 1.3 GW உற்பத்தித்திறன் கொண்ட இதன் ஆலை 2021-ஆம் ஆண்டு ஜுலை மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 2574 கோடி ரூபாய் முதலீட்டில், 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 3 GW solar Cell மற்றும் 6 GW Module உற்பத்தித்திறன் கொண்ட ஆலை அமைப்பதற்கு முதலமைச்சரால் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.