5 பேரை பலிகொண்ட சட்டவிரோத குவாரி- அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை?

5 பேரை பலிகொண்ட சட்டவிரோத குவாரி- அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை?
DELL
Published on

சிவகங்கை/ மதுரை மாவட்ட எல்லையில் கீழவளவு அருகில், சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டை கிராமத்தில் மேகா ப்ளூ மெட்டல் கல் குவாரி சட்ட விரோத வெடி மருந்து பயன்படுத்தி வெடி வைத்ததில் 5 பேர் படுகொலையாகி உள்ளனர் என்றும் இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. 

”கல் குவாரிகளில் உணவு இடைவேளை நேரமான 01.00 - 02.00 மணிக்கு மட்டுமே வெடி வைக்க வேண்டும் என்ற விதியை மீறி காலை சுமார் 10.00 மணிக்கு வெடிவைத்தும், ஒவ்வொரு வெடியும் தனித்தனியாக 28 வினாடி இடைவெளியில் வெடிக்க கூடிய, நாணல் வெடிகளை (ANEL ED) மட்டும், மட்புல் (MATFUL) முறையில் , வெடிவைத்த குழிக்கு மேல் ஈர மணமூட்டை அடுக்கி/அதன் மீது சாக்கு அல்லது தார்ப்பாய் போட்டு/ அதன் மீது டிராக்டர் டயர் போன்ற கனமான பொருட்களை வைத்து மட்டுமே, அதிர்வு ஏற்படாத வகையில் வெடி வைக்க வேண்டும் என்ற எந்த அரசின் விதிமுறையும் பின்பற்றாமல், அரசின் அங்கீகாரம் பெற்ற வெடிவைப்பாளரை (BLASTER) வைத்து வெடிக்காததால் சட்ட விரோத வெடிகளை கொண்டுவந்து பயன்படுத்தியதால்தான் மேகா புழு மெட்டல் கல்குவாரியில் இந்த வெடிச்சம்பவமும், படுகொலையும் நிகழ்ந்துள்ளது. இது விபத்தல்ல, குவாரி உரிமையாளர்களின் லாப வெறிக்கு பலரும் படுகொலையாகி உள்ளனர்.

மேலும் கல்குவாரிகளில் எந்தவிதமான மண்/கல் சரிவும் ஏற்படாமல் இருக்கும் வகையில், சுரங்கத் திட்டத்தில் (MINING PLAN) பெஞ்ச் முறையில் (BENCH METHOD) 5 மீட்டர் நீளம் × 5 மீட்டர் அகலம் × 5 மீட்டர் உயரம் என அமைத்து செயல்படுவோம் என தெரிவித்துவிட்டு, அவ்வாறு பெஞ்சு முறையில் செயல்படாமல் நெத்து குத்தாக/ நேருக்கு நேராக கற்களை வெட்டி எடுத்த காரணத்தினால் தான் சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டை மேகா ப்ளூ மெட்டல் கல்குவாரியில் இவ்வாறு சம்பவம் நடந்து பலரும் படுகொலை ஆகி உள்ளனர்.” என்று சட்டவிரோத கல் குவாரி எதிர்ப்பியக்கம் கூறியுள்ளது. 

”ஏற்கனவே 04-05-2022-ல் நெல்லை அடைமிதிப்பான் குளம் சேம்பர் செல்வராஜ் கல்குவாரியில் 5 பேர் கற்கள் சரிந்து நள்ளிரவில் படுகொலையானதற்கும்/ 26-04-2022ல் கரூர் குப்பம் NTC முத்துசாமி கல்குவாரியில் கற்கள் சரிந்து விழுந்து இரவு நேரத்தில் ஒருவர் படுகொலையானதற்கும் கல்குவாரியில் பெஞ்சு முறை அமைக்காததுதான் காரணம் என அரசுக்கு தெரிந்தும், சுரங்கத் திட்டப்படி பெஞ்ச் முறைப்படி குவாரி அமையாமல் இருந்ததன் மீது, இதுவரை எவ்வித நடவடிக்கையும் எந்த கல்குவாரி மீதும் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது இல்லை. தற்போது பலரும் படுகொலையான நிலையில் சில நாட்கள் மட்டும் இது தீவிரமாக பேசப்படும் பின்பு அதன் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லாது இருக்கும் என்பதுதான் நடைமுறையாக உள்ளது.

