“அதிமுகவினர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டது வெட்கக்கேடானது.” என்று அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்து முன்னணி சார்பில் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாஜகவின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், இந்து முன்னணி நிர்வாகிகள், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதை அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி கூறியதாவது:
“இதுவரை ராமா ராமா என்று கோஷம் போட்டவர்கள், இப்போது முருகா… முருகா என்று கோஷம் போட வைத்திருக்கிறது திராவிட மாடல் அரசு. ஆன்மிகம் இங்கு தழைத்திருக்கிறது என்பதால்தான், அவர்கள் முருகன் வேஷத்துடன் வந்துள்ளார்கள். இந்த வேடதாரிகளை மக்கள் நம்பமாட்டார்கள்.
முருகன் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளார்கள். இது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும். இது தொடர்பாக நீதிமன்றம் தாமாகவே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும்.
இந்து கோயில்களிலிருந்து இந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்று நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் பைத்தியகாரத்தனமானது. அறநிலையத்துறை இருப்பதனால்தான் ஆலயங்கள் சிறப்பாக உள்ளன.
அதிமுகவினர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டது வெட்கக்கேடானது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை வைத்துக் கொள்வதற்கே தகுதியற்றவர்களாகிவிட்டார்கள்.
திராவிடத்தை வீழ்த்துவோம் என்று சொல்லித்தான் முருகன் மாநாடு நடத்தியிருக்கிறார்கள். அவர்களின் கட்சியின் பெயரிலேயே திராவிடம் இருப்பதை எடப்பாடி பழனிசாமி தூக்கத்திலேயே மறந்துவிட்டார். பாஜகவினரின் கொத்தடிமைகள் நாங்கள் என்பதை அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கிடைத்திருக்கிற அருமையான அடிமைகள் அதிமுகவினர்.