அதிமுகவை அமித் ஷா கிள்ளுக்கீரையாக கருதுகிறார் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது: “நான் தான் தொடக்கத்தில் இருந்தே சொல்லி இருக்கிறேன். சொல்லிக் கொண்டு வருகிறேன். அது பொருந்தா கூட்டணி. கொள்கை அளவில் மட்டும் அல்ல. செயல் அளவிலும் கூட அவர்களால், இணக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட முடியாத அளவுக்கு, அவர்களுக்கு இடையே இடைவெளி இருக்கிறது. வெளியே நிற்கும் சில கட்சிகளை உள்ளே இழுப்பதற்காக, அமித்ஷா கூட்டணி ஆட்சி, கூட்டணி ஆட்சி என்று ஆசை காட்டுகிறார்.
அதிமுக தமிழகத்தில் ஒரு வலுவான கட்சி. ஆண்ட கட்சி. ஆனால் அந்த கட்சியின் விருப்பத்திற்கு மாறாக அமித்ஷா தன் விருப்பம்போல் கருத்துக்களை சொல்லி வருகிறார். அதிமுகவின் முன்னணி தலைவர்கள் ஒன்று கூடி, அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.
அதிமுக தரப்பிலிருந்து கூட்டணி ஆட்சி என்று அறிவித்தால் தான், அது அதிகாரப்பூர்வமானது. அமித்ஷா சொல்லிக் கொண்டிருக்கும் வரையில், அதிமுகவை அவர் ஒரு கிள்ளு கீரையாக கருதுகிறார் என்று மட்டுமே உணர முடியும்.” என்றார்.