அப்பா - மகன் மோதலுக்கு நான் காரணமா...? - தற்கொலை செய்து கொள்வேன்! - ஜி.கே. மணி வேதனை!

ஜி.கே. மணி
ஜி.கே. மணி
Published on

கால சூழலால் பா.ம.க.வில் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது, ராமஸ்தாஸ் - அன்புமணி இருவரும் எப்போது சந்திப்பார்கள் என்பதே ஆவலாக உள்ளது என ஜி.கே. மணி கூறியுள்ளார்.

தைலாபுரத்தில் பா.ம.க கெளரவத் தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“பாமகவில் நெருக்கடியான காலச்சூழல் ஏற்பட்டுள்ளது. பாமகவுக்கு இது சோதனையான காலகட்டம். எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல கூடிய நிலைமையில் நாங்கள் இல்லை. 45 ஆண்டுகளாக ராமதாஸ் உடன் இருக்கிறோம். அதன்பின் அன்புமணியுடன் பயணித்து வருகிறோம். எங்களின் விருப்பமும் ஆசையும் இருவரும் ஒன்றாக இணைந்து பாமகவை கொண்டு செல்ல வேண்டும். அதனால் ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகள் வேதனை அளிக்கிறது.

ராமதாஸ், அன்புமணி எப்போது சந்திப்பார்கள் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது. ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திக்கும் போது கூட, அவரை சந்திக்க வேண்டாம் என்று கூறினேன். பாமகவில் உண்மையாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறோம். சுமூகமான சூழல் இதுவரை ஏற்படவில்லை. சில ஊடகங்களில் ஜிகே மணி தான் ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதலுக்கு காரணம் என்று சொல்கிறார்கள்.

நான் அப்படிப்பட்ட மனிதன் கிடையாது. பதவிக்கும், பணத்திற்கும் ஆசைப்பட்டால், எப்போதோ போயிருப்பேன். இவ்வளவு நேரம் அந்த செய்தியால் கண்ணீர்விட்டு அழுதேன். தூங்கி எழுந்த பின், ராமதாஸ், குடும்பம் மற்றும் கட்சியை மட்டுமே நினைப்பேன். என் உழைப்பை பற்றி ராமதாஸ், அன்புமணி ஆகியோருக்கும் நன்றாக தெரியும். பல ஆண்டுகளாக கட்சி பணியாற்றிய பாமக சிதற வேண்டும் என்று நினைப்பேனா?

பாமகவில் பொறுப்பாளர்களை மாற்றக் கூடாது என்று நேற்று வரை ராமதாஸ் உடன் பேசி கொண்டே இருந்தேன். ஜிகே மணியின் ஆழமான மனதின் ஆசையே, இருவரும் சந்திக்க வேண்டும் என்பதே.. சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். உட்கட்சி பிரச்சனையில் வெளியில் சொல்ல முடியாது. பொருளாளர் திலகபாமா குறித்து நான் எந்த புகாரும் அளிக்கவில்லை.

ராமதாஸ் மனதில் உள்ள வேதனையை என்னிடம் கூறி வருகிறார். பாமகவில் நிகழக் கூடாத சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. பாமக கட்சியின் நிலைமை சரியாகவில்லை என்றால் 2 முடிவுகளை எடுத்துள்ளேன். ஒன்று குடும்பத்தோடு தலைமறைவாவது, இன்னொன்று தற்கொலை செய்து கொள்வது என்று தெரிவித்துள்ளார்.

பொறுப்பாளர்களை நீக்க வேண்டாம் என்று ராமதாஸிடம் கூறினேன். கட்சியில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழலைத் தீர்க்க கடுமையாகப் பணியாற்றி வருகிறோம்.” என்று கூறியிருக்கிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com