'2026 சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்!' - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
Published on

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், சேலம், நெடுஞ்சாலை நகரில் அதிமுக மாநகர் மாவட்ட கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: "அதிமுக கூட்டணி ஒற்றுமையாக வலுவாக இருக்கின்றது. வருகின்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும்.

திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று அனைத்து மக்களும் முடிவெடுத்துவிட்டனர். மக்களுடைய எழுச்சியைப் பார்க்கும்போது இந்த ஆட்சியில் அவர்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை.

சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது. ’உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் வேடிக்கையானது, விளம்பரம் செய்யும் மக்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இந்த நாடகம் நடத்துகின்றனர்.

நான்கு ஆண்டுகாலம் மக்களைப் பற்றி சிந்திக்காமல், தேர்தலுக்காக உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை ஊர் ஊராக கொண்டு செல்கின்றனர். அவர்களின் செல்போன் எண்ணை வாங்கி அதை திமுக ஐடி அணியிடம் கொடுக்கிறார்கள்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கின்றன, பல கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது, அதிமுக கூட்டணி பலம் வாய்ந்த வெற்றி கூட்டணியாக அமையும்.

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து துறைகளிலும் திமுக செய்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்.

தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com