ஏடி மைன்ஸ் , மதுரை கனிமவளத்துறை மண்டல JD இணை இயக்குனர் சட்டநாதன் - வருவாய்த்துறை அதிகாரிகள் - உதவி ஆய்வாளர் முதல் காவல்துறை கண்காணிப்பாளர் வரை, சென்னை சாஸ்திரி பவனில் உள்ள ஒன்றிய அரசின் DGMS (DIRECTER OF MINES SAFETY) வரை சட்டவிரோத வெடி மருந்து பயன்படுத்தியதன் மீது இதுவரை அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைதான் என்ன? என்ற கேள்விக்கு, மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் ஆரோக்கியமான முறையில் நடவடிக்கை எடுத்ததாக எந்த தகவலும் இல்லை.

யாரோ கொள்ளை அடித்துக் கொழுக்க சட்ட விரோத வெடிமருந்தை பயன்படுத்தியதால், பலரின்படுகொலைக்கு காரணமான குவாரி உரிமையாளர், இதை தடுக்க வேண்டிய பல்வேறு துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!

ஈரோடு கோபி துறையம் பாளையம் ஈஸ்வரி லோகநாதன் கல்குவாரி 2 பேர் படுகொலை - திருப்பூர் நகரில் 4 பேர் படுகொலை - திருப்பூர் பல்லடம் வட்டம், கோடங்கிபாளையம் SG கல்குவாரியில் 2 பேர் படுகொலை - கோடங்கிபாளையம் விஜயலட்சுமி கல்குவாரியில் வெடி வெடித்து, சூலூர் ஏரோ வரை 3 கிலோமீட்டர் பாதிப்பு - கோடங்கிபாளையம் ராமகிருஷ்ணன் கல்குவாரி 880 டன் சட்ட விரோத வெடி மருந்தை வைத்து 20 லட்சம் கன மீட்டர் கற்கள் அதிகப்படியாக வெட்டி எடுத்தது கண்டுபிடிப்பு- விருதுநகர் காரியாபட்டி ஆவியூரில் 5 பேர் வெடி மருந்து குடோன் வெடித்து படுகொலை - நெல்லை ராதாபுரம் பகுதியில் சட்ட விரோத வெடி வெடித்து வீட்டிலிருந்த குழந்தை படுகொலை - திருவண்ணாமலை மாவட்டம் எடப்புதூர் கிராமம் வெடி வைத்த கல் தலையில் விழுந்து ஒரு விவசாயி படுகொலை - நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் கொண்டம நாயக்கன்பட்டியில் சட்டவிரோத வெடியால் 2 பேர் படுகொலை என எண்ணற்ற படுகொலைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சட்டவிரோத வெடியால் நடந்த பொழுதும் தமிழ்நாடு அரசு மற்றும் ஒன்றிய அரசு தரப்பில் போதுமான உரிய நடவடிக்கை இல்லை என்பதே பேரவலம்!

மேலும் பல கோடி மதிப்பில், சட்டவிரோதமாக கல்குவாரியில் கனிமங்கள் வெட்டி எடுத்ததாக அபராதம் போடப்படும் நிலையில், அந்த கற்களை வெட்டி எடுக்க சட்ட விரோதமான வெடிகள் எங்கிருந்து கொண்டு வந்து வெடிக்கப்பட்டது என்பதை மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை என்பதுதான் தமிழ்நாட்டின் அவல நிலை. சட்ட விரோத வெடி மருந்து நடமாட்டத்தின் மீது கண்காணிப்பு இல்லாத அவல நிலையே தமிழகத்தில் நிலவி வருகிறது.

பயங்கரவாதம் பற்றி பல்வேறு வகையில் பேசுகின்ற அரசுகளும், கட்சிகளும், சட்டவிரோதமான வெடிமருந்தை கடத்திக் கொண்டு வந்து கல்குவாரி உரிமையாளர்கள் பயன்படுத்துவதன் மீது, இதுவரை ஒரு முறை கூட யாரும் கண்டித்தும் நடவடிக்கை எடுக்க கோரியும் பேசியதில்லை.

சட்ட விரோதமாக கடத்திக் கொண்டுள்ளது வந்து வெடித்த வெடியின் மீது தமிழக அரசின் காவல்துறையும்/ ஒன்றிய அரசின் தேசிய புலனாய்வு முகமை (NIA) ஆகியவை உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். 

கல்குவாரி உரிமையாளர்களின் சொத்தைப் பறிமுதல் செய்து, பாதிக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு 25 லட்சம், கரூர் குப்பம் NTC கல் குவாரியில் படுகொலை ஆன தொழிலாளிக்கு வழங்கியது போல் இழப்பீடு வழங்கவேண்டும். 

தமிழ்நாட்டில் சட்ட விரோத வெடி மருந்து நடமாட்டத்தை தடுத்து நிறுத்த, போர்க்கால அடிப்படையில் அரசு செயல்படவேண்டும்.” என்றும் அவ்வியக்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com