நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக விளக்கமளிக்க மத்திய அரசு தரப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெ.பி.நட்டா, ஜெய்சங்கர், கிரண் ரிஜிஜு, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக சார்பில் டி.ஆர். பாலு மற்றும் இதர கட்சியினர் கலந்துகொண்டனர்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய ராணுவம் எடுத்து வரும் நடவடிக்கைகள், தற்போதைய நிலைமை குறித்து விளக்கினார்.
கூட்டம் நிறைவடைந்து வெளியே வந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாகக் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் 'மத்திய அரசுக்கு துணையாக இருக்கிறோம் எனக் கூட்டத்தில் தெரிவித்தோம். பயங்கரவாதத்துக்கு எதிரான நடிவடிக்கை குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்த்தோம். ஆனால் அவர் வரவில்லை. முன்னர் நடைபெற்ற கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை.’ என்றார்.
அதேபோல், திமுக பொருளாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான டி.ஆர். பாலு செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “நாட்டின் பாதுகாப்பு குறித்த முக்கியமான கூட்டத்தில் பிரதமர் ஏன் பங்கேற்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியிருந்தார். எனினும் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை.
பெகல்காம் தாக்குதல் தொடர்பாக கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.