மலையாள நடிகர் விநாயகன் மதுபோதையில் அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக திட்டும் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விநாயகன். இவர், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும், இவர் தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் விநாயகன் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் அரைகுறை ஆடையுடன் நின்று கொண்டு ஆபாசமாகத் திட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அவரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் புகார் செய்யவில்லை என்றும், புகார் செய்தால் நடிகர் விநாயகன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொச்சி போலீசார் தெரிவித்தனர்.
நடிகர் விநாயகன் அடிக்கடி ஏதாவது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். கடந்த சில வருடங்களுக்கு முன் கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஐதராபாத் விமான நிலையத்தில் விமான நிறுவன ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் இவரை கைது செய்தனர்.