234 தொகுதிகளிலும் விஜய்யே போட்டி என நினைத்து உழைக்க வேண்டும் என தவெக மாநாட்டில் விஜய் பேசியுள்ளார்.
தவெக 2ஆவது மாநில மாநாடு மதுரையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மாநாட்டில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: “சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியில் வரும். வேடிக்கை பார்க்க வெளியே வராது. காட்டில் பல விலங்குகள் இருக்கலாம். சிங்கம் கர்ஜித்தால் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிரும்.
மதுரை மண்ணில் வாழும் மக்கள் உணர்வுப்பூர்வமானவர்கள். சினிமாவிலும், அரசியலிலும் நமக்கு பிடித்தவர் எம்ஜிஆர். அவருடன் பழகுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவரைப் போலவே குணம் கொண்ட என்னுடைய அண்ணன் விஜயகாந்துடன் பழகுவதற்கு எனக்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது. அவரும் இந்த மதுரை மண்ணைச் சேர்ந்தவர்தான்.
நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொன்னார்கள், மாநாடு நடத்த மாட்டேன் என்றார்கள்; இப்போ பாருங்க, நான் ஆட்சியை பிடிக்க மாட்டேன் என்கிறார்கள். தமிழக அரசியலையே மாற்றும் மாநாடு இது, நாங்கள் எதிரிகள் சொல்லும் எதையும் காதில் போட்டுக்கொள்ள மாட்டோம். எல்லா கூக்குரலையும் சிரிப்போடு கடந்து வந்துள்ளோம்.
யாராலும் தடுத்து நிறுத்த முடியாத குரல் இது. இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கான வேட்டாகவும் மாறும். ஆட்சியை பிடித்துக் காட்டட்டுமா?
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்குத்தான் நமது ஆட்சியில் முன்னுரிமையே. சிறப்புத் திட்டங்கள் யாருக்கெல்லாம் தேவையே அவர்களுக்கான திட்டங்களை உருவாக்குவதுதான் நமது நோக்கம்.
இந்த பாசிச பாஜகவுடனா நேரடி அல்லது மறைமுகக் கூட்டணி வைப்பது? பாசிச பாஜகவுடன் மறைமுக கூட்டுக்கு செல்ல நாம் என்ன ஊழல் கட்சியா? நமக்கு ஒரே கொள்கை எதிரி பாஜக. ஒரே அரசியல் எதிரி திமுக.
ஒரு எம்பி தொகுதி கூட கிடைக்கவில்லை என்று தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு, கீழடியில் கிடைத்த ஆதாரங்களை எல்லாம் மறைத்துவிட்டது. மத நல்லிணக்கத்துக்கு பெயர்பெற்ற மதுரையில் இருந்து பாஜகவுக்கு சொல்வது என்னவென்றால், உங்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது, தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது, தமிழக மக்கள் எப்படி ஒட்டுவார்கள்.?
நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு சில கோரிக்கைகள் வைக்கிறேன், நமது தமிழக மீனவர்கள் 800க்கும் மேற்பட்டவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனை தடுக்க கச்சத் தீவை மீட்டுக் கொடுங்கள். நீட் தேர்வினால் நடக்கும் கொடுமைகளை சொல்ல முடியவில்லை. தயவுகூர்ந்து நீட் தேர்வை ரத்து செய்து விடுங்கள். செய்வீர்களா பிரதமர் அவர்களே...?
மனசாட்சி இருந்தால் பதில் சொல்லுங்கள் ஸ்டாலின் அங்கிள். நீங்கள் நடத்தும் ஆட்சியில் நேர்மை இருக்கா? ஊழல் இல்லாமல் இருக்கா? சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கா? பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கா? வெரி வெரி ஒர்ஸ்ட் அங்கிள்...
எதிர்க்கட்சியாக இருந்தால் கருப்பு பலூனை பறக்க விடுவது. ஆளுங்கட்சியாக இருந்தால் வரவேற்பது என இருக்கிறீர்கள்.
டாஸ்மாக்கில் மட்டுமே ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகக் கூறுகிறார்கள். பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டால் போதுமா அங்கிள். பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று கதறுவது உங்களுக்குக் கேட்கிறதா? இதில் உங்களை அப்பா என்று சொல்வதாகக் கூறுகிறீர்களே? வாட் இஸ் திஸ் அங்கிள். பெண்களுக்கு மட்டுமே, அரசு ஊழியர்களுக்கு, விவசாயிகளுக்கு மீனவர்களுக்கு என பலரையும் ஏமாற்றுகிறீர்கள். வெரி வெரி ஒர்ஸ்ட் அங்கிள்.
கட்சித் தொடங்க முடியாது என்றார்கள், தொடங்கிவிட்டோம், மாநாடு நடத்த முடியாது என்றார்கள், நடத்திக் காட்டிவிட்டோம். அடுத்து ஆட்சியைப் பிடிக்க முடியாது என்கிறார்கள். ஆட்சியைப் பிடித்துக் காட்டட்டுமா?
ஒவ்வொரு வீட்டுக்கும் போன பிறகுதான் நாங்கள் கட்சியை ஆரம்பித்திருக்கிறோம். திமுகவை 2026 தேர்தல் வீட்டுக்கு அனுப்புகிறோம்.
234 தொகுதிகளிலும் விஜய் தான் போட்டியிடப்போகிறேன். தமிழ்நாடு முழுக்க நானே வேட்பாளர் என நினைத்து நீங்கள் வாக்களிக்க வேண்டும். உங்கள் விஜய் தான் இந்த கட்சியின் சின்னம்.
அரசியலுக்கு வர முக்கியமான காரணம் நன்றிக்கடன் தான்.” இவ்வாறு விஜய் பேசினார்.