மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த வாரம் சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின் போது தமிழகத்தின் புதிய பாஜக தலைவர் யார் என்பது பற்றிய அறிவிப்பும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மேற்கொள்ள இருக்கும் வியூகம் குறித்தும் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் திமுக தலைமையில் வலுவான கூட்டணி உள்ள நிலையில், அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் தென்பட்டுள்ளன.
கடந்த வாரம் டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு பேசிய அமித்ஷா, தமிழகத்தில் 2026இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என கூறியிருந்தார். அமித்ஷாவுடனான சந்திப்பின் போது, அண்ணாமலையை பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக தலைவர்கள் வலியுறுத்தியாக சொல்லப்படுகிறது.
பாஜக தலைமையும் இதை ஏற்றுக்கொண்டு இதற்கான வேலைகளைத் தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. அண்ணாமலையும் சமீபத்திய பேட்டிகளில், தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்ட வாய்ப்பு இருக்கலாம் என்ற வகையில் பேசிவருகிறார்.
தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் வரும் 9 ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என்ற பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன.
இந்த நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 10 ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. வரும் 10 ஆம் தேதி மாலை தமிழகம் வரும் அமித்ஷா, மறுநாள் தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார் என்பதை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கான பணிகளையும் பாஜக தீவிரப்படுத்த வேண்டும் என்றும், அதற்கான வியூகங்கள் என்னென்ன என்பது தொடர்பாகவும் தமிழக பாஜக தலைவர்கள், நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தியையும் அமித்ஷா சந்திக்க இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.