குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்சி 35 பந்துகளில் சதம் விளாசி உலக சாதனை படைத்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்
18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஜெய்ப்பூரில் நேற்றிரவு நடந்த 47ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 209 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ரன்களும், பட்லர் 50 ரன்களும் அடித்தார்.
பின்னர் 210 ரன் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக 14 வயதான வைபவ் சூர்யவன்ஷியும், யஷஸ்வி ஜெய்வாலும் களமிறங்கினர்.
இதில் அதிரடியாக விளையாடிய சூர்யவன்ஷி வெறும் 35 பந்துகளில் சதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 166 ரன்களாக உயர்ந்த போது, சூர்யவன்ஷி பிரசித் கிருஷ்ணாவின் பந்து வீச்சில் போல்டு ஆனார். 38 பந்தில் 101 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரியும், 11 சிக்சர்கள் அடங்கும்.
முடிவில் தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 70 ரன்களுடனும், கேப்டன் ரியான் பராக் 32 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். வைபவ் சூர்யவன்ஷி ஆட்டநாயகன் விருது வென்றார்.
இந்த ஆட்டத்தில் வைபவ் சூர்யவன்ஷி சதமடித்ததும் பெவிலியனில் இருந்த சக வீரர்களும், மைதானத்திலிருந்த ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர்.
அத்துடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் வீல்சேரில் இருந்து எழுந்து பாராட்டினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.