இளைஞர்களை ஏமாற்றுவதற்கு திமுக அரசு நடத்தும் நாடகம் தான் அனைத்துக் கட்சி கூட்டம் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் வரும் 9 ஆம் தேதி அன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்ட உள்ளதாகவும், அதில் நமது சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரையில் தெரிவித்தார்.
இந்த நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் இருக்கிறது. உண்மை நிலையை சட்டசபையில் பேசினால் வெளியே வரும் அல்லவா? மக்கள் பிரச்சனையில் எந்த பாகுபாடும் காட்டாமல் நாங்கள் குரல் எழுப்பி வருகிறோம். தேர்தலின்போது அளித்த எந்த வாக்குறுதியையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை.
நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தி.மு.க. அரசு வாக்குறுதி தந்தது. நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தங்களிடம் ரகசியம் இருப்பதாக உதயநிதி கூறினார். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குக்காக பேசிய முதலமைச்சர், தற்போது வேறு வழியின்றி அனைத்து கட்சி கூட்டம் கூட்டி உள்ளார். நீட் விவகார வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறிவிட்டு இப்போது கூட்டம் ஏன்? மக்களை ஏமாற்றுவதற்காகவே அனைத்து கட்சி சட்டமன்ற குழு தலைவர்கள் கூட்டம். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, வந்த பின்பு என இரட்டை வேடம் போடும் ஒரே கட்சி தி.மு.க. தான்." இவ்வாறு அவர் கூறினார்.