அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது!

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு
Published on

மதுரை அலங்காநல்லூரில் 1,100 காளைகள், 900 வீரர்களுடன் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. போட்டியினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, மதுரையில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும்.

இதன்படி, பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 1,100 காளைகள் பங்கேற்றன. 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில், 19 காளைகளை அடக்கிய திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த கார்த்தி (வயது 23) என்பவருக்கு முதல் பரிசாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் மற்றும் கன்றுடன் கூடிய கறவை பசு பரிசாக வழங்கப்பட்டன. இந்த போட்டியில் மலையாண்டி என்பவரது காளை முதல் பரிசுக்கு தேர்வு பெற்றது. இந்த காளை சசிகலா பெயரில் அவிழ்க்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, நேற்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 1,100 காளைகள் பங்கேற்றன. 910 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இறுதிச்சுற்று நடந்து கொண்டிருந்தபோது, மாலை 5.45 மணி அளவில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி அத்துடன் நிறுத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

சிறந்த காளையாக சத்திரப்பட்டியை சேர்ந்த விஜய தங்கபாண்டியன் என்பவரது காளை தேர்வு செய்யப்பட்டது. அந்த காளைக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. 14 காளைகளை பிடித்து, அதிக காளைகள் அடக்கிய நத்தம் பகுதியை சேர்ந்த பார்த்திபனுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் முதல் பரிசுக்கான கார் வழங்கப்பட்டது.

இதேபோன்று, மாடுபிடி வீரர்களுக்கு டி.வி., பிரிட்ஜ், பீரோ, சைக்கிள், 2 சக்கர வாகனங்கள், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர், வேட்டி, அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது. போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்துள்ளார்.

காளைகளை பிடிக்க வந்துள்ள மாடுபிடி வீரர்கள் காலை 7.42 மணி அளவில் உறுதிமொழி ஏற்றனர். இதனை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியுள்ளன. முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. இதன்பின்னர் போட்டிக்கான காளைகள் அவிழ்த்து விடப்படும். ஜல்லிக்கட்டை முன்னிட்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

logo
Andhimazhai
www.andhimazhai.com