கீழடி அகழாய்வு இயக்குநராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணா நொய்டாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கீழடி அகழாய்வின் அறிக்கைகள் சமீபத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. கீழடி தொடர்பாக ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தாக்கல் செய்திருந்த அந்த அறிக்கையில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி மத்திய பாஜக அரசு திருத்தம் செய்ய கோரியிருந்தது. இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கீழடி அகழாய்வு மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா தற்போது நொய்டாவுக்கு பணியிட மாற்றம் செய்து மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது.
பண்டைய கால ஆய்வு மற்றும் தேசிய நினைவுச் சின்னங்கள், தொல்பொருள்கள் அமைப்பின் இயக்குநராக அமர்நாத் ராமகிருஷ்ணா இருந்த நிலையில், இனி நொய்டாவின் தேசிய நினைவுச் சின்னங்கள், தொல்பொருள்கள் அமைப்பின் இயக்குநராக பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமர்நாத்தின் வசம் இருந்த பண்டைய கால ஆய்வுத் துறை, ஹெச்.ஏ. நாயக்கிடம் வழங்கப்பட்டுள்ளது. ஹெச்.ஏ. நாயக் ஏற்கெனவே அகழாய்வின் இயக்குநராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய தொல்லியல் துறையின் இந்த நடவடிக்கைக்கு சு.வெங்கடேசன் எம்.பி, ஆளுநர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.