‘அ.தி.மு.க. அடிமை மாடல்; பா.ஜ.க. பாசிச மாடல்’

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Published on

அதிமுக அடிமை மாடல் அரசு, பாஜக பாசிச மாடல் அரசு என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார்.

திருவண்ணாமலை திமுக வடக்கு மண்டல பயிற்சி பாசறைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: “சில கட்சிகள் பூத் கமிட்டி முகவர்கள் கூட இல்லாத நிலையில் உள்ளன. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி.

பாஜக அரசு பாசிச மாடல் அரசு. அதிமுக அரசு அடிமை மாடல் அரசு. தமிழகத்துக்கான நிதி உரிமை பறிக்கும் வகையில் மத்திய பாஜக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஓரணியில் தமிழ்நாடு என்ற பேரணியில் முழுமையாக முடித்து விட்டாலே வரும் சட்டமன்ற தேர்தலில் நமக்கு வெற்றி உறுதியாகும். இதன் மூலம் கடந்த பத்து நாட்களில் மட்டும் 91 லட்சம் உறுப்பினர்களை திமுகவில் சேர்த்துள்ளோம். இதையெல்லாம் பார்த்து தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பயம் ஏற்பட்டுள்ளது. பாஜகவோடு எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்று கூறிவிட்டு டெல்லியில் நான்கு கார்கள் மாறி மாறி சென்று கள்ளக் கூட்டணியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார்.

தமிழகத்தில் கூட்டணி அரசு தான் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமி அப்படி இல்லை என்று கூறுகிறார். இதனால் அவர்களிடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இப்படியே இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டிருந்தால் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி ஒரு தொகுதிகள் கூட வெற்றி பெறாமல் டெபாசிட் இழக்கும். அண்ணா பெயரில் தொடங்கிய அதிமுக என்ற கட்சியை பாஜகவிடம் அடமானம் வைத்ததை பார்த்து தமிழகமே சிரித்துக் கொண்டிருக்கிறது.

இந்து சமய அறநிலையத்துறை நிதியில் கல்லூரி கட்டினால் ஏன் எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் வருகிறது. இந்து சமய அறநிலையத் துறையே இருக்கக் கூடாது என்று கூறும் பாஜகவுடன், அதிமுக கூட்டணி வைத்ததால் எடப்பாடி பழனிசாமி ஒரு முழு சங்கியாக மாறி உள்ளார். எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் போது வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டையுடன் ஆரம்பித்தார். ஆனால், தற்போது காவிமயமாக காட்சியளிக்கிறார். தமிழகத்தில் பாஜகவுக்கு பாதை அமைத்துக் கொடுக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி கனவு காண்கிறார். அதற்கு தமிழக மக்கள் என்றும் அனுமதியளிக்க மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com