ஆவின் 5 லி. பால் விலை ரூ.10 உயர்வு!

ஆவின் பால்
ஆவின் பால்
Published on

ஆவினின் பச்சை நிற பாக்கட் 5 லிட்டர் பால் விலை பத்து ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

மாநிலம் முழுவதும் இருந்து பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மூலமாக, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையமான ஆவின் அன்றாடம் பாலை கொள்முதல் செய்து, பதப்படுத்தி வினியோகம் செய்துவருகிறது. நாளுக்கு சராசரியாக 36 இலட்சம் லிட்டர் பாலைக் கொள்முதல் செய்து, 30 இலட்சம் லிட்டர் பாலை மக்களுக்கு வழங்கிவருவருகிறது.

பொதுவாக, நகர்ப்புறங்களில் பாக்கட்டுகளில் அடைக்கப்பட்ட பாலே அதிகமாக விற்கப்படுகிறது. இதில் பச்சை நிற பாக்கட்டில் விற்கப்படும் பாலானது அரை லிட்டர், ஒரு லிட்டர், 5 லிட்டர் என மூன்று வகையாக விற்கப்படுகிறது.

கடைசியாக, கடந்த 2021 மே 16ஆம் தேதியன்று ஆவின் பால் விலை மாற்றப்பட்டது. அதையடுத்து இரண்டாவது முறையாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் குறிப்பிட்ட ரக பாலுக்கு மட்டும் விலை உயர்த்தப்பட்டது.

முன்னதாக, அரை லிட்டர் பச்சை பாக்கட் பாலின் விலை லிட்டருக்கு 47 ரூபாயிலிருந்து 44 ரூபாயாகக் குறைக்கப்பட்டது. 5 லிட்டர் பாலின் விலை 225 ரூபாயிலிருந்து 210 ரூபாயாகக் குறைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, 2022 நவம்பர் 5ஆம் தேதி அன்று, நிறைகொழுப்புப் பாலானது அரை லிட்டர் விலை 6 ரூபாயும், டீமேட் பாலின் விலை 4 ரூபாயும் ஒரு லிட்டர் பாலின் விலை 11 ரூபாயும் உயர்த்தப்பட்டது.

தற்போது பச்சை நிற பாக்கட் பாலின் விலை 22 ரூபாயாக இருக்கும்நிலையில், 5 லிட்டர் பால் 210 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில் பத்து ரூபாய் விலை அதிகரிக்கப்பட்டு இன்று முதல் 220 ரூபாய்க்கு விற்கப்படும் என ஆவின் நிர்வாகம் மண்டல அலுவலகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com