அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்!

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி
Published on

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023ஆம் ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்கு மேலாகச் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

இருப்பினும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் சேர்த்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. முதற்கட்டமாக இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 150 பேருக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அதன்படி, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆஜரானார். இதையடுத்து, வழக்கு விசாரணையை பிப்ரவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, அன்றைய தினம், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அடுத்த 150 பேருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அமலாக்கத்துறை சார்பாக வழக்கறிஞர் என்.ரமேஷ் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் மற்றும் முன்னாள் உதவியாளர் சண்முகம், அரசு அதிகாரிகள் உட்பட 13 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com