ஒவ்வொரு துபாய் பயணத்தின்போதும் ரூ. 12 லட்சம் சம்பாதித்ததாக நடிகை ரன்யா ராவ் தகவல்!

நடிகை ரன்யா ராவ்
நடிகை ரன்யா ராவ்
Published on

நடிகை ரன்யா ராவ் மீதான தங்கக் கடத்தல் வழக்கில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நேற்று பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இவர், ஒவ்வொரு துபாய் பயணத்தின்போதும் ரூ.12 லட்சம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது.

கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்தவர் நடிகை ரன்யா ராவ்(32). கர்நாடக போலீஸ் டிஜிபி ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகளான இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘வாகா’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். அவர் 14.8 கிலோ தங்க நகையை மறைத்து எடுத்து வந்ததால் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவரிடம் விசாரித்த போது, தனது தந்தை ராமச்சந்திர ராவ் கர்நாடக போலீஸ் டிஜிபி என கூறினார். இருப்பினும் அதிகாரிகள் அவரை விசாரித்த போது தங்கம் கடத்தியது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அதிகாரிகள் ரன்யா ராவிடம் நேற்று 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, ரன்யா ராவ் வணிக நோக்கத்துக்காக துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தேன் என்று கூறியதாக தெரிகிறது. கடண்ட ஒரு வருடத்தில் மட்டும் 30 முறை துபாய்க்கு சென்று வந்துள்ளார். கடந்த 15 நாட்களில் 4 முறை அவர் துபாய் சென்று வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு பயணத்தின்போதும் ரூ. 12 லட்சத்திலிருந்து 13 லட்சம் வரை சம்பாத்துள்ளார். தங்கத்தை பெல்ட், பை, உடைகளில் தங்கம் கடத்தி வந்ததாக ரன்யா ராய் கூறியுள்ளார்.

இதனிடையே வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நேற்று பிற்பகலில் பெங்களூருவில் உள்ள நடிகை ரன்யா ராவின் வீட்டில் சோதனை நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நடந்த சோதனையில், அவரது வீட்டில் இருந்து ரூ.2.67 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றினர்.

அதேபோல ரகசிய லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.17 கோடி மதிப்பிலான சொத்துக்களின் ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நடிகை ரன்யா ராவின் தந்தை டிஜிபி ராமசந்திர ராவ் தனக்கும் ரன்யாவுக்கும் எந்த தொடர்பும் உல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com