ஆணவக் கொலையைத் தடுக்க சட்டம்! - தமிழ்நாடு அரசுக்கு அம்பேத்கர் பேரன் கோரிக்கை

ஆணவக் கொலையைத் தடுக்க சட்டம்! - தமிழ்நாடு அரசுக்கு அம்பேத்கர் பேரன் கோரிக்கை
Published on

தமிழ்நாடு அரசு ஆணவக் கொலைகளை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் கோரிக்கை வைத்துள்ளார்.

டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமத்துவ நாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய பிரகாஷ் அம்பேத்கர், “சாதி ஒழிப்பது என்பது வெறும் சாதியை சார்ந்தது இல்லை, அது ஒரு நாட்டை வளர்ப்பது ஆகும். அது இல்லாத காரணத்தால் தான் இந்தியா 2000 ஆண்டுகளாக வளராமல் உள்ளது.

சாதிய அமைப்பு மிருகத்தனம். அந்த சாதிய அமைப்பை அகற்றவில்லை என்றால் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட சமூகத்தை உருவாக்க முடியாது. ஏப்ரல் 14ஆம் தேதியை சமத்துவ நாளாக மாற்றியதற்காக முதலமைச்சருக்கு நன்றி கூறுகிறேன். இந்தியா இரண்டாக பிரிந்து உள்ளது. மேலே உள்ள இந்தியா, கீழே உள்ள இந்தியா. கீழே உள்ள இந்தியாவில் முற்போக்கான மாநிலங்கள், மாறிவரும் மாநிலங்கள் மற்றும் சமூகத்தின் புதிய வடிவத்தை ஏற்றுக்கொள்ளும் மாநிலங்கள் உள்ளன.

தற்போது ஆணவக் கொலை பெரிய அளவில் உருவெடுத்துள்ளது. குற்றங்கள் குறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் குறைந்த அளவில் ஆணவக் கொலை நடைபெற்று உள்ளது. ஆணவக் கொலையைத் தடுக்க எந்த ஒரு சட்டமும் இல்லை. எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணவக் கொலையைத் தடுக்க தமிழகத்தில் சட்டம் இயற்ற வேண்டும்.

தமிழ்நாடு அரசு சட்டத்தை வகுத்தால், அது மற்ற மாநிலங்கள் வழிகாட்டுதலாக இருக்கும்.” இவ்வாறு அவர் பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com